காஷ்மீர் பதற்றங்களின் சாட்சியாக விளங்கும் கடைக்கார தாத்தா

  • 18 ஆகஸ்ட் 2017

இந்தியாவும் பாகிஸ்தானும் தாங்கள் சுதந்திரம் அடைந்து தனி நாடான 70 ஆண்டுகளைக் கொண்டாடும் இத்தருணத்தில், பிபிசியின் எம்.இலியாஸ் கான், பாகிஸ்தான் எனும் புதிய தேசம் உருவான அதே சமயத்தில் பிறந்த காஷ்மீரைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவரைச் சந்தித்தார்.

Image caption முகமது யூனுஸ் பட்

முகமது யூனுஸ் பட்டின் கதை, வட மேற்குக் காஷ்மீரில் உள்ள நதிப் பள்ளத்தாக்கான, நீலம் பள்ளத்தாக்கின் கதை.

பட் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, கருவில் இருக்கும் குழந்தை அல்லாமல் மூன்று மகன்கள், ஒரு மகள், இரண்டு ஏக்கர் நிலம் ஆகியவற்றைத் தன் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு, அவரது தந்தை இறந்துவிட்டார்.

முகமது யூனுஸ் பட், அத்முகாம் என்னும் சிறிய, அறியப்படாத ஒரு கிராமத்தில் பிறந்தார். அப்போது மன்னராட்சியின் கீழ் இருந்த காஷ்மீர் பிரிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தது. புதிதாக உருவான பாகிஸ்தான், காஷ்மீரைத் தன்னுடன் இணைப்பதற்கு ஒரு பொய்யான போரை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தது.

அப்போது முதல் இரண்டு போர்கள் மட்டுமல்லாது, மாறி மாறி வரும் பதற்றத்துக்கும் அமைதிக்கும் இடையே அவர் தனது வாழ்வைக் கழித்துள்ளார்.

"நான் இன்குலாப் மாதத்தில் பிறந்ததாக என் அம்மா கூறுவார்," என்கிறார் அவர். 'இன்குலாப்' என்றால் 'புரட்சி' என்று பொருள்.

"கேரன் மற்றும் தீத்வால் பகுதியில் இருந்த இந்து குடும்பங்கள், நீலம் நதியைக் கடந்து இப்பகுதிக்கு வருவதற்கு கொஞ்ச காலம் முன்னர் அது நடந்தது என்று அவர் கூறினார். முஸஃபராபாத் பகுதிக்கு ஆயுதங்களுடன் பதான் இணைக்குழுவைச் சேர்ந்த போராளிகள் அங்கு வந்ததால், அங்கு பதற்றம் உண்டானது," என்கிறார் பட்.

மலைப்பிரதேசங்களில் வாழ்ந்த அவர்கள், பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டு, ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட பெரிய போராளிக் குழுக்களின் அங்கம். அக்குழுவினர், அப்பகுதியின் பெரிய நகரான ஸ்ரீநகரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சுதந்திர இந்தியாவின் எல்லைக் கோடுகளை வகுத்த மனிதர்

ஓராண்டில் பிரச்னை முடிந்து காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அத்முகாம் கிராமம் பாகிஸ்தானின் பக்கம் சேர்ந்தது. கால்நடை மேய்ப்புத் தொழில் செய்து வந்த அந்தக் கிராமம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் போனது.

விளை நிலங்களில் கால்நடைகளை மேய்ப்பதையும், அங்கு ஒளிந்து விளையாடுவதையும் தவிர பட்டுக்குத் தன் குழந்தைப் பருவ நினைவுகள் எதுவும் பெரிதாக இல்லை.

"அங்கு பள்ளி எதுவும் இல்லாததால், படித்தவர்கள் என்று யாருமே இல்லை. அங்குள்ள யாருக்காவது கடிதம் வந்தால், 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரனுக்குச் சென்று அங்கிருந்த அஞ்சலகத்தின் எழுத்தரைப் படித்துக் காய்ச்சி சொல்வோம்," என்று நினைவு கூறுகிறார் பட்.

தந்தி அனுப்ப யாரவது விரும்பினால் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீத்வாலுக்கு செல்ல வேண்டும். அப்போது அங்கு சாலைகளும் இல்லை போக்குவரத்து வசதிகளும் இருக்கவில்லை. கரடு முரடான பாதைகளில் அவர்கள் நடந்தே சென்றனர்.

