எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுனரிடம் கடிதம்

  • 22 ஆகஸ்ட் 2017

தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சரான எடப்பாடி கே. பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர்.

அ.தி.மு.கவின் இரு அணிகளும் நேற்று (திங்கள்கிழமை) இணைந்ததாக அறிவித்ததையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அதே அணியைச் சேர்ந்த மாஃபா. பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தனித்தனியாக கடிதம் அளித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தானும் மேலும் 121 சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்து கடிதம் கொடுத்ததாகவும், அவர் அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்காகப் பாரபட்சம் காட்டுவது, அரசு எந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவது, ஊழல் ஆகிய காரணங்களால் அவரது செயல்பாடுகள் மீது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்துவிட்டதாக அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்வதாகவும் ஊழலை ஊக்குவிப்பதாகவும் அதனால் கட்சியின் பெயர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசியல்சாஸன விதிமுறைகளுக்கு ஏற்பட இந்த அரசு நடக்காது என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Image caption டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சமாதியில் தியானம்

இந்த அரசு முழுமையாக ஊழலில் ஊறித் திளைப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஓ. பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையைச் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், வெகு விரைவிலேயே அந்தக் குற்றச்சாட்டை சுமத்திய பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சராக அரசில் இணைத்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் தன் ஊழல் நடவடிக்கைகளை மறைப்பதாக தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, இதற்கு முன்பாக எடப்பாடிப் பழனிச்சாமிக்கு ஆதரவாகத் தான் அளித்த ஆதரவுக் கடிதத்தைத் திரும்பப்பெற்றுக்கொள்வதாகவும் ஆகவே ஆளுனர் இந்த விவகாரத்தில் குறுக்கிட்டு, அரசியல்சாஸன ரீதியாக தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அடங்கிய ஒரே மாதிரியான கடிதத்தை, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்களும் தனித்தனியே கையெழுத்திட்டு ஆளுனரிடம் அளித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதா?

234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் அ.தி.மு.கவின் பலம் 135ஆக உள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இந்த நிலையில், 19 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கான ஆதரவை திரும்பப்பெற்றிருக்கின்றனர்.

மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் அ.தி.மு.க. உறுப்பினர்களாகக் கருதப்படும் உ. தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகிய பிற கட்சிகளைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் என்ன முடிவெடுக்கப்போகிறோம் என்பதைத் தெளிவாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்