காதலரை கொடைக்கானலில் கைப்பிடித்தார் இரோம் ஷர்மிளா

மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்த இரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் தோழரான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோவை கொடைக்கானலில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

இரோம் ஷர்மிளா, டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோ திருமண புகைப்படம்
படக்குறிப்பு,

16 ஆண்டுகளுக்கு பின்னர், 2017 ஆகஸ்ட் 9 ஆம் நாள் முடித்து கொள்வதாக அறிவித்தபோது, உலகிலேயே மிக நீண்ட உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அப்சர்வேட்டரி பகுதியில் வசித்துவரும் இரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் தோழரான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோவைத் திருமணம் செய்து கொள்வதற்காக கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜூலை 12-ஆம் தேதியன்று மனு செய்தார்.

டெஸ்மாண்ட் வெளிநாட்டவர் என்பதால் 30 நாட்கள் காத்திருப்புக் காலம் கடந்த நிலையில், இன்று கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். சுமார் இருபது பேர் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

"என் திருமணம் என்பது 7 ஆண்டுக் கனவு. அது இன்று நடந்திருப்பது மகிழ்ச்சி" என செய்தியாளர்களிடம் பேசிய இரோம் ஷர்மிளா கூறினார். வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி ஒரிசாவில் நடக்கவிருக்கும் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதாகவும் இரோம் ஷர்மிளா தெரிவித்தார்.

இரோம் ஷர்மிளா பதிவுத் திருமணத்திற்காக மனு கொடுத்த பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பகுதியின் அமைதி கெடுமென அவர்கள் கூறினர். இந்த எதிர்ப்பு ஏற்கப்படவில்லை.

கடந்த 2000-ஆவது ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மாலோம் படுகொலைகளையடுத்து, மணிப்பூர் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டுமெனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார் ஷர்மிளா.

16 ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தை நடத்திவந்தவர், 2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதியன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

அதற்குப் பிறகு, மக்கள் மீளெழுச்சி மற்றும் நீதிக்கான கூட்டணி என்ற கட்சியைத் துவங்கி மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் ஷர்மிளா. ஆனால், அதில் அவர் தோல்வியடைந்தார்.

இதற்குப் பிறகு அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்த இரோம் ஷர்மிளா, தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :