தலித் விவசாயிக்கு உதவியதால் கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்

தெலங்கானா தலித் விவசாயிக்கு உதவியால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்
Image caption தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தினை கோப்பவெலி லட்சுமி என்ற பெண் தலித் விவசாயிக்கு சாமா குத்தகைக்கு விட்டார்

தெலங்கானா மாநிலத்தில், ஒரு தலித் விவசாயிக்கு உதவியதால் தான் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு பெண் புகார் கூறியுள்ளார்.

ஐம்பது வயதான சாமா இந்திரா என்ற பெண் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். தலித் விவசாயிக்கு உதவிய தன்னுடன் பேசுபவர்களுக்கு ரெட்டி சமூக சங்கத்தினர் 5000 ரூபாய் அபராதம் விதிப்பதாக அவர் கூறுகிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தினை கோப்பவெலி லட்சுமி என்ற பெண் தலித் விவசாயிக்கு சாமா குத்தகைக்கு விட்டதால் இந்தப் பிரச்சனை உருவானது என சாமாவின் குடும்பத்தினர் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

சாமாவின் நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தை ரெட்டி சமூகத்தை சேர்ந்த ஒருவர் அண்மையில் வாங்கியுள்ளார். இந்நிலையில், தனது நிலத்தின் வழியாக தலித் விவசாயி குடும்பத்தினர் அவர்களது வயலுக்குச் செல்வதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

சில மாதங்கள் கழித்து, தலித் விவசாயியின் குடும்பத்தால் விளைவிக்கப்பட்ட பயிர்கள் முழுவதும் அழிக்கப்பட்டதை அடுத்து, லட்சுமியும் சாமாவும் இணைந்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

``எனது கிராமத்தை சேர்ந்த ரெட்டி சமூக சங்கத்தினர், லட்சுமிக்கு நான் கொடுத்திருந்த குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு என்னிடம் கூறினார்கள். ஆனால், லட்சுமி எனது பால்ய கால தோழி என்பதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டேன். அதனால் என்னை ஒதுக்கி வைத்துள்ளார்கள்`` என்கிறார் சாமா.

ரெட்டி சமூக சங்கத்தினர் இதுகுறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.

``தங்கள் மீது வேண்டுமென்றே புகார் கொடுக்குமாறு, லட்சுமியை சாமா தூண்டியதாக ரெட்டி சங்கத்தினர் நினைக்கின்றனர்`` என மூத்த போலீஸ் அதிகாரி மாதவி பிபிசியிடம் கூறினார்.

ரெட்டி சமூக சங்கத்தை சேர்ந்த ஒன்பது பேர் மீது போலீஸார் மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்