குஜராத்: கிராமத்தில் வீதி உலா செல்லும் சிங்கங்கள்

  • 18 ஆகஸ்ட் 2017
படத்தின் காப்புரிமை FABRICE COFFRINI

வில்லன்களை அடித்து நொறுக்குவதற்குமுன் கதாநாயகன், ''சிங்கம் சிங்கிளாதான் வரும்'' என்று பேசும் சினிமா வசனம் இந்தியாவில் மிகப்பிரபலம். ஆனால், குஜராத் மாநிலம் அம்ரெல்லி மாவட்டத்திலுள்ள ராம்பர் கிராமத்தில், ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான சிங்கங்களின் காட்சி, வேறு எதையோ தெரிவிக்கிறது.

மளிகைக் கடை ஒன்றின் உரிமையாளரான சந்திரகாந்த் செதானி, முந்தைய நாள் நள்ளிரவு பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்த போதுதான், சிங்கங்களின் நள்ளிரவு வீதி உலா வெளிச்சத்திற்கு வந்தது.

''1,000 முதல் 1,200 பேர் ராம்பர் கிராமத்தில் வசிக்கின்றனர். அங்கு 28 சிசிடிவி கேமராக்கள் கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச்செயல்களைகளை கண்டுபிடிக்க கேமராக்கள் அதிகமாக பயன்படுகின்றன. போலீஸ் விசாரணையின்போதும் அதிகாரிகளுக்கு சிசிடிவி கேமராக்கள் உறுதுணையாக உள்ளன'' என்கிறார் செதானி.

''28 கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற யோசனையை கொடுத்ததே கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம்தான். சிசிடிவி கேமராக்கள் படம்பிடித்த சில விஷயங்கள், எங்கள் கிராமம் தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்க முக்கிய காரணமாகி விட்டது.'' என்று பிபிசியிடன் செதானி கூறுகிறார்.

''சிங்கங்களின் வீதி உலாவால் ராம்பரில் உள்ள மனித உயிர்களுக்கோ அல்லது கால்நடைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதற்கான பதிவுகள் இதுவரை இல்லை'' என்று கிராம பஞ்சாயத்தை சேர்ந்த கல்லுபாய் தாதல் பிபிசியிடம் கூறினார்.

ஆஃப்ரிக்காவின் மாசய்மாரா காட்டுப்பகுதியிலும், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள கிர் சரணாலயத்திலும் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கிர் சரணாலயத்தில் மட்டும் சுமார் 523 ஆசிய சிங்கங்கள் இருப்பதாக கூறுகின்றன.

அம்ரெல்லி, சோம்நாத்-கிர் மற்றும் ஜுனாகாத் மாவட்டங்கள் முழுவதிலும் கிர் சரணலாயத்தின் பரப்பளவு அமைந்துள்ளது. காட்டுப்பகுதியை சுற்றியும், அருகே உள்ள கிராமங்களிலும் மனிதர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் சிங்கங்களின் நடமாட்டம் தென்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்