உ.பி.யில் விரைவு ரயில் தடம் புரண்டு 20 பேர் பலி; 80 பேர் காயம்

  • 19 ஆகஸ்ட் 2017
உ.பி.,யில் விரைவு ரயில் தடம் புரண்டதில் 4 பேர் பலி படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA

உத்தர பிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகரில் உள்ள கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயிலின் பத்திற்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 20 பேர் பலியாகியிருப்பதாகவும், 80 பேர் காயமடைந்திருப்பதாகவும் உ.பி., போலீஸ் தெரிவித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) மாலை சுமார் 5.50க்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பூரியிலிருந்து ஹரித்துவாரை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது, கத்தோலி என்ற இடத்தில் ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.

படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA

முன்னர், விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 என்றும், 20 பேர் காயமடைந்திருப்பதாகவும் ரயில்வே துறையின் பேச்சாளர் அனில் சக்ஸேனா கூறியுள்ளதாக பி டி ஐ செய்தி முகமை கூறியிருந்தது.

ரயில் பெட்டிகள் தடம்புரண்ட சம்பவத்தை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தான் தனிப்பட்ட முறையில் தற்போதுள்ள சூழலை கண்காணித்து வருவதாகவும், விபத்து நடந்த பகுதிகளுக்கு மூத்த அதிகாரிகளை உடனடியாக செல்லக்கோரி உத்தரவிட்டுள்ளதாகவும் ட்விட்டரில் கூறியுள்ளார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 3.5 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கடுமையான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்