மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் இறந்த தமிழர் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்ட கேரள முதல்வர்

  • 17 ஆகஸ்ட் 2017
பினராயி விஜயன் படத்தின் காப்புரிமை CMO Kerala
Image caption குழந்தைகளின் கல்விச் செலவுக்காக கேரள அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் கேரளாவில் மரணமடைந்த தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

கேரளாவில் பணியாற்றி வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் கடந்த 6-ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தார். ஆனால், முருகனுக்கு அவசர சிகிச்சையளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்ததால், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.

மேலும், கேரள மக்களின் சார்பாக தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவருடைய டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை twitter/CMOKerala

இதுமட்டுமல்லாமல், தேவைப்பட்டால் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் கேரள முதல்வரின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை twitter/CMOKerala

இந்நிலையில், முருகனின் குடும்பத்தாரை நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், குழந்தைகளின் கல்விச் செலவுக்காக கேரள அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை twitter/CMOKerala

கேரள முதல்வரின் இந்த முன்னெடுப்பு தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்