கும்பகோணம் பள்ளி தீ விபத்து – தமிழகத்துக்கு கற்றுத்தந்த பாடம் என்ன?

  • அ.நாராயணன்
  • இயக்குனர், மாற்றம் இந்தியா
கும்பகோணம் பள்ளி தீ விபத்து தீர்ப்பு - கற்றுத்தந்த பாடம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

(2017ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மாற்றம் இந்தியாவின் இயக்குனர் அ.நாராயணன் எழுதிய கட்டுரை இது.)

கும்பகோணம் பள்ளியொன்றில் 2004-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த கோர தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் குழு, தனது அறிக்கையில் இவ்வாறு கூறியிருந்தது.

''பேராசைக்கும், ஊழல் செயல்பாடுகளுக்கும் 94 அரிய உயிர்கள் பலியானதோடு, இந்த இழிவான நிகழ்வின் தடயங்களை இன்னும் 18 உயிர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுமந்துகொண்டிருப்பர். ஒரு பள்ளிக்கூடம் நடத்தத் தகுதி இல்லாத பள்ளி நிர்வாகத்தினர் அதே வளாகத்தில் 3 பள்ளிகளை நடத்த அனுமதிக்கப்பட்டதில், அதிகாரிகள் ஏய்க்கப்பட்டுள்ளனர் அல்லது ஒரேயடியாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். வளைந்து கொடுக்கும் அதிகாரிகளின் கண்டும் காணாத போக்கினால், சட்டத்தை ஒவ்வொரு கட்டத்திலும் அப்பட்டமாகப் புறந்தள்ளியே, சாதிக்க முடிந்தது''.

இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர், கீழமை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில், 11 பேரை விடுதலை செய்து, 10 பேருக்கு தண்டனை வழங்கியது.

மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றமோ, 7 பேரை விடுதலை செய்தும், மீதம் இருவரின் தண்டனைக் காலத்தை மாற்றியமைத்தும் இப்பொழுது ஆணையிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், இறந்துவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

எதிர்பார்த்தபடியே, குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோருக்கு, இத்தீர்ப்பு மிகுந்த மனவருத்தத்தை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் வழக்கு இழுத்துக்கொண்டே போவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

தீ விபத்தில் 94 மொட்டுகள் உயிருடன் கருகி 12 ஆண்டுகள் முடிந்த பின்னும், தமிழகத்தில், குறைந்தபட்ச இடவசதி, கட்டமைப்பு வசதி, கழிப்பிட, குடிநீர் வசதி, காற்றோட்டம், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர், தீ விபத்துக்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல், கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி ஆகியவற்றைத் துவங்கியுள்ள பள்ளிகளில் பெரும்பாலானவையும் கூட அங்கீகாரம் இல்லாமலும், தரமான, தகுதியான ஆசிரியர்கள் இல்லாமலும் உள்ளன. இவற்றில் ஆகப்பெரும்பானவை, மிக மோசமான சூழலில் இயங்கிவருகின்றன.

இவற்றை எல்லாம் ஆண்டுக்கு ஒருமுறையேனும் ஆய்வு செய்யக் கூட போதுமான அலுவலர்கள் மாவட்ட அளவில் இல்லை. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இதே நிலைதான்.

சம்பத் குழு பரிந்துரை

இனி இப்படிப்பட்ட விபத்துக்கள் நடக்காமல் இருக்கவும், பாதுகாப்பான இடங்களாக பள்ளிகள் இருப்பதை உறுதி செய்யும் விதமாகவும், சம்பத் குழு பல பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அவற்றில் முக்கியமானவை:

1) இதுவரை அனுமதி / அங்கீகாரம் வழங்கப்பட்ட எல்லா பள்ளிகளிலும் மீள் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்,

2) இதுவரை அனுமதி / அங்கீகாரம் பெறாத பள்ளிகள், விதிமுறைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் கடைப்பிடிப்பதை, ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அனுமதி / அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு, தொடர்புடைய அதிகாரி, பள்ளிக்கு சென்று நேரடியாக சரிபார்க்க வேண்டும்.

3) விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் / அனுமதி வழங்கவே கூடாது. சம்பத் குழுவின் 11 பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிட்டது.

சிட்டிபாபு குழு பரிந்துரை

கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்கு முன்பே, அதாவது 2002 மார்ச் மாதம், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், கல்விக்கட்டணம், ஆசிரியர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை முறைப்படுத்த, முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்தது.

சிட்டிபாபு குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு பள்ளிக்கட்டடங்களுக்கான உரிமம், வகுப்பறை வசதிகள், நூலகம், ஆய்வகம், விளையாடுமிடம்,

கழிப்பிடம், குடிநீர் வசதி ஆகியவை தொடர்பாக விதிமுறைகளை, அரசாணையாக வெளியிட்டது.

