நீட் தேர்வுக்கு தற்காலிக விலக்கு மட்டுமே; குழப்பத்தில் மாணவர்கள்?

நீட் தேர்வுக்கு தற்காலிக விலக்கு மட்டுமே, குழப்பத்தில் மாணவர்கள் படத்தின் காப்புரிமை Getty Images

நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு முறையான அவசர சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசை அணுகினால், இந்த ஒரு ஆண்டிற்கு (நடப்பாண்டு) நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ள நிலையில், இது குறித்து தமிழக மாணவர்கள் சிலர் தங்கள் கருத்துகளை பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

முன்னதாக, தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நீட் நுழைவுத் தேர்வு இல்லாமல் நடத்த அவசர சட்டம் கொண்டு வருவதற்கு, மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட்டிலிருந்து இந்த ஒரு ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரியிருந்தது என்று குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த ஆண்டில் இருந்து குழப்பம் இல்லாத வகையில் அரசு திடமான முடிவை எடுக்கும் என்றும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வுக்கு தற்காலிக விலக்கு

சென்னை வந்திருந்த மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில், தற்போதைய கல்வி ஆண்டிற்கு, அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களை பெற நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால், மத்திய அரசு அதை ஆதரிக்கும் என்று கூறினார்.

இதையடுத்து, நீட் தேர்வு விலக்கு குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த புதிய அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், நீட் தேர்வுக்கு தற்காலிக விலக்கு பெற சட்டம் கொண்டு வரப்படும் என்ற புதிய அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன.

தற்காலிக விலக்கு என்பது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீட் தேர்வைக் கொண்டு மருத்துவ கல்லுரி சேர்க்கை நடத்தப்படும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு முயற்சி செய்துவருகிறது என மாறுபட்ட அறிவிப்புகள் வெளியான காரணத்தால் சில மாணவர்கள், மருத்துவ படிப்பிற்கு பதிலாக பிற துறைகளை தேர்தெடுத்துள்ளதாககவும் கூறுகின்றனர்.

பொறியியல் படிப்புக்கு மாறிய மருத்துவ மாணவன்

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக், தொடர்ந்து வெளியான அறிவிப்புகள் தன்னை பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்க தூண்டியதாகக் கூறுகிறார்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1044/2000 மதிப்பெண்கள் மற்றும் நீட் நுழைவுத் தேர்வில் 170 மதிப்பெண் பெற்றிருந்தாலும், இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற குழப்பத்தில் தற்போது பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டதாக கூறுகிறார் அபிஷேக்.

படத்தின் காப்புரிமை Guindy Engineering College

''நீட் தேர்வின் அடிப்படையில் இடம் கிடைக்காமல் போனால் ஒரு ஆண்டு பலனில்லாமல் போகும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் எந்தத் தெளிவான அறிவிப்பும் கூறப்படவில்லை. பள்ளிகளில் நீட் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். திடீரென நீட்டை விட்டு பொதுத்தேர்வுக்கு படியுங்கள் என்று கூறினார்கள்", என்கிறார் அவர்.

''நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஒரு தனியார் கல்லூரியில் நான் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளேன். பொறியியல் பற்றி எனக்கு தெரியாது, என்ன வேலைக்குப் போகப்போகிறேன் எல்லாம் மர்மமாக இருக்கிறது,'' என்றார் அபிஷேக்.

நீட் குழப்பத்தால் ஏற்பட்ட மனச்சோர்வு

மிகவும் தயங்கியபடி பேசினார் மாணவி பிரியதர்சினி. ''நீட் தேர்வுக்கு தயாராகும் கவனத்தில், பொதுத் தேர்வுக்கு தயார் செய்யவில்லை. பின்னர், வகுப்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மதிப்பெண் குறைந்ததால், மனச்சோர்வுக்கு ஆளானேன்,'' என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முடிவாக, தற்போது பிரியதர்சினி இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதவில்லை. ''குழப்பத்துடன் இருந்தேன், நீட் தேர்வு அவசியம், அவசியமில்லை என வித்தியாசமான அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தன. அடுத்த ஆண்டு நன்றாக தயார் செய்து எழுதுவதுதான் சரி என்று தோன்றியதால், நீட் எழுதவில்லை. இப்போது நீட் தேர்வுக்கு தற்காலிக விலக்கு என்கிறார்கள், என்ன முடிவு செய்வது என்று புரியவில்லை,'' என்று தனது குழப்பத்தை விவரித்தார்.

தற்காலிக விலக்கு இன்ப அதிர்ச்சி

சிவகாசியைச் சேர்ந்த பூமலர் என்ற மாணவி, நீட் தேர்வு மதிப்பெண் குறைந்திருந்தாலும், புதிய அறிவிப்பால் தனது மருத்துவர் கனவு நிறைவேறும் என்ற உறுதியில் உள்ளார்.

''தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு என்கிறார்கள். இந்த அறிவிப்பு மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று, முடியும் வரை நிலைக்கவேண்டும். புதிய அறிவிப்பால் மகிழ்ச்சிதான். ஆனால் இத்தனை நாட்கள் பெரிய குழப்பத்தில் இருந்தேன். இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது,'' என்கிறார் பூமலர்.

லாபமீட்டும் தனியார் கோச்சிங் மையங்கள்

பிரியதர்சினி போன்ற மாணவர்களுக்கு ஆலோசனை அளித்துவரும் தன்னார்வலர் அலிபாஷா, நீட் தேர்வு தனியார் டியூஷன் நிறுவனங்கள் பணம் ஈட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு என்கிறார்.

''எதிர்கால வாழ்க்கையை மாணவர்கள் எதிர்கொள்ள பள்ளிக்கூடங்கள் தயார் செய்யவேண்டும். தற்போது உள்ள நிலையில் நுழைவுத் தேர்வு என்ற போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் அவர்கள் வழிநடத்தப்படுகின்றனர், நம் கல்விக்கூடங்களில் சமூக பங்களிப்பு என்பது முற்றிலும் காணாமல் போய்விட்டது,'' என்கிறார் அலிபாஷா.

நீட் தேர்வுக்கு பயிற்சி தருவதாகக் கூறி குறைந்தபட்சம் ரூ.15,000 முதல் ரூ.80,000 வரை தனியார் டியூஷன் நிறுவனங்கள் வசூலிக்கின்றன என்றார் அலிபாஷா.

மத்திய அரசின் நிலைப்பாடு

மாணவர்களை தகுதிபடுத்துவதற்காக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறது மத்திய அரசு.

ஆனால், மத்திய அரசின் நீட் தேர்வுக்கான இணையதளத்தில், புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பொன்மொழி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது மாணவர்களை மேலும் சிந்திக்க வைக்கிறது.

அதில் பில்கேட்ஸ், ''நான் சில தேர்வுகளில் தோற்றுப்போனேன். என் நண்பர் எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார். அவர் மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தில் ஒரு பொறியாளராக உள்ளார். நான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்