'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுங்கள்': டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சசிகலா தலைமையில் இயங்கிய அ.தி.மு.க. அம்மா அணி, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலும் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையிலும் இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி பொதுக்கூட்டங்களை நடத்தப்போவதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

அதன்படி மதுரை மாவட்டம் மேலூரில் இன்று முதல் கூட்டத்தை நடத்திய தினகரன், ஆளும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பைக் கடுமையாக தாக்கிப் பேசினார்.

மதுரையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்திற்கு பல சட்டமன்ற உறுப்பினர்களை வரவிடாமல் தடுத்துவிட்டதாக குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், பொதுக்கூட்டத்திற்கான அனுமதியையே நீதிமன்றம் சென்றுதான் வாங்க வேண்டியிருந்ததாகக் கூறினார்.

மேலும் வெளியூர்களில் இருந்து பேருந்தில் இந்தக் கூட்டத்திற்கு சென்றால், பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மிரட்டியதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் வேலையைவிட்டு நீக்கப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.

படத்தின் காப்புரிமை AIADMK

சசிகலா நினைத்திருந்தால், முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த அன்றே அவர் முதல்வராகியிருக்க முடியும் என்றும், ஆனால், அப்படிசெய்யவில்லையென்றும் தெரிவித்த தினகரன், சசிகலா சிறை சென்றபோது நினைத்திருந்தால் தன்னையோ தன் குடும்பத்தினரையோ முதல்வராக்கியிருக்க முடியுமென்றும் தாங்கள் பதவிக்கு ஆசைப்படாதவர்கள் என்பது தெரியாமல் எடப்பாடி அணியினர் உளறுவதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.

சசிகலாவால் பதவிக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்கள்தான், பிறகு அவரது பேனர் மற்றும் படங்களை தலைமைக் கழகத்திலிருந்து அகற்றிவிட்டார்கள் என்றும் கூவத்தூரிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தால், இன்றைக்கு பதவியில் இருப்பவர்கள் காரில் சென்றிருக்க முடியுமா என தினகரன் கேள்வியெழுப்பினார்.

'இரட்டை இலைச் சின்னத்தை மீட்க வேண்டிய கடமை எனக்குண்டு'

நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார் செய்ய வேண்டிய கடமையும் இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக தெரிவித்த தினகரன், தன்னைப் பார்த்து எடப்பாடி பழனிச்சாமி 420 எனக் கூறுவதாகத் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் உட்கார்ந்துகொண்டு கட்சியை நடத்த முடியாது என்று தெரிவித்த தினகரன், தாங்கள் ஆட்சியைக் கலைக்க மாட்டோம் எனவும் தங்களுக்கு கட்சிதான் பெரிது எனவும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கடத்தி ஒளித்துவைத்தவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

தற்போது பதவிகளில் இருப்பவர்களை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்திவைத்ததே தான்தான் என்றும், 23 வயதிலிருந்து ஜெயலலிதாவின் கூட்டங்களில் பங்கேற்று அவருக்கு உதவியாளராக இருந்திருப்பதாகவும் தினகரன் கூறினார்.

Image caption தினகரனின் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதி

தினகரனின் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு குறிப்படத்தக்க வகையில் தொண்டர்கள் கூடியிருந்தனர். இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய தினகரன், அரசு மதுரையில் நடத்திய கூட்டத்திற்கு இந்த அளவுக்கு கூட்டமும் எழுச்சியும் இருந்ததா என்று கேள்வியெழுப்பினார்.

'தொண்டர்கள்தான் முக்கியம்'

கட்சியை யாராவது கொல்லைப்புறம் வழியாக அபகரிக்க நினைத்தால் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட தினகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி அல்ல என்றும் தொண்டர்கள்தான் மிக முக்கியம் என்றும் கூறினார்.

இறுதியாக, ஓ. பன்னீர்செல்வம் தரப்பையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார் தினகரன்.

தர்மயுத்தம் என்று சொன்னவர்கள் தர்மத்தோடுதான் யுத்தம் செய்கிறார்கள் என்றும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தற்போது நீதி விசாரணை கேட்பவர்கள்தான் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது முக்கியமான பொறுப்புகளில் இருந்தார்கள் என்றும் தெரிவித்த தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடக்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.

தொண்டர்கள் இல்லாத பத்து பேர் கட்சியை ஏதும் செய்துவிட முடியாது என்றும் தினகரன் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க., ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா தலைமையிலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் இரண்டாக உடைந்தது. சசிகலா சிறைசென்று, எடப்பாடி முதல்வரானதும் சிறிதுகாலம் தினகரன் தரப்புடன் இணக்கமாக இருந்த எடப்பாடி தரப்பினர், பிறகு தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கிவைப்பதாக அறிவித்தனர்.

தற்போது எடப்பாடி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துவருவதாக சொல்லப்படும் நிலையில், கட்சிக்குள் தன் பிடியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு தினகரன், மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்தார்.

முதல் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. தினகரன் தரப்புக்கு சுமார் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 15-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், சுமார் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தற்போதைய சட்டமன்றத்தில் அ.தி.மு.கவுக்கு 135 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் 12 பேர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தினகரனுக்கு சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்