பட மூலாதாரம், AFP

உச்ச நீதிமன்றம் ஆணை

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து தொடர்பாக 2004-ஆம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை 13, ஏப்ரல்,2009 அன்று வழங்கியது. அதன்படி, பள்ளிகுழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 6 ஆணைகளை பிறப்பித்தது. அதில், முதன்மையாக, பள்ளிகளுக்கு

அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னால், அப்பள்ளிகளின் பாதுகாப்பை எல்லாக் கோணங்களிலும் உறுதிசெய்த பின்னரும், இந்திய தேசிய கட்டடக் குறியீட்டில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி பள்ளிகள் கட்டப் பட்டுள்ளதா என்பதை பொறியாளர்களும், அதிகாரிகளும் ஆய்வு செய்து சான்றிதழ்இருந்தால்

மட்டுமே, அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும், விதிமுறைகளின்படி செயல்படாத பள்ளிகளுக்கு எக்காரணம் கொண்டும், நிபந்தனைகளுடன் கூடிய அங்கீகாரம் அளிக்கக் கூடாது, இந்த ஆணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எல்லா மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

கல்வி உரிமைச் சட்டம்

கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவுகள் 18(1), 19(1) ஆகியவை, எந்த ஒரு பள்ளியும் நிலப்பரப்பு, ஆசிரியர்-மாணவர் விகிதம், வகுப்பறை விதிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றா விட்டால், அங்கீகாரம் பெற முடியாது என்றும், அங்கீகாரம் இல்லாமல் எந்த ஒரு பள்ளியும் செயல்பட முடியாது என்றும் குறிப்பிடுகின்றன.

2011ல் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயற்றிய கல்வி உரிமைச்சட்டத்திற்கான விதிகள் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறது.

''அங்கீகாரம் தரக் கோரும் பள்ளிகள், குறைந்த பட்ச நிலப்பரப்பு மற்றும் மற்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது அவசியம். மேலும் அங்கீகாரம் கோரும் பள்ளிகள், அரசின் வேறு எந்த சட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகளான நிலப்பரப்பு, கட்டடம் குறித்த தேவைகளை நிறைவேற்றி இருக்க வேண்டும்''.

உச்சநீதிமன்ற ஆணை, நிபுணர்களின் பரிந்துரைகள், கல்வி உரிமைச்சட்டம் என்று எவையும், இன்றும் கூட ஏட்டளவிலேயே உள்ளன என்பதுதான் உண்மை.

திரைமறைவு அரசியல்வாதிகளின் பித்தலாட்டம், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் ஆகியோரால், மீண்டும் கும்பகோண பள்ளிவிபத்து போன்று மற்றொரு பெரிய விபத்து நேரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்கின்றன என்று உறுதிபடக் கூறமுடியும்.

விதிமீறல் பள்ளிகள் வழக்கம் போல தங்கள் கல்வி (சுரண்டல்) வியாபாரத்தை, எந்த ஒரு தயக்கமும் இன்றி இன்னும் முனைப்பாக செய்து வருகின்றன.

மாணாக்கர்களின் ''கல்வி நலன் கருதி'' எடுக்கப்படும் முடிவு என்ற போர்வையில்,சுரண்டல் பள்ளிகளின் எல்லா விதிமீறல்களையும், முறைகேடுகளையும் முறைப்படுத்தும் தார்மீகமற்ற ரகசிய நடவடிக்கைகளே, இன்றுவரை, பள்ளிக் கல்வித்துறையில் தொடர்கதையாகி உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

பொது நல வழக்குகள்

பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற்றுவரும் முறைகேடுகள், விதிமீறல்கள் தொடர்பாகவும், அங்கீகாரமற்ற தனியார் பள்ளிகளை மூடக்கோரியும், உச்ச நீதிமன்றத்தின் ஆணைகளை முழுமையாக நடைமுறைப் படுத்தக் கோரியும், மாவட்ட அளவில் ஆய்வுக் குழுக்களை அமைத்து, எல்லா பள்ளிகளையும் தொடர் ஆய்வுக்கு உட்படுத்தக் கோரியும், 'மாற்றம் இந்தியா' சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவை விசாரணையில் உள்ளன.

தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தி,வழக்குகளை இழுத்தடித்து வருகிறது. விதிமீறல்களைக் கண்காணித்து, தடுக்க வேண்டியவர்களின் ஊழல் செயல்பாடுகளால் அப்பாவி மாணவர்கள் தரமற்ற, அடிப்படை வசதிகள் எதுவுமற்ற, ஆபத்துகள் நிறைந்த பள்ளிகளில் தங்கள் கல்வியைத் தொலைக்கும் வாய்ப்புகளே நிதர்சனம்.

அரசு செய்யவேண்டியது என்ன?

கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்ற மற்றொரு பேரழிவைத் தமிழகம் சந்திக்கக்கூடாது. தரமற்ற, சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் விதிமீறல் பள்ளிகளின் அங்கிகாரத்தை, இனியும் முறைப்படுத்த முயலக்கூடாது, அவற்றை ரத்து செய்வதோடு, நடப்பு கல்வியாண்டு முடிவில் இப்பள்ளிகள் மூடப்பட வேண்டும். அங்கீகாரம் இல்லாத, விதிமீறல் பள்ளிகளில் உள்ள மாணாக்கர்கள், அருகாமையில் உள்ள அங்கீகாரம் பெற்ற தனியார் அல்லது அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் சேர்ந்து படிப்பதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வது அரசின் கடமையாகும்.

உச்சநீதிமன்றம் ஆணையிட்டபடி, மாவட்ட அளவில் ஆய்வுக் குழுக்களை ஏற்படுத்தி, எல்லா பள்ளிகளையும், தொடர் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். வெளிப்படையான, பாரபட்சமற்ற செயல்பாடுகள் மூலமே, தரமான கல்வியை குழந்தைகள் பெறுவதோடு, அவர்களது, உயிருக்கும், உடல் நலத்திற்கும் பாதுகாப்பு அளிக்க முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :