எடப்பாடி- ஓபிஎஸ் அணிகள் இணையுமா? மோதி- பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு

  • 14 ஆகஸ்ட் 2017
கோப்பு படம் படத்தின் காப்புரிமை TNDIPR

தமிழகத்தில், ஆளும் அதிமுகவில் இரு வேறு அணிகளாக செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணையக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதற்கிடையே, தமது பலத்தை கட்சியினருக்கு காட்டுவதற்காக அதிமுக (அம்மா அணி) பொதுச்செயலாளர் சசிகலாவால் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் மதுரை மாவட்டம் மேலூரில் இன்று (திங்கள்கிழமை) பொதுக்கூட்டத்தை கூட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் பன்னீர்செல்வம் சந்தித்த பிறகு, செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிப்பதைத் தவிர்த்தார்.

அப்போது பன்னீர்செல்வம், "பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்து தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். தமிழக அரசின் நிலைப்பாட்டை பிரதமரிடம் விளக்கினேன்"என்றார்.

அது பற்றி விவரிக்குமாறு செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பொதுவாக தமிழக அரசின் சூழ்நிலைகளை பற்றி பேசினோம் எனக் கூறினால், அதிலேயே அனைத்து விஷயங்களும் உள்ளன" என்று பன்னீர்செல்வம் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி அணியுடன் உங்கள் அணி இணையுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தமிழக மக்கள், அதிமுக தொண்டர்கள் ஆகியோரின் எண்ணங்கள், கருத்துகள் அடிப்படையிலேயே எனது செயல்பாடு இருக்கும் என்று கூறியிருந்தேன். அதே நிலையில்தான் எங்கள் நிலைப்பாடு தொடர்கிறது" என்றார் பன்னீர்செல்வம்.

"எந்த முடிவு எடுத்தால் தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி அணி தலைமையிலான ஆட்சி உங்களுக்கு திருப்தியாக உள்ளதா என கேட்டதற்கு, பதில் ஏதும் பன்னீர்செல்வம் தெரிவிக்கவில்லை.

கடந்த வாரம் குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்கும் விழாவில் பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது அவரது சார்பில் பிரதமர் மோதியை தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, வெங்கய்ய நாயுடு விழா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதே நாளில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து மகராஷ்டிரா மாநிலம் ஷிங்கனாபுரில் உள்ள சனீஸ்வரர் ஆலயத்தில் சனிக்கிழமை தனது ஆதரவு அணியினருடன் பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஷீரடிக்கு சென்ற பன்னீசெல்வம், சாய்பாபா ஆலயத்தில் வழிபட்டார்.

இதையடுத்து, நேற்றிரவு மீண்டும் டெல்லி வந்த பன்னீர்செல்வம், பிரதமர் மோதியை இன்று சந்தித்துப் பேசினார்.சுமார் 40 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றதாக அவரது ஆதரவாளரான மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்தார்.

தினகரனின் மதுரை கூட்டம்

பிரதமரை பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ள அதேவேளை, மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சார்பில் இன்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Image caption அதிமுக தலைமை அலுவலக தோற்றத்துடன் மேலூரில் வடிவமைக்கப்பட்ட தினகரன் ஆதரவு பொதுக்கூட்ட மேடை

இதையொட்டி மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் தினகரன் கூறுகையில், "சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சசிகலாவால் சுட்டிக்காட்டப்பட்டு பதவிக்கு வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.

அதிமுகவில் தேவையான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும், ஏறி வந்த ஏணியை எட்டி மிதித்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும் தினகரன் கூறினார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் மாநில நிதியமைச்சர் ஜெயக்குமார், "நிதானமின்றி, பக்குவற்ற முறையில் தினகரன் கருத்து வெளியிடக் கூடாது" என்று வலியுறுத்தினார்.

அதிமுகவின் இரு அணிகள் இணைய வேண்டும் என்ற முயற்சி நல்ல பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் அணிகள் இணையும் என்றும் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்