Image caption பதற்றம் மிகுந்த 1980-கள் மற்றும் 1990-களிலும் பட் ஊரை விட்டுப் போகவில்லை.

"பள்ளிக்குப் போவது, திரும்ப வீட்டுக்கு வருவது, கால்நடைகளைப் பராமரிப்பது, வயல் வெளிகளில் வேலை செய்வது, கிடைத்த நேரத்தில் விளையாடுவதே அப்போதைய வாழ்க்கையாக இருந்தது," என்கிறார் பட்.

அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அவரின் அம்மா அவரைப் பள்ளிக்கு அனுப்பினார். அங்கிருந்து ஆரம்பப் பள்ளிக்கு எட்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிக்கு கூடுதலாக இன்னும் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், பள்ளி படிப்பை அவர் நிறுத்திவிட்டார். "ஆனால் நான் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டேன். என் கிராமத்தில் முதன் முதலில் கல்வியறிவு பெற்றவர்களில் நானும் ஒருவன்," என்று பெருமையாகக் கூறுகிறார் அவர்.

1962-ஆம் ஆண்டு அவர் வாழ்வில் பல விடயங்கள் நடந்தன. தன் உறவுக்கார பெண் ஒருவருடன் அவருக்கு திருமணம் நடக்கிறது. அடுத்த சில மாதங்களில் இறந்த அவரது அம்மா, அவருக்கு ஒரு பலசரக்குக் கடை வைக்கப் பணம் தருகிறார்.

"கடை வைக்க அவர் எனக்கு 520 ரூபாய் தந்தார். எங்கள் கிராமத்தில் அது மூன்றாவது கடை," என்றார் பட்.

அந்நாட்களில் முஸஃபராபாத் நகரில் இருந்து வரும் சாலை நவ்சேரியுடன் முடிந்துவிடும். அத்முகாமில் இருந்து 65 கிலோ மேட்டர் தொலைவில் இருந்த அந்த இடம்தான் மிகவும் அருகில் இருக்கும் மொத்தவிலை சந்தை.

"என் முதல் பயணத்தின்போது வாங்கிய பொருட்களை, ஆறு குதிரைகளில் சுமைகளாக ஏற்றிவந்தேன். காலை முதல் மாலை வரை நடந்தால்தான் நவ்சேரியை அடைய முடியும். பொருட்களை வாங்கிவிட்டுத் திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும். ஏனெனில், குதிரைகள் ஓய்வெடுக்க வேண்டும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கல்விக்காக ஏங்கும் காஷ்மீர் சிறுவன்

உள்ளூர் அரசியலில் ஈடுபடத் தொடங்குகிறார் பட். 1959-ஆம் ஆண்டு பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் இருந்த காஷ்மீரின் அதிபராக நியமிக்கப்பட்ட கே.எச்.குர்ஷித் அவரை மிகவும் ஈர்க்கிறார். காஷ்மீர் உரிமைகளின் நம்பிக்கை நாயகனாக அப்போது அவர் பார்க்கப்பட்டார்.

1964-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடன், காஷ்மீரின்அரசியலமைப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலால் பதவி விலகியதும், பட்டின் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

அதே ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் மரணமடைந்தார். பதான் பழங்குடியின மக்களுக்குப் பதிலாக காஷ்மீர் மக்களை வைத்தே பாகிஸ்தான் இம்முறை படையெடுக்கத் திட்டமிட்டது. ஆனால், அதை இன்று வரை பாகிஸ்தான் ராணுவம் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.

Image caption போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டாலும், பள்ளத்தாக்கின் பழைய வழக்கங்களும் இன்னும் நடைமுறையில் உள்ளன.

"காஷ்மீரி இளைஞர்களை ஆள் சேர்ப்பதற்காக காவல் துறையினர் கிராமம் கிராமமாகச் சென்றனர். வரிசையாக ஆட்கள் நிற்க வைக்கப்படுவார்கள். காவல் அதிகாரி வந்து அவர்களை பார்வையிடுவார். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை, அவர் தோளில் தொடுவார். அப்போது அவர்கள் இன்னொரு தனி வரிசையில் நிற்க வேண்டும்," என்று அதைப்பற்றி கூறுகிறார் பட்.

