ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் - தமிழக அரசு அறிவிப்பு

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகலில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நிதியமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோருடன் முதலமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, "கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமான நிலையில், அவரது மரணம் குறித்து விசாரணை தேவை என்று பல்வேறு தரப்பினரும் கோரியதை ஏற்று, அவரது மரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

நினைவிடம் ஆகும் போயஸ் இல்லம்

மேலும், ஜெயலலிதா வசித்த வந்த போயஸ் கார்டனில் உள்ள "வேதா நிலையம்", ஜெயலலிதாவின் சிறப்புகளை விளக்கும் வகையில் நினைவிடமாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்" என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

எந்த ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்படும்? அதற்கான காலக்கெடு என்ன? போன்ற கேள்விகளுக்கு, "விரைவில் அது பற்றி அறிவிக்கப்படும்" என்று கூறிய முதலமைச்சர் மேலதிக கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

தமிழகத்தில் ஆளும் அதிமுக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வம் அணி, சசிகலா தலைமையை ஏற்றுள்ள டி.டி.வி.தினகரன் அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி என பிரிந்துள்ளது.

இதில், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.

இரு அணிகளும் இணைய வேண்டுமென்றால், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பத்தினர் அ.தி.மு.கவிலிருந்து முழுமையாக ஒதுக்கிவைக்கப்பட வேண்டுமென்றும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் ஓ. பன்னீர்செல்வம் அணி நிபந்தனை விதித்தது.

இந்த நிலையில், டிடிவி தினகரனையும் அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைப்பதாக சில மாதங்களுக்கு முன்பாக அதிமுக அமைச்சர்கள் கூறினர். அதன் பிறகு சசிகலாவின் படங்கள் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து அகற்றப்பட்டன.

தற்போது, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று பழனிச்சாமி தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகவே முதலமைச்சரின் இன்றைய அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்