'இந்தியாவிலும் இல்லை, பாகிஸ்தானிலும் இல்லை; எந்த நாடு எங்களுக்கு சொந்தம்?'

  • 17 ஆகஸ்ட் 2017
ஏரி

'கனியே கே பேட்' கிராமத்திற்கு செல்வதற்கான பயணம் நீண்டது. ராவி நதியையும் அதன் மணற்பரப்பையும் கடந்து செல்லவேண்டும். அதோடு, எல்லை பாதுகாப்புப் படையின் சோதனைச்சாவடியை கடக்கும்போது, அங்குள்ள அடையாள பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.

இவை அனைத்தையும் கடந்தபிறகு ஜஸ்வந்த் சிங்கின் வீட்டை அடைந்தோம்.

புன்னகையுடன் வரவேற்கும் ஐஸ்வந்த் சிங், 'இந்த இடத்திற்கு வருவதற்கு பல தடைகளை கடக்கவேண்டும். எப்போது நீர் வரத்து அதிகரிக்கும், எப்போது மண் சரிவு ஏற்படும் என்று தெரியாது, இயற்கையே மரணத்தை நிர்ணயிக்கிறது, இங்கு மரணம் என்பது தினசரி வாடிக்கை' என்று அவர் கூறுகிறார்.

'ராணுவ வீரர்' இருக்கும் பகுதியை அடைய சிவப்பு மணல் கொண்ட பகுதியை முதலில் மோட்டர்சைக்கிளிலும், பிறகு நடந்தும் கடக்க வேண்டியிருந்தது. படகு சவாரியும் செய்தோம்.

Image caption டிராக்டரில் ராணுவ வீரர் ஜஸ்வந்த் சிங்

பாகிஸ்தானின் நாரோவால் நகரம்

"எங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எண்ணிலடங்காதது. சிக்கலுடன் போராடியே வாழ்க்கை முடிந்துவிடும்" என்கிறார் ஜஸ்வந்த் சிங். பிரச்சனைகளையும் சிரித்த முகத்துடனே சொன்னாலும், அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சாமனியமானவை அல்ல என்று புரிகிறது.

இந்தியாவின் பாபா நானக் நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தானின் எல்லையில் உள்ளது கனியே கெ பேட்.

பாகிஸ்தானின் நாரோவல் நகரத்தில் இருந்து இந்த கிராமம் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தற்போது பாபா நானக் தாலூக்காவில் இருக்கும் இந்த பகுதி, முதலில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள படாலா தாலூக்காவில் இருந்தது.

ராவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால், இந்தியாவுடனான தொடர்பு துண்டிக்கப்படும். பாகிஸ்தானின் எல்லையில் முள்வேலி போடப்பட்டிருக்கும். அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு தனித்தீவாகிவிடும்.

"வெள்ளம் ஏற்பட்டால், ஒருபுறம் இந்தியாவில் இருந்தும், மற்றொரு புறம் முள்வேலியாலும் தனிமைப்படுத்தப்படுகிறோம்" என்று கிராமத் தலைவர் சுக்தேவ் சொல்கிறார்.

அந்த சமயத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், சிகிச்சைக்கான வழிகள் எதுவும் கிடையாது.

கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு முன் மேஜர் சிங்கை சந்தித்தோம். ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடிக்கு 2500-2600 ரூபாய் தொகை கிடைக்கிறது.

இது எல்லைப் பகுதிக்கான விலை என்கிறார் அவர். பிற இடங்களில் இந்த வேலைக்கு 2200 ரூபாய் கிடைக்கும். இதுவே முள் வேலி எல்லையை தாண்டினால், விலை 2800 ரூபாயாக அதிகரித்துவிடும்.

Image caption ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 2500-2600 ரூபாய் கிடைக்கிறது

ஊதிய கோரிக்கைகள்

'எல்லைப் பகுதி என்பதால், வேலைக்கு அடையாள அட்டை பெறுவது மற்றும் பாதுகாப்பு தொடர்பான இதர நடைமுறைகளை நிறைவேற்றும் சிக்கலில் மாட்டிக்கொள்ள யாரும் விரும்புவதில்லை என்பதால் ஆட்கள் கிடைப்பது அரிது' என்கிறார் குரு இக்பால் சிங்.

'இங்கு வருவதற்கு யாரும் தயாராக இல்லை என்பதோடு, வந்தாலும் மிக அதிகமான கூலி கொடுக்க வேண்டியிருக்கும்'.

பொருட்களுக்கான சந்தையோ கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. முதலில் படகிலும், பிறகு வேறு வழிகளிலும் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதால் செலவுகள் அதிகம் என்கிறார் அவர்.