அவர் பட்டின் தோளையும் தட்டுகிறார். அப்போது எனக்கு கடை ஒன்று இருக்கிறது என்று அவரிடம் தெரிவித்தார் பட். "நீ செய்ய வேண்டியதெல்லாம், துப்பாக்கியை வாங்கிக்கொண்டு, வீட்டில் இருப்பதுதான்," என்று அந்த அதிகாரி அவரிடம் சொன்னார். ஆனால், சில மாதங்களில், கடையை இழுத்து மூடிவிட்டு, பயிற்சிக்கு வரச்சொல்லி, அவருக்கு அழைப்பு வருகிறது.

முஸஃபராபாத்தில் இருந்த நிசார் முகாமில், தன்னுடன் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுடன் மூன்று மாதங்களைக் கழித்தார் பட். பலரும் அப்போது இந்தியாவினுள் ஊடுருவ அனுப்பி வைக்கப்பட்டாலும், எழுதப் படிக்கத் தெரிந்த சிலர் மட்டும் எழுத்தர் பணிக்காக ஆயுதக் கிடங்குகளில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

"நான் அத்முகாமில் இருந்த ஒரு முகாமில் தளவாடங்கள் மற்றும் பிற பொருட்களைக் கணக்கு வைக்கும் பணியில் அமர்த்தப்பட்டேன். காஷ்மீரில் எங்கள் படைகள் தோற்கடிக்கப்படும் வரை நான் அந்தப் பணியில் நீடித்தேன். (1965 செப்டம்பர் 6-ஆம் நாள்) இந்தியா பாகிஸ்தான் படைகள் மீது தாக்குதல் நடத்தியது."

1966-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின், பட் பணியாற்றிய படை கலைக்கப்படுகிறது.

"ராணுவத்தில் சேர விரும்பியவர்கள் சேர்ந்து கொண்டனர். மற்றவர்கள் ஆயுதங்களைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினோம். நான் வீட்டுக்கு வந்ததும் கடையை மீண்டும் தொடங்கினேன். அது வரை அது பூட்டப்பட்டிருந்தது. அதற்குள் பொருட்களும் இருந்தன," என்று பட் தெரிவித்தார்.

அந்தப் போருக்குப் பின்னர், இந்திய படைகள் நெருங்கி வந்து விட்டதையும், தங்கள் கிராமத்திற்கு எதிரில் இருந்த மேட்டுப் பகுதியில் நிரந்தர முகாம் அமைத்துள்ளதையும் அத்முகாம் மக்கள் கண்டுபிடித்தனர்.

"அது வரை அங்கு கால்நடைகளை மேய்த்த எங்கள் மக்கள் அது எங்களுக்குச் சொந்தமான நிலம் என்றே கருதினர். பள்ளத்தாக்கின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் இருந்தது," என்று போருக்குப் பிந்தைய நிலையை அவர் விவரிக்கிறார்.

சிறிது காலம் அமைதி நிலவியது. நவ்சேரியில் இருந்து அத்முகாம் கிராமத்திற்கும், அதைக் கடந்தும் சாலை அமைக்கப்பட்டது. முந்தைய பொதி சுமக்கும் விலங்குகளுக்கான பாதையைவிட இது நன்றாக இருந்தது. அந்தச் சாலை போக்குவரத்து வசதிகளையும், அங்கு இருந்த மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றத்தையும் கொண்டுவந்தது.

நீலம் பள்ளத்தாக்கில் அத்முகாம் முக்கிய நகராக உருவெடுத்தது. ஒரு பொது மருத்துவமனையும், பள்ளியும் கட்டப்பட்டது. பல வங்கிக் கிளைகளும், ஒரு தொலைபேசி நிலையமும் அங்கு வந்தது.

"நாங்கள் புதிய வீடு கட்டினோம். என் இரண்டு மகள்களும் ஒரு மகனும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர்," என்கிறார் பட்.

Image caption நீலம் பள்ளத்தாக்கின் மேட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் நிலைகொண்டது அம்மக்கள் வாழ்வில் மோசமான விளைவுகளை உண்டாக்கியது.

