நள்ளிரவில் மாறுவேடத்தில் கிரண் பேடி அதிரடி!

  • 19 ஆகஸ்ட் 2017
படத்தின் காப்புரிமை Twitter

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நள்ளிரவு நேரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மேற்கொண்ட சோதனை நடவடிக்கை, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற கிரண்பேடி, வழக்கமான ஆளுநர்களை போல் அல்லாமல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு, தலையை துணியால் மூடியபடி ஆளுநர் மாளிகையிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிய பேடி நகரின் முக்கிய பகுதிகளை வலம் வந்துள்ளார்.

பேருந்து நிலையம், வைட் டவுன் பகுதி, நேரு வீதி என சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக அவருடைய இந்தப் பயணம் தொடர்ந்துள்ளது.

இரவு பயணத்தை முடித்துவிட்டு ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரண் பேடி, இரவு நேரத்திலும் புதுச்சேரி பாதுகாப்பானது என்பதை உணர்ந்தேன் என்று கூறினார்.

மேலும், நள்ளிரவு நேரத்தில் நகரில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், எந்தெந்த பகுதியில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டதாகவும் கிரண் பேடி கூறியுள்ளார்.

ஹெல்மட் சர்ச்சை

கிரண் பேடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு காணொளியில், இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவருக்கு பின்னால் கிரண் பேடி அமர்ந்து செல்வதும், இருவரும் ஹெல்மட் இல்லாமல் இருந்ததும் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கிரண் பேடி, ஹெல்மட் இல்லாமல் வெளியே செல்ல நினைத்தது என்பது ஒரு கவனமாக எடுக்கப்பட்ட முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்படக்கூடிய விதத்தில் தோற்றமளிக்க விரும்பியதாகவும், இரவு நேரத்தில் பெண்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வதை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

கிரண் பேடி நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் நகர் வலம் சென்ற காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்