கோரக்பூர் பற்றி 'நமோ ஏப்' இல் கருத்துகளை அனுப்பலாமா?

படத்தின் காப்புரிமை Getty Images

பொது நலனுக்காக பலமுறை பகிரங்கமாக பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோதி, கோரக்பூர் குழந்தைகள் மரணங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்காததால் பொதுநலனில் அக்கறையற்றவர் என்று கூறிவிடமுடியாது.

கோரக்பூர் மரணங்கள் தொடர்பாக வருத்தங்களை யார் தெரிவித்தாலும், தெரிவிக்காவிட்டாலும், நாட்டின் முதல் பணியாளரான பிரதமர் குறைந்தபட்சம் இதற்கு வருத்தமாவது தெரிவிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறல்ல.

இந்த விவகாரம் பற்றி பிரதமர் இதுவரை என்ன கூறியிருக்கிறார்? மாநில சுகாதார இணையமைச்சர் அனுபிரியா படேல் கோரக்பூருக்கு உடனடியாக சென்று நிலைமையை மதிப்பிட வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து தான் தனிக்கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் கூறியிருக்கிறார்.

ஆனால், கோரக்பூரில் மரணங்கள் தொடர்பான செய்திகள் வெளியான பல நாட்களுக்கு பிறகும், இதுவரை பிரதமர் கவலை தெரிவிக்கவில்லை. ஆனா, ஒரு நாய்க்குட்டியின் மரணம் கூட தன்னை மிகவும் வருத்தப்படவைக்கும் என்று சொன்னவரும் இதே பிரதமர் என்பது பசுமையாக நினைவிருக்கிறது.

கோரக்பூர் பகுதியில் ஆண்டுதோறும் இந்தப் பருவத்தில் ஏற்படும் தொற்றுநோய்களால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றனர். அதை தடுப்பதில் முந்தைய அரசுகள் தவறிவிட்டன.

வருத்தம் தெரிவிப்பது தவறை ஒப்புக் கொள்வதாக இருக்கும் என்று நினைக்கிறாரோ பிரதமர்? ஆனால் வருத்தம் தெரிவிப்பதால் பிரதமரின் மனிதநேயம் பாராட்டப்படும், அவரை குற்றவாளியாக யாரும் கருதமாட்டார்கள்.

வருத்தம் தெரிவித்து பிரதமர் வெளியிடும் டிவிட்டர் செய்திகள் மிகவும் பிரபலமானவை. போர்ச்சுகலில் காட்டுத்தீக்கு பலியானவர்களுக்கு "ஆழ்ந்த இரங்கலை" பிரதமர் தெரிவித்து இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. ஏனெனில் அங்கு ஒருவாரத்தில் அவர் பயணம் மேற்கொள்ளவிருந்தார், அதனால் மனிதாபிமானத்தை வெளிக்காட்டினார்.

படத்தின் காப்புரிமை Twitter

ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஒரு நாட்டின் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் வேதனையும் தெரிவித்தால் போதுமா? ஏழை கோரக்பூர் மக்களுக்கு அது அவசியம் இல்லையா?

நாட்டின் பிரதமருக்கு ஆயிரம் முக்கியமான வேலைகள் இருக்கும், வருத்தம் தெரிவிப்பதுதான் முக்கியமா என்று கேள்வி எழுப்பினால், நிதிஷ்குமாரை பாராட்ட எடுத்துக் கொள்ளும் நேரத்தில் இரண்டு நிமிடங்களை ஒதுக்கினால் போதுமானது என்று பதில் வருமே!

கோரக்பூர் பற்றி பேசிய பிறகு, சுதந்திர தின உரையில் தாம் பேசுவதற்கான யோசனைகளையும் மக்களிடம் இருந்து பிரதமர் கேட்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோதி மட்டுமல்ல, நாட்டின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராக கருதப்படும், அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அமித்ஷா, ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே `ராணி அகல்யபாய் ஹோல்கர்` நினைவுதினத்தன்று அவருக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்துகிறார்.

இதற்கு முன்பு கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களுடன், 'வெற்றிகரமான மூன்றாண்டு நிறைவு' பற்றி மகிழ்ச்சியை உற்சாகத்துடன் பகிர்ந்துக் கொண்டார் கட்சியின் தலைவர் அமித் ஷா.

மத்திய சுகதார அமைச்சர் ஜே.பி.நட்டாவின் அதிகாரபூர்வ டிவிட்டர் ஹேண்டலில், 'பாதுகாப்பான பேறுகால திட்டம் யாருக்கானது?' என்று மக்கள் கேட்கின்றனர்.

கோரக்பூர் குறித்து பிரதமர், ஜீ செய்திகள் அல்லது ஏ.என்.ஐ எதாவது டிவிட்டர் செய்திகள் வெளியிட்டால், அதை 'ரீ-டிவிட்' அதாவது மறுபதிவிடும் வேலையை மட்டுமே மத்திய சுகாதார அமைச்சர் தவறாமல் செய்கிறார்.

