கத்தார் ஹஜ் யாத்ரிகர்களுக்காக எல்லையை திறக்கும் செளதி அரேபியா

  • 17 ஆகஸ்ட் 2017
கத்தார் ஹஜ் யாத்ரிகர்களுக்காக எல்லையை திறக்கும் செளதி அரேபியா படத்தின் காப்புரிமை BANDAR ALDANDANI

மெக்காவில் இம்மாத தொடக்கத்தில் தொடங்கிய வருடாந்திர ஹஜ் புனித யாத்திரைக்கு கத்தார் நாட்டு முஸ்லிம் யாத்ரிகர்களை அனுமதிக்கும் வகையில் அந்நாட்டுடனான எல்லை திறக்கப்படும் என்று செளதி அரேபிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கத்தாருடனான உறவை செளதி மற்றும் மூன்று அண்டை நாடுகள் கடந்த மாதம் ஜூன் மாதம் துண்டித்த நிலையில், அண்டை நாடுகளுக்கு இடையிலான முதல் உயர்நிலை கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக கத்தார் மீது அந்த நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், அதை கத்தார் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Cultura RM Exclusive/Lost Horizon Images

செளதி எல்லை மூடப்பட்டதால், கத்தாரில் வசிக்கும் சுமார் 2.7 மில்லியன் மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய கடல் மூலம் இறக்குமதி செய்யும் காட்டாயத்திற்கு கத்தார் தள்ளப்பட்டுள்ளது.

ஹஜ் புனித யாத்திரைக்கு செல்ல விரும்பும் கத்தார் நாட்டு குடிமக்கள், செளதிக்குள் நுழையும் சல்வா எல்லையை மின்னணு அனுமதியின்றி கடக்கலாம் என்று செளதி ஊடக முகமையின் அதிகாரபூர்வ செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது.

மேலும், செளதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மூலமாகவும் கத்தார் பிரஜைகள் செளதிக்குள் நுழையலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Jean-Christophe Godet

கடந்த மாதம், செளதியில் ஹஜ் பயணங்களை மேற்கொள்ள விரும்பும் கத்தார் பிரஜைகள், சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள் என்று செளதி அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதற்கு பதிலளித்த கத்தார், ஹஜ் புனித யாத்திரையை செளதி அரசு அரசியலாக்குவதற்காக குற்றம் சாட்டியது.

ஆனால், செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் அல் செளத் மற்றும் கத்தாரின் ஷேக் அப்துல்லா பின் அலி பின் அப்துல்லா பின் ஜாசிம் அல் தானி ஆகியோரிடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் தனது நிலைப்பாட்டை செளதி மாற்றிக் கொண்டது.

இந்த நல்லெண்ண அறிவிப்பு வெளியானாலும், கத்தார் மற்றும் அதன் அண்டை நாடுகளான செளதி அரேபியா. பஹ்ரைன், எகிப்து மற்றும் அரபு எமிரேட்கள் இடையிலான பிரச்சனை என்பது தீர்வை எட்டுவதற்கு வெகு தொலைவில் இருப்பதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்