முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐந்து பெண்கள் யார்?

சில இஸ்லாமியர்களால் பின்பற்றப்பட்டு வந்த முத்தலாக் முறை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 'தலாக்' என்னும் சொல்லை வெறும் மூன்றே மூன்று முறை சொல்வதன்மூலம், ஒரு பெண்ணை உடனடியாக அவரது கணவர் விவாகரத்து செய்து விடலாம் என்னும் அந்த நடைமுறை, தங்கள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று ஐந்து பெண்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

யார் அந்த ஐந்து பெண்கள்?

அஃப்ரீன் ரெஹ்மான், ஜெய்பூர், ராஜஸ்தான்

அஃப்ரீன் ரெஹ்மான் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கடந்த 2014-ஆம் ஆண்டு, ஜெய்ப்பூரில் நடந்த ஒரு ஆடம்பரமான திருமண விழாவில், வழக்கறிஞர் ஒருவரை மணந்தார். தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக, தன் கணவர் வலியுறுத்தியதன்பேரில், தன் வேலையை விட்டுவிட்டார்.

Image caption அஃப்ரீன் ரெஹ்மான்

"திருமண வாழ்க்கை நல்ல விதமாக அமைய வேண்டும் என்பதற்காக வேலையை விட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. என் கணவரின் குடும்பத்தினர் என்னிடம் அடிக்கடி ஏதாவது வரதட்சணை கேட்டு வந்தனர். அவை மறுக்கப்பட்டபோதெல்லாம், நான் வன்முறைக்கு உள்ளானேன். இதனால், நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்," என்கிறார் அஃப்ரீன்.

திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் கணவர் வீட்டை விட்டு வெளியேற கட்டாய படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டும் அவர், தன் தாயுடன் வசிக்கச் சென்றார். அவர் தந்தை ஏற்கனவே இறந்து போயிருந்தார். சில மாதங்கள் கழித்து நடந்த ஒரு கார் விபத்தில், அவரது தாயும் உயிரிழந்தார். தனிமையை எதிர்கொள்ளத் தொடங்கினார் அஃப்ரீன்.

அதே விபத்தில் மிகவும் காயமடைந்த அஃப்ரீன், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தபோது, அவரது கணவர், அஃப்ரீனின் சகோதரியின் வீட்டுக்கு ஒரு காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி அனுப்புகிறார். அதில், "தலாக், தலாக், தலாக்" என்று எழுதப்பட்டிருந்தது.

"எனக்கு அது மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. என்னுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட அந்தக் கோரமான முடிவை அறிந்ததும், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை," என்றார் அஃப்ரீன்.

சமூக செயல்பாட்டாளரான அவரது உறவினர் ஒருவர், 2016-ஆம் ஆண்டு, நீதிமன்றத்தை அணுகி அந்த விவாகரத்தை ரத்து செய்யவும், அவரது கணவரின் குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளைப் பதிவு செய்யவும் ஊக்குவிக்கிறார். அவரது கணவரும், கணவரின் தாயாரும் கைது செய்யப்பட்டு நான்கே நாட்களில் பிணையில் விடுதலை ஆயினர். அவர்கள் அஃப்ரீன் கூறும் புகார்களை மறுத்தனர்.

"இந்தக் களங்கத்துடனே நான் இனி வாழ வேண்டும். ஏனெனில், இந்தியாவில், விவாகரத்துக்கு காரணமானவர்களாக எப்போதும் பெண்களே பார்க்கப்படுகின்றனர்," என்று கூறும் அஃப்ரீன், தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக இந்த வலக்கை தான் தொடுக்கவில்லை என்றும், நீதியை நிலைநாட்டவும், இனிமேல் இதுபோல் பெண்கள் நடத்தப்படக் கூடாது என்பதை உறுதி செய்யவுமே தான் போராடுவதாகவும் கூறுகிறார்.

ஷயரா பானு, காசிப்பூர், உத்தராகண்ட்

"உடனடியாக முத்தலாக் வழங்கி ஒரு பெண்ணின் வாழ்வை மோசமாக மாற்றுவதுடன், அவளது குழந்தைகளின் எதிர்காலத்தையும் சீர்குலைக்கிறது," என்கிறார் ஷயரா.

Image caption ஷயரா பானு

காசிப்பூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில், ஷயாரா இருந்தபோது, அவரது கணவரிடம் இருந்து அவருக்கு ஒரு விரைவு அஞ்சல் வருகிறது. "நான் உனக்கு மூன்று முறை தலாக் வழங்குகிறேன்," என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தார் அவரது கணவர். 15 ஆண்டு கால மண வாழ்க்கை ஒரே வரியில் முடித்துவைக்கப்பட்டது.

"நான் பாதிக்கப்பட்டுவிட்டேன். ஆனால், வரும் தலைமுறைகளும் அதனால் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான், நான் உச்ச நீதிமன்றம் சென்றேன்," என்கிறார் அவர். அவர் வழக்கு தொடர்ந்தது 2016-ஆம் ஆண்டு.