படத்தின் காப்புரிமை Twitter

புதிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைவர்களை சந்திப்பதில் மும்முரமாக இருப்பதால் ஆகஸ்ட் பத்தாம் தேதிக்கு பிறகு டிவிட்டர் பக்கம் திரும்பவேயில்லை.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை மணிக்கு மேல்தான் வருத்தம் ஏற்பட்டது. 'சொல்லவொண்ணா துக்கத்தில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அவர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

கோரக்பூரில் குழந்தைகள் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில், பிரயாக் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று ரயில்வேத் துறை அதிகாரிகளிடம் கூறுவதில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரின் டிவிட்டர் ஹேண்டில் பிஸியாகவே இருந்தது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டிற்கு சென்று உணவுண்டது, மத்திய தொலை தொடர்பு செயலரை சந்தித்தது, வர்த்தக சபையில் உரையாற்றியது, அமித் ஷா, வெங்கய்ய நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவிப்பது குறித்த செய்திகளும் அவற்றில் அடங்கும்.

முதலமைச்சர் தனது துக்கத்தை தெரிவிப்பதற்கு சுமார் இரண்டு மணி நேரம் முன்னதாகவே அதாவது காலை ஏழேகால் மணியளவில் மாநில துணை முதலமைச்சர் தினேஷ் ஷர்மா, கோரக்பூர் விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆறுதல் கூறியிருந்தார்.

உத்தரப்பிரதேசத்தின் மற்றொரு துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மெளர்யாவோ, டிவிட்டரில் தீவிரமாக கருத்துகளை தெரிவித்துவருகிறார். 2022 ஆம் ஆண்டிற்குள், ஏழ்மையில்லா, ஊழலில்லா, கல்வியறிவுமிக்க புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும் என்ற உறுதிமொழியை சொல்லும் தனது பழைய டிவிட்டர் செய்தியை 'பின் டு டாப்' என மாற்றியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Twitter

அதன்பிறகு சர்வதேச விஞ்ஞானி விக்ரம் சாராபாயை பாராட்டும் வேலையில் இறங்கிவிட்டார். கோரக்பூரில் அதிக அளவு குழந்தைகள் இறந்த வியாழன் மற்றும் வெள்ளியன்று, 'கங்கா கிராம் மாநாடு மற்றும் தூய்மை ரதம்' நிகழ்ச்சியில் 'சகோதரி உமா பாரதி' உடன் இணைந்து பச்சைக் கொடி காட்டவேண்டியிருந்தது.

பிரச்சனை தீவிரமாக இருந்த நிலையிலும், துணை முதலமைச்சர் தனது வேலையில் மும்முரமாகவே இருந்தபோதும், வேதனையை தெரிவிக்க இரண்டு நிமிடங்கள் அவருக்கு கிடைத்தது. கோரக்பூரை பற்றி முக்கியமானாவர்கள் டிவிட்டர் செய்தால் அதை அவர் மறு டிவீட் செய்ய தவறியதே கிடையாது.

மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத் சிங் ஆகஸ்ட் 12ம் தேதி காலை எட்டு மணியளவில் முதலமைச்சரை சந்தித்த பிறகு ஆஷுதோஷ் டண்டனுடன் கோரக்பூர் கிளம்பிச்சென்றார். 'ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகள் இறப்பது இயல்பானதுதான்' என்று அதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

அவருக்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லையோ என்னவோ?

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் ஹேண்டிலை பார்த்தால், அதில் கோரக்பூரில் எந்த பிரச்சனையும் இருப்பதாகவே தெரியவில்லை.

படத்தின் காப்புரிமை Twitter

டிவிட்டரில் வெளியாகும் செய்திகளை வைத்து அரசின் செயல்பாடுகளை மதிப்பிடக்கூடாது என்பது சரியே. ஆனால், தற்போதைய அரசு டிவிட்டரோடு ஆழ்ந்த பிணைப்பை கொண்டுள்ளது.

ஒரு டிவிட்டர் செய்தியில் குழந்தைகளின் 'டைப்பர்' பற்றி ரயில்வே துறை அமைச்சர் பேசுகிறார், வெளிநாட்டில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை தாயகத்திற்கு கொண்டு வருவதைப் பற்றி வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகிறார். அரசின் செயல்பாடுகளை பற்றி தினமும் டிவிட்டரில் செய்திகள் வெளியிடுகிறார்கள் முக்கிய பதவியில் உள்ளவர்கள்.

டிவிட்டர், சமூக ஊடகங்கள் கூர்மையான இருமுனை கொண்ட கத்தியைப் போன்றவை. விளம்பரத்திற்கும், பிரசாரத்திற்கும் பயன்படுத்தப்படும் அதுவே, கள்ள மெளனத்தையும் சுட்டிக்காட்டி எதிர்மறையான விமர்சனத்தையும் ஏற்படுத்தும்.

கூடவே ஒரு தகவல்: ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை மணி வரை வெளியான டிவிட்டர் ஹேண்டில்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்