போயஸ் கார்டன் எங்கள் பூர்வீக சொத்து: ஜெ.தீபா

  • 18 ஆகஸ்ட் 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக்கப்போவதாக தமிழக அரசு நேற்று அறிவித்திருந்த நிலையில், அதற்கு அனுமதிக்க முடியாது என அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்திருக்கிறார். சட்டரீதியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அண்ணன் மகன் தீபக் கூறியிருக்கிறார்.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவில் உடல்நலமின்றி ஜெயலலிதா வெளியேறிய பிறகு, டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலையில் அவரது உயிரற்ற உடல்தான் மீண்டும் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில், 81 போயஸ் கார்டன் என்ற முகவரியில் உள்ள வேதா நிலையம் என்ற வீட்டில்தான் வசித்துவந்தார். 24,000 சதுர அடி கொண்ட அந்த வீடு, ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவால் 1967ல் ரூ.1.32 லட்சத்துக்கு வாங்கப்பட்டு, ஜெயலலிதாவால் விரிவாக்கம்செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு, அந்த வீடு சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த நிலையில், அதற்கு காவல்துறையினரின் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், காவல்துறை பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினரிடம் வீட்டின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை அவரது நினைவிடமாக்கும் முயற்சிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அவரது தாய் சந்தியாவால் வாங்கப்பட்டது. இது எங்கள் பூர்வீக சொத்து. இதை விற்கவோ வாங்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், "போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற நிச்சயம் ஒப்புக்கொள்ள முடியாது. அந்த இல்லத்திற்கு உரியவர்கள் நாங்கள். எங்களுக்கு ஒரு நோட்டீஸ்கூட அனுப்பவில்லை. இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன்" என்று கூறினார் தீபா.

இந்த விவகாரம் தொடர்பாக தீபாவின் சகோதரரும் ஜெயகுமாரின் மகனுமாகிய தீபக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் யாருக்கும் எதிர்க்கருத்து இருக்க முடியாதுஎன்றும் தனியார் சொத்தான அந்த இல்லத்தை கையகப்படுத்துவதற்கு முன்பாக சட்டரீதியான கடமைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசான தான் வலியுறுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஜெயலலிதா அந்த சொத்தை யாருக்கும் உயில் மூலமாக எழுதிவைக்கவில்லையென்றும் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி தானும் தீபாவுமே அதற்கு சட்டரீதியான வாரிசுதாரர்கள் என்றும் தீபக் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே தன்னுடைய ஒப்புதலையும் தீபாவின் ஒப்புதலையும் பெறாமல், போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாமென தீபக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் போயஸ் தோட்ட இல்லம் முன்பாக காவல்துறையினரின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றுபவர்களைத் தவிர, பிறர் அவ்வழியாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்