''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்படுகிறது'': இன்ஸ்டாகிராமில் வருந்திய கோலி

படத்தின் காப்புரிமை virat.kohli

இந்தியாவில் உள்ள சமூக ஊடகங்களில், பெண் குழந்தை ஒன்று அழுதுகொண்டே சிரமப்பட்டு வீட்டுப்பாடத்தை படிக்கும் காணொளி மிகவும் வைரலாக பரவிவரும் நிலையில், இந்த காணொளி குறித்து தன்னுடைய அதிர்ச்சியை, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களான வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்றவற்றில் ஒரு குழந்தை அழுது கொண்டே சிரமப்பட்டு வீட்டுப்பாடத்தை படிக்கும் காணொளி பரவி வந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதில், குழந்தைக்கு பாடம் சொல்லித் தருபவர் குழந்தையை மிரட்ட, குழந்தை அழுது கொண்டே நோட்டில் எழுதப்பட்டிருக்கும் எண்களை மீண்டும் மீண்டும் படிக்கிறது.

ஒருகட்டத்தில், அழுகையும், கோபமுமாக கலந்து மறந்து போகும் எண்களை சத்தமாக படிக்கிறது குழந்தை. இந்த காணொளியின் ஒரு பகுதியை இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான விராட் கோலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு செய்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கோலி பதிந்த காணொளியை இதுவரை 2.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்பட்டு, குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஒருவரின் சுயநலமே மேலோங்கி இருக்கிறது என்றும், இரக்கம் என்பதே தற்போது ஜன்னலுக்கு வெளியே மொத்தமாக போய்விட்டது என்றும் கோலிகுறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு பரிமாணத்தில் இந்த காணொளி தனக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துவதாகவும், ஒரு குழந்தை மிரட்டப்பட்டால், ஒருபோதும் அதனால் கற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்