கோரக்பூர் சோகம்: '8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் 8 நாள் ஆயுள்'

கோரக்பூர் படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA
Image caption பிரம்தேவ் யாதவின் இரட்டைக் குழந்தைகள்

கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பலி கொடுத்த ஒரு குடும்பத்தின் சோகம் இது.

''ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. தினமும் இரண்டு சிரிஞ்ச் நிறைய ரத்தத்தை மருத்துவர் எடுப்பார். இறுதியில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டதும், எங்கள் ரத்தத்தை கொடுத்தும் குழந்தைகளை காப்பாற்றமுடியவில்லை.''

கோரக்பூரின் பாகாகாடா கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரம்தேவ் யாதவ் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியன்று இரவு நடந்த நிகழ்ச்சிகளை கண்ணீர் மல்க நினைவுகூர்கிறார்.

முப்பது வயதான அவருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

பிறந்த அடுத்த நாள் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் பிரம்தேவ்.

"தனியார் மருத்துவமனையில் அதிக செலவாகும், அதற்கு வசதியில்லை என்பதால் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றோம். அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார்கள். பெற்றோர்களை கூட குழந்தைகளிடம் நெருங்க விடவில்லை" என்கிறார் பிரம்தேவ்.

''கேட்டாலும் எந்த தகவலும் சொல்லமாட்டார்கள். ஒன்பதாம் தேதி இரவு எட்டு மணி சுமாருக்கு என்னிடம் வந்த மருத்துவர், "உங்கள் ஆண் குழந்தை இறந்துவிட்டது, பெண் குழந்தையின் நிலைமை மோசமாக இருக்கிறது" என்று சொன்னார்.

படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA
Image caption பிரம்தேவ் யாதவ்

''எல்லா குழந்தைகளுக்கும் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது''

குழந்தை இறந்ததற்கான காரணத்தை மருத்துவர் சொல்லவில்லை, சில மணி நேரங்களில் பெண் குழந்தையும் இறந்துவிட்டதாக கூறப்பட்டது என்கிறார் பிரம்தேவ்.

பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்பது மற்றும் பத்தாம் தேதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நிலைமையை அன்று நேரில் சென்று மதிப்பிட்டார். முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான அங்கிருந்து அவர் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் கிட்டத்தட்ட 150 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர், எல்லா குழந்தைகளுக்கும் ஆக்சிஜன் பைகள் பொருத்தப்பட்டிருந்தன.

"ஆக்சிஜன் விவகாரம் பற்றி எங்கள் யாருக்கும் எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், என் மகளின் வாயில் இருந்து ரத்தம் வடிந்திருந்தது. மூச்சுத் திணறலால் மரணம் ஏற்பட்டது என்பதை புரிந்துக் கொண்டேன். அழுதுகொண்டே குழந்தைகளை சடலங்களாக வீட்டிற்கு தூக்கிச்சென்றோம்" என்று சொல்லி விசும்புகிறார் பிரம்தேவ்.

படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA

''வசைபாடும் மருத்துவர்''

பிரம்தேவின் நான்கு சகோதரர்களும் விவசாயம் செய்தும், பிற சில வேலைகள் செய்தும் வாழ்க்கையை நடத்துகின்றனர். குழந்தைகளின் இழப்பை தாங்கிக் கொள்ளமுடியாத பிரம்தேவின் மனைவி அதிச்சியில் இருந்து மீளவில்லை.

''எட்டு ஆண்டு தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளைகளை எட்டு நாட்களில் பறிகொடுத்துவிட்டோம். குழந்தைகளுடன் இரண்டு நாட்கள்கூட முழுமையாக இருக்கவில்லை'' என்று புலம்புகிறார் பிரம்தேவின் தாய்.

''குழந்தைகளுக்கு முறையான சிகிச்சையளிக்காத மருத்துவர்கள், குழந்தைகளை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. எங்களிடம் மிகவும் மோசமாக நடந்துக் கொண்டார்கள், எதாவது கேட்டால் கண்டபடி திட்டுவார்கள், என் மருமகள் பித்துப் பிடித்தவள் போல் வெறித்த பார்வையுடன் உட்கார்ந்திருக்கிறாள், யாருடனும் பேசுவதேயில்லை'' என்கிறார் பிரம்தேவின் தாய்.

படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA
Image caption மருத்துவமனை நிர்வாகத்தை குறைகூறும் பிரம்தேவின் தாய்

''குழந்தைகளின் இறப்புக்கு காரணம் தெரியவில்லை''

கோரக்பூர் மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளின் மரணம் பற்றிய செய்தி பரவலான பிறகு அரசியல் கட்சித் தலைவர்களின் கவனம் அங்கு குவிந்தது.

இரண்டு நாட்களுக்கு பிறகு அங்கு வந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில தலைமைச் செயலரின் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கவில்லை.

கோரக்பூரின் அக்கம் பக்கம் உள்ள மாவட்டங்களைத் தவிர பிகாரின் பல மாவட்டங்களில் இருந்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளையழற்சி (Encephalitis) நோய்க்கான சிகிச்சைக்காக மக்கள் இங்கு வருகின்றனர்.

குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் மூளையழற்சி நோயா அல்லது வேறு ஏதாவதா என்பதும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்கிறார் பிரம்தேவ்.

படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA
Image caption பிரம்தேவ் யாதவின் கிராமம்

பதில் அளிக்கப்போவது யார்?

பிபிசியிடம் பேசிய பிரம்யாதவ், ''இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அருகிலேயே புதைத்துவிட்டோம். தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைகளுக்கும் நாங்கள் தயார்'' என்கிறார்.

ஆக்சிஜன் சப்ளைக்கு பணம் வழங்கப்படாததால், சம்பந்தப்பட்ட நிறுவனம் சப்ளையை நிறுத்திக் கொண்ட்தால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்துபோனதாகவும், மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும் பல கேள்விகள் எழுப்படுகின்றன.

விவகாரத்தை விசாரிக்கும் மாநில முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் நிலைமை மேம்படலாம்.

ஆனால், பிஞ்சுக் குழந்தைகளை அநியாயமாக பலி கொடுத்திருக்கும் குடும்பத்தினரின் துக்கத்தை யாரால் ஈடு செய்யமுடியும்? அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போவது யார்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்