அ.தி.மு.க. அணிகள் இணைப்பு எப்போது? - எடப்பாடி, பன்னீர் செல்வம் பதில்

  • 19 ஆகஸ்ட் 2017

அ.தி.மு.கவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் ஓரிரு நாட்களில் அணிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ. பன்னீர்செல்வம் அணியும் விரைவில் இணைவது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியேதும் நடக்கவில்லை.

இந்நிலையில், இன்று காலையிலும் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் இருதரப்பும் இணைவது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகுமென்றும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமிதான் முட்டுக்கட்டை போடுவதாக செய்திகள் வெளியான நிலையில், இதனை அவர் மறுத்திருக்கிறார்.

"ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆரம்பத்தில் வந்து இணைந்த தொண்டர்களின் நலனுக்காகவே சில விஷயங்களை நான் வலியுறுத்தி வருகிறேன். இருந்தபோதும் இறுதி முடிவை ஓ.பன்னீர் செல்வமே எடுப்பார்" என செய்தியாளர்களிடம் கே.பி. முனுசாமி கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, "இரு பிரிவுகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் பேசிச் சரி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் இரு பிரிவுகளும் இணையும்" என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை AIADMK

இதற்கிடையில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி முறையாகச் செயல்படவில்லையென்றால் அவர் மாற்றப்பட்டுவார் என டிடிவி தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது.

அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்துவரும் நிலையில், டி.டி.வி. தினகரன் இல்லத்தில் அவரது ஆதரவாளர்களர்கள் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பழனியப்பன், ஓ. பன்னீர்செல்வம் சரியாக செயல்படாத காரணத்தால்தான் அவர் மாற்றப்பட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி சரியாகச் செயல்படாவிட்டால் அவரும் மாற்றப்படுவார் என்றும் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்