1989-ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் ஏற்பட்ட ஊடுருவலால் நிலைமை மோசமானது. நீலம் பள்ளத்தாக்கில் பல போராட்டக் குழுவினர் நுழைகின்றனர். இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தயார்படுத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகளும் அவர்களுடன் நுழைந்தனர்.

பள்ளத்தாக்கின் உயர் நிலைகளை, 1965-க்குப் பிறகு இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்ததால், அங்கிருந்த குடியிருப்புகளை அவர்களின் துப்பாக்கிகள் குறி வைத்திருந்தன. பதற்றம் அதிகாமாக ஆக, இந்தியத் தரப்பில் இருந்து பதில் தாக்குதலும் அதிகரித்தது.

"அத்முகாமுக்கு அதுபோன்ற ஒரு மோசமான காலகட்டத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. 20 ஆண்டு காலம் கட்டமைக்கப்பட்ட அனைத்தும், அதற்குப் பிந்தைய 15 ஆண்டுகாலப் பதற்றத்தில் சீரழிந்து போனது," என்று கசப்பான நினைவுகளைச் சொல்கிறார் அவர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காஷ்மீர்: தொடரும் மோதலும் தணியாத பதற்றமும்

அப்போதுதான் அங்கிருந்த மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் அழிக்கப்பட்டன. வேளாண்மை சாத்தியமற்றதாகிப் போனது. முஸஃபராபாத் மற்றும் பாதுகாப்பான பிற மேட்டுப் பகுதிகளுக்கு மக்கள் குடிபெயர்ந்தனர்.

மிகவும் சொற்பமானவர்களே தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க அங்கேயே தாங்கினர். பட்டும் அவர்களில் ஒருவர்.

"அத்முகாம் அப்போது ஒரு தனிமையான பகுதியாக இருந்தது. பேசுவதற்குக் கூட ஆள் இருக்க மாட்டார்கள். தங்கள் உடைமைகளை என் பொறுப்பில் விட்டுவிட்டு, என் சகோதரர்கள் தங்கள் குடும்பங்களுடன், ஊரை விட்டே பொய் விட்டனர்."

"இங்கு மூன்று குடும்பங்களே தங்கினோம். எங்கள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. உண்டுவிட்டு, நாங்கள் தோண்டி வைத்திருந்த பதுங்குக்குழிகளில்தான் நாங்கள் உறங்கினோம். எங்கள் பழத் தோட்டங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன," என்று கூறும் பட், "அந்நாட்களில் யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. ஒரு தலைமுறையே கல்வியை இழந்தது," என்று சோகத்துடன் விவரிக்கிறார்.

Image caption அமைதிக்கு இடையே அத்முகாம் வளர்ந்து வருவதை பட் பார்த்து வருகிறார்.

போர் நிறுத்தம் ஏற்பட்ட 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், அழிக்கப்பட்ட பலவும் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. படித்த இளம் தலைமுறை இப்போது அங்கு பெரியவர்களாக உள்ளது. அந்த இடத்தை ஒரு சுற்றுலாத் தலமாக பிரபலப்படுத்த அரசும் முயல்கிறது.

ஆனால், அமைதி எப்போது வேண்டுமானாலும் நொறுங்கலாம். ஒரே ஒரு முறை எல்லை தாண்டியா துப்பாக்கிச் சூடு நடந்தால், பல மாதங்களுக்கு சுற்றுலா பாதிக்கும்.

"வாழ்க்கை மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அப்போதும் அச்சுறுத்தல் உள்ளது," என்கிறார் அவர்.

தன் 'ஆட்டம்' முடிவை நெருங்குகிறது, என்று கூறுகிறார் பட். இதுவரை அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு கடந்த மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்டவை.

ஆனால், தான் செய்யும் தொழிலில், தான் வாழும் நகரமும் வளர்ச்சியடைந்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

"சுதந்திரம் பெற்ற காலத்தில் நான் பிறந்தது எனக்குக் கிடைத்த நற்பேறு. எனக்குப் பிந்தைய தலைமுறையும், இந்த சுதந்திரத்தை கடவுளின் விலைமதிக்க முடியாத பரிசாக எண்ணிப் பாதுகாக்கும் என்று நம்புகிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் அந்தக் கடைகாரத் தாத்தா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்