'தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை': டிடிவி தினகரன்

எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கும், அ.தி.மு.க. கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

ஆட்சியைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளாமல் தவறவிட்டால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களால் உருவாக்கப்பட்ட அரசுதான் தற்போது ஆட்சியில் இருக்கிறது. ஆனால், இந்த அரசுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆட்சி என்பது ஒரு கண்ணாடிக் குடுவையைப் போல. அதைக் கவனமாக வைத்திருக்க வேண்டும். அது தவறினால் நாங்கள் பொறுப்பல்ல" என்று குறிப்பிட்டார்.

கட்சியைக் கொல்லைப்புறமாக கைப்பற்றிவிடலாம் என சில அமைச்சர்களும், நிர்வாகிகளும் செயல்பட்டுவருகிறார்கள் என்றும், அவர்கள் இதையெல்லாம் நிறுத்தாவிட்டால், ஜெயலலிதாவின் பாதையில் அவர்கள் செல்லாவிட்டால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயம் என்றும் தினகரன் தெரிவித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன் குறித்த பல உண்மைகளை தான் வெளியிட்டால் அவர் அவமானப்பட நேரிடும் என்று குறிப்பிட்ட தினகரன், கடந்த பத்து ஆண்டுகளாக சீனிவாசன் எங்கே இருந்தார் எனக் கேள்வியெழுப்பினார். தாங்கள் கொடுத்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பேசட்டும் என்றும் தினகரன் தெரிவித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படம் தன்னிடம் இருப்பதாகவும், தன் காலில் விழ அவர் வந்தபோது, தான் அதைத் தடுத்துவிட்டதாகவும் இந்த புகைப்படங்களை வெளியிட்டால் அவருக்கு அவமானமாகிவிடும் என்று தினகரன் கூறினார்.

தன்னைப் பற்றி தினகரன் கூறிய கருத்துக்களுக்குப் பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், தான் கேட்காமலேயே பொருளாளர் பதவியை அளித்ததால் சசிகலாவின் காலில்தான் விழுந்தது உண்மைதான் எனவும், அதேசமயம், துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதும் தன் காலிலும் செங்கோட்டையன் காலிலும் தினகரன் விழுந்ததாகவும் தெரிவித்தார்.

தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்போது தங்கள் பக்கம்தான் இருப்பதாகவும் சீனிவாசன் கூறினார்.

அ.தி.மு.க. அம்மா அணி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தினகரன் தலைமையிலும் இரு பிரிவாக பிரிந்திருப்பதால், இரு தரப்பும் ஒருவர் மீது பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இரு அணிகளும் இணைவதற்கு தாங்கள் முன்வைத்த ஒரு கோரிக்கை, அதாவது சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓரளவுக்கு நிறைவேறியிருப்பதாகத் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்