'இந்த படகு சிறியது, ஒரு டிராக்டர் பொருட்களையும், மோட்டர் சைக்கிளையும் இதில் ஏற்றமுடியாது' என்கிறார் இக்பால் சிங்.

டிராக்டர் பழுதடைந்துவிட்டால், அதை சரி செய்ய வேறு எங்கு கொண்டு செல்லமுடியும்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

வாழ்வாதர சிக்கல்கள் இதோடு முடிந்துவிட்டதா? இல்லை இன்னமும் தொடர்கிறது.

Image caption மருத்துவமனை

பள்ளியின் நிலை

வேலைக்கான உபகரணங்களும், பொருட்களும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள அறைகளின் கதவுகளில் தொங்கும் துருபிடித்த பூட்டை பார்த்தால், பல நாட்கள் திறக்கப்படாமல் இருப்பதாக தோன்றுகிறது.

"இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில மணி நேரங்களுக்கு மட்டுமே மருத்துவர் வருவார், அதுவும் விருப்பம் இருந்தால்" என்று சொல்கிறார் கிராமவாசி அம்ரிக் சிங்.

கால்நடை மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடத்தின் நிலைமையும் இதுவே. 'மகள் மேலே படிக்க ஆசைப்படுகிறாள், ஆனால் வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்க பண வசதியில்லை என்கிறார் குல்ஜீத் சிங்.

Image caption ராவியில் வெள்ளம் வந்தால் கிராமம் துண்டிக்கப்படும்

கல்வியறிவு விகிதம்

பஞ்சாபின் பிற பகுதியில் இருப்பதைவிட எல்லைப்பகுதியில் கல்வியறிவு விகிதம் குறைவு என்று சமூகவியலாளர் பேராசிரியர் ஜக்ரூப் ஷேகோ மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2001 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அமிர்தசரஸ் மற்றும் ஃபிரோஜ்பூரின் கல்வியறிவு விகிதம் 67.85% முதல் 61.4% இருக்கிறது. இதே மாவட்டத்தில் இருக்கும் எல்லைப் பகுதிகளில் கல்வியறிவு விகிதம் 56இல் இருந்து 57.6 சதவிகிதம்தான்.

டேரா பாபா நானக்

இந்த கிராமத்தை சேர்ந்த அவ்தார் சிங் துபாயில் ஓட்டுநராக பணிபுரிகிறார், தற்போது விடுமுறையில் கிராமத்திற்கு வந்திருக்கிறார்.

முதலில் இந்த பகுதியில் ஏழு கிராமங்கள் இருந்ததாக கூறும் அவ்தார் சிங், தற்போது கனியே கே பேட் என்ற ஒன்றுதான் எஞ்சியிருப்பதாக கூறுகிறார்.

முதியவர்கள் மட்டுமே இங்குள்ள வீடுகளை பார்த்துக்கொண்டு இங்கேயே தங்கியிருப்பதாகவும், மற்றவர்கள் வேறு இடத்திற்கு சென்றுவிட்டாலும், காலையில் வந்துவிட்டு மாலையில் திரும்பச் சென்று விடுவார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

அவ்தார் சிங்கின் குடும்பமும் டேரா பாபா நானக்கில் வசிக்கின்றனர்.

இந்திய ராணுவத்தின் குதிரைப்படையில் பணியாற்றிய ஜஸ்வந்த் சிங்கின் மகன் படாலாவுக்கு சென்று, அங்கு பள்ளிக்கூடம் ஒன்றை நடத்துகிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
70 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை பிரிக்கும் எல்லைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு சிரில் ராட்கிளிஃப்பிடம் ஒப்படைக்கப்பட்டது

ராணுவத்தில் டாங்கியை செலுத்திய ஜஸ்வந்த் சிங் தற்போது டிராக்டரில் கிராமத்தை வலம் வருகிறார்.

தங்கள் வாழ்க்கையை சுலபமாக்குவதற்காக கட்டப்படும் பாலத்தை காட்ட டிராக்டரில் அழைத்துச் செல்கிறார் ஜஸ்வந்த் சிங். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் கட்டத் தொடங்கப்பட்ட அந்த பாலத்தின் கட்டுமான வேலைகள் இன்னும் நீள்கிறது.

ஜஸ்வந்த் சிங் போன்று எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையே இடர்பாடுகளுக்கு இடையில் இருப்பது நமக்கு கவலை அளிக்கிறது. ஆனால், 'இடுக்கண் வருங்கால் நகுக' என்பதை கடைபிடிக்கும் விதமாக அவர் சிரித்த முகமாகவே இருக்கிறார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்த பிபிசியின் சிறப்புத் தொடர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த கதை(காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்