டெல்லி: தடுப்புக் காவலில் அய்யாக்கண்ணு!

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவையும், அவரது ஆதரவாளர்களையும் காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு தடுப்புக் காவலில் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இந்திய சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜந்தர் மந்தர் பகுதியை நகர காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து அந்த பகுதியில் போராட்டம் நடத்திய அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கேட்டுக் கொண்டனர்.

ஆனால், அய்யாக்கண்ணு குழுவினர் அந்த பகுதியில் இருந்து செல்ல மறுத்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து மேலதிகாரிகளுடன் பேச வேண்டும் என்று அய்யாகண்ணுவை காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் அப்போது அவருடன் இருந்த மற்ற விவசாயிகள் மற்றும் ஆதரவாளர்கள் சுமார் 15 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்று அய்யாக்கண்ணு குழுவைச் சேர்ந்த பிரகாஷ் தெரிவித்தார்.

இதுபற்றி மத்திய டெல்லி சரக காவல்துறை உதவி ஆணையர் வேத் பூஷண் பிபிசி தமிழிடம் கூறுகையில், "பாதுகாப்பு காரணங்களுக்காக ஜந்தர் மந்தரில் இருந்த அய்யாக்கண்ணுவும், அவரது ஆதரவாளர்களும் திங்கள்கிழமை இரவு முதல் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

சுதந்திர தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை 10.30 மணிக்கு முடிவடைந்தவுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், அனுப்பி வைக்கப்படுவர் என்றார் வேத் பூஷண்.

அய்யாக்கண்ணு குழுவினருடன் மொத்தம் 32 பேர் இருந்ததாகவும் அவர்களில் சிலர் மட்டுமே காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை காலையில் விவசாயிகளில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்த முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்