எடப்பாடியுடன் சமரசம்: துணை முதல்வரானார் ஓ.பி.எஸ்

Twitter படத்தின் காப்புரிமை Twitter

தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், மாநில அமைச்சராக கே.பாண்டியராஜனும் இன்று (திங்கள்கிழமை) மாலை பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்வில் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் வசம் நிதி, வீட்டுவசதி, கிராமப்புற வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற திட்டமிடல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கே.பாண்டியராஜனுக்கு தமிழ் ஆட்சி மொழித் துறை மற்றும் தொல்லியல் துறை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆளுநர் மாளிகைக்கு வரும் முன்பு பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக அமைச்சரவையில் அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி வசம் உள்ள கால்நடைத்துறை, உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடமும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கவனித்து வந்த இளைஞர் விவகாரங்கள் துறை, பி.பாலகிருஷ்ண ரெட்டியிடமும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, அமைச்சர் எம்.சி. சம்பத் வகித்து வந்த சுரங்கம் மற்றும் கனிம வளத் துறைகளின் பொறுப்பு, அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

11 பேர் குழு அறிவிப்பு:

முன்னதாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தினர். இருவரின் ஆதரவு தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கூறுகையில், இருவரின் தலைமையிலான அணிகள் இணைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "அதிமுகவை வலுப்படுத்த கட்சித் தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி. முனுசாமி, ஒருங்கிணைப்பு துணை அமைப்பாளராக வைத்திலிங்கம் இணைந்து பணியாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பழனிசாமி குறிப்பிட்டார்.

அதிமுகவை வலுப்படுத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு நியமிக்கப்படும் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் செயல்பட்டு வந்த அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதே தங்களுடைய நோக்கமாக இருக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சசிகலா நீக்கமா?

இக்கூட்டத்தின் முடிவில் பேசிய வைத்திலிங்கம், "சசிகலாவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி தீர்மானிக்கும்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்