தினகரனின் மதுரை பொதுக்கூட்டம்: முன்னாள் முதல்வர்களுக்கு சவால்?

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுங்கள்

மதுரை மாவட்டம் மேலூரில் தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையில் தொண்டர்கள் திரண்டாலும், சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்களையே அவரால் அங்கு வரவழைக்க முடிந்திருக்கிறது. அ.தி.மு.க. அணிகள் ஒன்றிணையும்போது, அவரது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை இது எழுப்பியிருக்கிறது. 

திங்கட்கிழமையன்று மாலையில், மேலூரில் தினகரன் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கூட்டத்திற்கு சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர்வரை திரண்டிருந்தார்கள். பிற்பகலுக்கு மேல், மைதானத்திற்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அங்கே கூட்டம் திரண்டிருந்தது.

மாலையில் மைதானத்திற்குள் நுழைந்த தினகரனின் கார், மேடையை அடைய சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது.

தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு  விழாக் கூட்டத்திற்கு மாணவர்களைத் தவிர, பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்ட முடியாத நிலையில், தினகரனுக்கு இந்தக் கூட்டம் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

அ.தி.மு.க. அம்மா அணி, தினகரனை ஒதுக்கிவைக்க ஆரம்பித்த பிறகு 37 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை நேரில் வந்து சந்தித்தனர். இவர்கள் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களாகவே பார்க்கப்பட்டனர்.

ஆகவே, இந்தக் கூட்டத்தில் குறைந்தது 35 சட்டமன்ற உறுப்பினர்களையாவது திரட்டி, தனது பலத்தை நிரூபிக்க எண்ணியிருந்தார் டிடிவி தினகரன். ஆனால், இந்தக் கூட்டத்திற்கு 20 சட்டமன்ற உறுப்பினர்களே வந்திருந்தனர்.

குறிப்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 8 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களில் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் அமைச்சர்களாக உள்ள செல்லூர் ராஜு, ஆர்.வி. உதயகுமார் தவிர்த்து, பெரியபுள்ளான் என்ற செல்வம், ராஜன் செல்லப்பா, ஏ.கே. போஸ், நீதிபதி ஆகிய நான்கு பேரும் கூட்டத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  அவர்கள் யாரும் வரவில்லை.

இத்தனைக்கும் ஏ.கே. போஸ், சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தினகரனின் கூட்டத்திற்குச் செல்லப்போவதாகக் கூறினார். தன்னுடைய கூட்டத்திற்கு வர விரும்பிய இவர்களை, அமைச்சர் தரப்பு கடத்திக்கொண்டுவந்துவிட்டதாக கூட்டத்தில் குற்றம்சாட்டினார் தினகரன். மீதமுள்ள இருவர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை AIADMK

தமிழக சட்டப்பேரவையில் ஒருங்கிணைந்த அ.தி.மு.கவின் பலம் வெறும் 135-தான் என்பதால்,  20 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வந்ததால் சற்று ஆறுதலடைந்திருக்கிறார் தினகரன். இருந்தபோதும், ஆட்சியைக் கவிழ்ப்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது என்பதால், மேலூர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்து அவர் ஏதும் பேசவில்லை. 

"தினகரன் இந்த ஆட்சியைக் கவிழ்க்கமாட்டார். கவிழ்க்கவும் முடியாது. அதற்கு அவர் பக்கம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஜி.சி. சேகர். இப்போதைய சூழலில், கட்சியில் அதிகாரம் செலுத்தவேண்டும், கட்சி விவகாரங்களில் பங்கிருக்க வேண்டும் என்று நினைக்கிறார் தினகரன், அவ்வளவுதான் என்கிறார் அவர்.

எடப்பாடி பழனிச்சாமி அணியைப் பொறுத்தவரை, இவ்வளவு கூட்டம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.  "எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்திற்கும் தற்போது இணைவதைத் தவிர வேறு வழியே கிடையாது. அப்படியானால்தான் தினகரனை அவர்கள் எதிர்கொள்ள முடியும்" என்கிறார் சேகர். 

மேலூர் கூட்டத்திற்குப் பிறகு, எடப்பாடி தரப்பு தினகரன் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயலலிதா சிறைக்குச் சென்றதற்குக் காரணமே சசிகலா குடும்பத்தினர்தான் என்று குற்றம்சாட்டினார். 

ஜெயலலிதா முழுக்க முழுக்க சசிகலா குடும்பத்தையே சார்ந்திருந்த நிலையில், அவர்கள் ஜெயலலிதாவைச் சரியாக கவனித்துக்கொள்ளவில்லையென்றும் ஜெயலலிதாவை வைத்து அவர்கள்தான் பணம் சம்பாதித்தார்கள் என்றும் குற்றம் சாட்டினார். 

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் கூடியிருந்தபோது, கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று பேசியவர்கள் தற்போது கட்சியைக் கைப்பற்ற முனைவது ஏன் என்றும் ராமச்சந்திரன் கேள்வியெழுப்பினார். மேலும், தினகரனை விட்டுத் தாங்கள் விலகுவதாக பேட்டியளித்தபோது, திவாகரன் தங்களைத் தொடர்புகொண்டு அதற்கு ஆதரவுதெரிவித்ததாகவும் கூறினார். 

மேலும் எந்தத் தேர்தல் நடந்தாலும் பதவிகளையும் இடங்களையும் தினகரன் குடும்பம் விற்பனை செய்ததாகவும் ராமச்சந்திரன் குற்றம்சாட்டினார். 

மேலும் ஆளும் எடப்பாடி தரப்பைப் பொறுத்தவரை,  பெரும்பான்மையை எப்படியாவது காப்பாற்றிவிட முடியும் என்று நம்புகிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. அம்மா அணியின் பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், "அப்படியே 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன்  பக்கம் சென்றுவிட்டாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பணம் கொடுத்துப் பெற்றுவிட  முடியும்" என்று கூறினார். 

37 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தினகரன் கூறினார். ஆனால், 20 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருக்கின்றனர். இதிலிருந்தே அவருக்கான ஆதரவு குறைந்துவருவது தெரியவில்லையா எனக் கேள்வியெழுப்புகிறார் அ.தி.மு.க. அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. உறுப்பினர் கார்டே அச்சிடப்படவில்லை. யாருக்கும் உறுப்பினர் அட்டை தரப்படவில்லை. ஆகவே, ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட தினகரன், இன்னமும் கட்சியின் உறுப்பினர்கூட ஆகவில்லை என்கிறார் ஆவடி குமார். 

அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது உறுதி என்று தெரிவித்த ஆவடி குமார், இரு அணிகளும் இணைந்த பிறகு, பொதுச் செயலாளர் குறித்த வழக்கைத் திரும்பப் பெறுவோம். தேர்தல் நடத்தி பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்வோம். இதிலெல்லாம் தினகரனுக்கு எந்த பங்கும் இருக்காது என்கிறார் அவர். 

இதற்கிடையில், தமிழக அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 18ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக ஓ. பன்னீர்செல்வம் அணி அறிவித்திருந்தது. இந்த நிலையில், அந்தப் போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அந்த அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்திருக்கிறார். 

அடுத்த கூட்டத்தை 23-ஆம் தேதியன்று வடசென்னையில் நடத்துவதாக அறிவித்திருக்கிறார் தினகரன். இந்தக் கூட்டமும் தினகரனுக்கு மற்றொரு அக்னி பரிட்சைதான். 

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்