விஷால் சிக்கா பதவி விலகல் குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனர் பதில்

  • 18 ஆகஸ்ட் 2017

பிரபல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான விஷால் சிக்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அந்த நிறுவன இயக்குநர்கள் குழு தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்கப்படும் என்று அதன் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/GETTY IMAGES

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்ஃபோசிஸ் நிறுவன இயக்குநர் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் தனக்கு தெரிய வந்துள்ளதாக கூறியிருக்கிறார்.

தன் மீது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சுமத்திய குற்றச்சாட்டுகள், அறிக்கையின் தொனி மற்றம் அபிப்பிராயங்களால் தீவிர கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

2014 ஆம் ஆண்டில் இயக்குநர் குழுவைவிட்டு தானாகவே வெளியேறியபோது, இன்ஃபோஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தனது குழந்தைகளுக்கு பணமோ, பதவியோ அல்லது அதிகாரத்தையோ நாடவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

தனது பிரதான கவலை எல்லாம், இன்ஃபோஸிஸ் இயக்குநர் குழுவின் கவனத்திற்கு அடிக்கடி கொண்டு வந்த பெரு நிறுவன ஆளுகையின் தரம் அழிந்து கொண்டிருப்பதுதான் என்றும் நாராயண மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Manjunath Kiran/AFP/Getty Images

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது அவருடைய மாண்புக்கு கீழானது என்றும் அவர் கூறியுள்ளார். இது பக்கசார்பற்ற, புறநிலையான விசாரணை வழிமுறை இல்லையே என்றும் அவர்கள் கூறியதாக நாராயண மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான முறையில், சரியான மேடையில், உகந்த நேரத்தில் பதிலளிக்கப்படும் என்றும் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்