``பால் இல்லையென்றால் நான் இல்லை`` - அண்ணன் குறித்து மனம் திறக்கும் ரகுராய்

புகைப்பட கலைஞர் ரகுராய் படத்தின் காப்புரிமை courtesy- Raghu Rai
Image caption இளம் வயதில் பால்

இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ரகுராய் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரது கேமரா வழியாக எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வரலாற்று சாட்சியாக விளங்குகின்றன.

புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டவர்களின் வழிகாட்டியாக இருக்கும் ரகுராய்க்கு, கேமராவை அறிமுகப்படுத்தியது அவரது மூத்த சகோதரர் பால்.

பால் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், தனது அண்ணன் குறித்த நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார் ரகுராய்.

``எனது அண்ணன் பால் தற்போது உயிருடன் இல்லை என்றாலும், அவரது படைப்புகள் எப்போதும் நிலைத்து நிற்கும்.

அண்ணன் பால் மீதிருந்த ஈர்ப்பினாலே பலர் புகைப்பட கலைஞர்களாக உருவெடுத்தனர். அந்தப் பலரில் நானும் ஒருவன்.

எனது தந்தைக்கு நான் ஒரு பொறியியல் வல்லுனராக வேண்டும் என ஆசை. எனது 22-ஆவது வயதில் கட்டட பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆனால், ஏனோ வேலை எனது மனதுக்கு நெருக்கமானதாக இல்லை.

1962-63 காலகட்டத்தில் அண்ணன் பால் புகைப்பட உலகத்திற்குள் நுழைந்தார். ஹிமாச்சல் பிரதேச அரசின் சுற்றுலாத்துறை புகைப்பட கலைஞராக தனது பணியை ஆரம்பித்த அவர், பிறகு இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைமைப் புகைப்பட கலைஞராக உயர்ந்தார்.

படத்தின் காப்புரிமை Raghu Rai
Image caption ரகுராயின் முதல் புகைப்படம்

எனது முதல் புகைப்படம்

வேலையில் ஈடுபாடு இல்லாத நான், வேலையை விட்டுவிட்டு அண்ணனுடன் தங்கியிருந்தேன். அண்ணனின் வீடு எப்போதும் புகைப்பட கலைஞர்களால் நிரம்பியிருக்கும்.

புகைப்படங்கள் பற்றியும், கேமரா பற்றியும் அவர்கள் எந்நேரமும் பேசிக்கொண்டு இருப்பார்கள். அண்ணனுடன் நான் தங்கியிருந்த இரண்டு வருடமும் இப்படியே கழிந்தது.

ஒரு நாள் அண்ணனின் நண்பருடன், ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன். வழியில் ஒரு கழுதையை பார்த்தபோது, அதனை புகைப்படம் எடுக்கலாம் என கேமராவை எடுத்தேன்.

உடனே அந்த கழுதை ஓட ஆரம்பித்தது. நானும் அதைத் துரத்திக்கொண்டே ஓடினேன். கழுதைச் சோர்வடையும் வரை எங்களது ஓட்டம் தொடர்ந்தது. கழுதை நின்றவுடன் அதனை நான் புகைப்படம் எடுத்தேன்.

படத்தின் காப்புரிமை S Paul
Image caption பால் எடுத்த புகைப்படம்

பிறகு நான் எடுத்த புகைப்படத்தை பார்த்த அண்ணன், அதை பிரிண்ட் எடுத்து சில வெளிநாட்டு நாளிதழ்களுக்கு அனுப்பி வைத்தார்.

நான் எடுத்த முதல் புகைப்படம், லண்டன் டைம்ஸ் நாளிதழில் அரைப்பக்கத்திற்கு பிரசுரமாகியிருந்தது. என்னாலும் இந்த வேலையைச் செய்யமுடியும் என நம்பிக்கை வந்தது அப்போது தான்.

நான் எடுத்த புகைப்படத்தை அண்ணன் பால், டைம்ஸ் நாளிதழுக்கு அனுப்பவில்லை என்றால், ரகு ராய் என்ற புகைப்பட கலைஞன் இந்த உலகத்திற்குத் தெரிந்திருக்க மாட்டான்.

படத்தின் காப்புரிமை Prashant Panjiar
Image caption பால், ரகுராய்

'எப்போதும் உத்வேகம் தருவார்'

அண்ணன் பால், இண்டியன் எக்ஸ்ப்ரஸில் தலைமைப் புகைப்பட கலைஞராக இருந்த காலம், செய்தி புகைப்படங்களின் பொற்காலம் என கூறலாம்.

விளையாட்டு புகைப்படம், அரசியல் புகைப்படம் என புகைப்படக்கலையில் பல மாற்றங்களை அண்ணன் கொண்டுவந்தார். அவருக்கு அடுத்து வந்தவர்களும், அதனை மேலும் மேம்படுத்தினர்.

1960-களில், புகைப்படங்களில் உள்ளவர்களின் முகச் சுருக்கங்களை நீக்குவது, அவர்களை வெண்மையாக்குவது போன்ற மாற்றங்கள் செய்வதை எதிர்த்த முதல் புகைப்பட கலைஞர் அண்ணன் பால்தான்.

படத்தின் காப்புரிமை S PAUL
Image caption பால் எடுத்த புகைப்படம்

அண்ணன் எப்போதும் என்னைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பார். நான் எடுத்த புகைப்படம் சரியில்லை என்றால் திட்டவும் செய்வார். அப்போதெல்லாம், அவர் பின்பற்றும் சில செயல்முறைகளை சொல்லிக்கொடுப்பார்.

அண்ணனின் புகைப்பட தரம்

புகைப்படங்களின் தரத்தில் அண்ணன் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார். வெளிச்சம், எடுக்கும் விதம், நெகட்டிவ்,பிரிண்ட் என அண்ணனின் புகைப்படம் அனைத்திலும் தரமாக இருக்கும்.

தனது 20-ஆவது வயதில் முதல் கேமராவை அண்ணன் வாங்கினார். சந்தையில் ஏதேனும் புது கேமரா, லேன்ஸ் வந்தால் போதும் முதல் ஆளாகச் சென்று வாங்கிவிடுவார். ஆனால், நான் அப்படி இல்லை. ஒரே கேமராவை வைத்து காலம் ஓட்டுவேன்.

படத்தின் காப்புரிமை Jyoti Bhatt
Image caption தனது சகாக்களுடன் ரகுராய்

புகைப்படம் மட்டுமல்ல இசை, இலக்கியம் என அண்ணனின் ஆர்வமும் திறமையும் பரந்த அளவில் இருந்தது.

மீண்டும் சொல்கிறேன், பால் இல்லை என்றால் ரகுராய் இல்லை.``

இவ்வாறு பிபிசி செய்தியாளர் பிரதீப் குமாரிடம் ரகுராய் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்