தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள்: ஆளுநரைச் சந்திக்க முடிவு

  • 21 ஆகஸ்ட் 2017
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சமாதியில் தியானம்
Image caption டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சமாதியில் தியானம்

அ.தி.மு.கவில் இரு பிரிவுகளாகச் செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அணியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து தியானத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமையன்று ஆளுநரைச் சந்திக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமையன்று இரவு சுமார் எட்டேகால் மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல்.ஏக்களும் வந்து சமாதி முன்பாக அமர்ந்தனர்.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களும் சுமார் 20 நிமிடம் சமாதி முன்பாக அமர்ந்திருந்தனர்.

அப்போது, அங்கு கூடியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், தற்போது சிறையில் உள்ள சசிகலாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

சுமார் இருபது நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்ததைப் போல அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பிறகு ஜெயலலிதாவின் சமாதிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினரான தங்க தமிழ்ச்செல்வன், "நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ. பன்னீர்செல்வம் அரசுக்கு எதிராக வாக்களித்தார். அவரை இவ்வளவு வலுக்காட்டாயமாக சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? எங்களை ஒரு வார்த்தை கேட்க வேண்டுமா, வேண்டாமா? நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருக்காவிட்டால் இந்த ஆட்சி அமைந்திருக்காது. அப்படியிருக்கும் நிலையில், யாரைக் கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது? எங்களுக்கு என்ன பாதுகாப்பு? 10 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தை மதிக்கும் அவர்கள், 20 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் எங்களை மதிக்காதது ஏன்?" என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் அ.தி.மு.க. விதிகளின்படி பொதுக்குழுவைக் கூட்டவும் கட்சியிலிருந்து யாரையும் நீக்கவும் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

செவ்வாய்க்கிழமைக் காலையில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துப் பேசவிருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தெரிவித்தார்.

ஆலோசனை

டிடிவி தினகரன் தரப்பினர் திங்கள்கிழமை காலை முதலே, தினகரனின் வீட்டில் கூடி ஆலோசனை செய்துவந்தனர்.

அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைந்துவிட்ட நிலையில், தினகரன் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. தனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் 23ஆம் தேதி எல்லோரையும் சந்திக்கப்போவதாக தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.கவிற்கு தற்போது 135 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இப்போது 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராகவும் இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில், தற்போதைய அரசுக்கு பெரும் நெருக்கடி உருவாகும்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்