இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணிகள்: கடந்து வந்த பாதை

  • 21 ஆகஸ்ட் 2017

தமிழகத்தில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டி.டி.வி.தினகரன் அணி நீங்கலாக, அதிமுக தலைமையகத்தில் இன்று சந்தித்து இணைந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தார். அதன் பிறகு சில நாட்கள் முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தார்.

இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக பன்னீர்செல்வம் கிளம்பினார். அதன் பிறகு ஏற்பட்ட உள்கட்சி மோதலால் சசிகலா தலைமையிலான அணி ஒரு பிரிவாகவும், பன்னீர்செல்வம் அணி தனியாகவும் செயல்பட்டன.

பின்னர் சசிகலா சிறை சென்றதும் அவரது உறவினர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அதிமுகவினர் ஒரு அணியாக செயல்பட்டனர். இந்நிலையில் சசிகலா அணிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி குழுவினர் கருத்து வெளியிட்டதால் அந்த அணியில் பிளவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மூன்று அணியாக அதிமுகவினர் செயல்பட்டு வந்த நிலையில் இன்று, டி.டி.வி.தினகரன் நீங்கலாக, எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுக தலைமையகத்தில் இன்று சந்தித்துப் பேசினர். அதன் முடிவில் இருவர் தலைமையிலான அணிகளும் இணைவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த இரு தலைவர்களும் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தது முதல் தற்போது வரை கடந்து வந்த பாதையை நினைவுப்படுத்தும் நாட்குறிப்பு இது.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அதிமுக தலைமைக்கு எதிராக கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி திரும்பிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுகவில் இன்று இணைய எடுத்த முடிவவரை பதிவான முக்கிய நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கிறது இந்த நாட்குறிப்பு பட்டியல்:

ஆகஸ்ட் 21 அதிமுக தலைமையகத்தில் பழனிசாமி - பன்னீர்செல்வம் சந்திப்பு
ஆகஸ்ட் 18-21 ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் பழனிசாமி அணிகள் இணைப்புக்கான தீவிர ஆலோசனை
ஆகஸ்ட் 17 ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஆணையம்: முதல்வர் அறிவிப்பு
ஆகஸ்ட் 14 மதுரை மேலூரில் பலத்தை நிரூபிக்க தினகரன் பொதுக்கூட்டம். 20 எம்எல்ஏக்கள் பங்கேற்பு.
ஆகஸ்ட் 10 அதிமுக துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனம் செல்லாது என முதல்வர் பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்
ஆகஸ்ட் 5 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கு அதிமுக எம்.பி.க்கள் வாக்கு
ஜூலை 12 அணிகள் இணைப்பு குழுவை கலைப்பு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஜூலை 10 குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வாக்கு
ஜூன் 12 கட்சியில் இருந்து ஒதுங்க தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
ஜூன் 1 ஜாமீனில் தினகரனை விடுதலை செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
மே 10 சசிகலா குடும்பத்தை விலக்கினால் இணைப்பு: பன்னீர்செல்வம்
ஏப்ரல் 26 தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் கைது
ஏப்ரல் 18 டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தல்
ஏப்ரல் 9 தேர்தல் விதி மீறியதாகக் கூறி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து
மார்ச் 23 அதிமுக பெயர், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை
மார்ச் 9 ஆ.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-இல் இடைத்தேர்தல் அறிவிப்பு
பிப்ரவரி 18 முதல்வர் பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
பிப்ரவரி 16 எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம்
பிப்ரவரி 14 சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை
பிப்ரவரி 7 ஜெயலலிதா சமாதியில் தியானத்துக்கு பிறகு சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் புகார்
பிப்ரவரி 5 அதிமுக சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்வு

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்