கடந்த 2015-ஆம் ஆண்டு, அவரது கணவர் அவரை விவாகரத்து செய்தது முதல், ஷயரா தன் மகளையும் மகனையும் பார்க்கவில்லை. காசிப்பூரில் உள்ள ஒரு நீதிமன்றத்தில், அவர்களை சந்திக்க வேண்டி அவர் மனு செய்திருந்தார். ஆனால், 2016-இல் மறுமணம் செய்துகொண்ட அவரது கணவர், இன்னும் நீதிமன்றத்திற்குப் பதில் அளிக்கவில்லை.

ஒரு வேலை பெறும் நோக்கில், அவர் எம்.பி.ஏ படித்து வருகிறார். திருமண பந்தத்தில் அவர் நம்பிக்கையை இழந்துள்ளார். "இன்னொரு நபரும் என்னை இவ்வாறே நடத்த மாட்டார் என்று என்ன நிச்சயம்," என்கிறார் அவர். "பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போதுதான் என் மகளும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்," என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார் ஷயரா.

இஷ்ரத் ஜஹான், கொல்கத்தா, மேற்கு வங்கம்.

துபாயில் இருக்கும் தனது கணவர், தனக்கு தொலைபேசி மூலம் அழைத்து, மூன்று முறை "தலாக்" என்று கூறி, 15 ஆண்டு கால திருமண உறவை திடீரென முடித்து வைத்தார். பின்னர் வேறு பெண்ணை அவர் மறுமணமும் செய்துகொண்டார்.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption இஷ்ரத் ஜஹான்

அது ஒரு நீண்ட, மகிழ்ச்சியற்ற திருமணம். மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றேடுத்ததற்காகத் தொடர்ந்து தன் கணவர், தன்னை அவமானப்படுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறும் இஷ்ரத், தன் சகோதரருடன் பாலுறவு கொள்ளவும் அவர் வற்புறுத்தியாதாகக் கூறுகிறார்.

2014-ஆம் ஆண்டு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. "ஆனால் அது மிகவும் தாமதமானது. வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அவர் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்," என்று இஷ்ரத் கூறுகிறார். அவர் தனது நான்கு குழந்தைகளையும் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர் குற்றம்சாட்டுகிறார். தற்போது அந்த குழந்தைகள் அவர்கள் தந்தை மற்றும் அவரது இரண்டாவது மனைவியுடன் வசிக்கின்றனர்.

இஷ்ரத் ஜஹான் கல்வி அறிவு இல்லாதவர். எனினும், முத்தலாக் முறை குரானில் குறிப்பிடப்படவில்லை என்பதைப் புரிந்து வைத்துள்ளார். "குரானின்படி, ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்பினால், தன் முதல் மனைவியின் அனுமதியைப் பெற்றுருக்க வேண்டும்," என்கிறார்.

ஒரு உள்ளூர் அரசு சாரா அமைப்பின் உதவியுடன் 2016-ஆம் ஆண்டு அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன் கணவருக்கு எதிராக குடும்ப வன்முறைப் புகாரும் கணவரின் சகோதரருக்கு எதிராக பாலியல் சீண்டல் புகாரும் பதிவு செய்துள்ள இஷ்ரத், தன் கணவருடன் மெதுனு சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதியா சப்ரீ, சஹாரன்பூர், உத்தரப்பிரதேசம்

தன் சகோதரரின் அலுவலகத்திற்கு, தன் கணவர் ஒரு கடிதம் அனுப்பிய பின்னரே அதியா சப்ரீ தான் விவாகரத்து செய்யப்பட்டதை அறிந்தார். அக்கடிதத்தில், "தலாக், தலாக், தலாக்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Image caption அதியா சப்ரீ

"இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே திருமணம் நடக்க முடியும் என்று ஷரியா சட்டம் சொல்கிறது. ஆனால், தலாக் மட்டும் எப்படி ஒரு தரப்பால் கொடுக்க முடியும்," என்று கேட்கிறார் அதியா. "என்னை அவர்அழைக்கவோ, இதுபற்றிப் பேசவோ இல்லை. அதனால்தான் நான் இந்த மணமுறிவை ஏற்றுக்கொள்ளவில்லை," என்கிறார் அவர்.

முத்தலாக் முறை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் 2017-ஆம் ஆண்டு அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

அவரின் இரண்டரை ஆண்டு கால மனா வாழ்க்கையும் மிகவும் கசப்பாகவே இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றேடுத்தற்காகவே தான் இவ்வாறு தண்டிக்கப்படுவதாகக் கூறுகிறார். தன் கணவரின் குடும்பத்தார் தன்னை தாக்கியதாகவும், ஒரு முறை அவர்கள் தனக்கு விஷம் வைத்துக் கொல்லவும் முயன்றதாகக் குற்றம்சாட்டுகிறார். தன் கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தபோது வீட்டிலிருந்து தான் வெளியே வீசப்பட்டதாகவும், அதனால் சிறுது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

அதன் பின்னரே, அந்தக் கடிதம் வருகிறது. அதியாவின் புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரது கணவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குடும்ப வன்முறை வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

"நான் பயந்திருந்தால் என் மகள்களை யார் பார்த்துக்கொள்வார்கள். என் உரிமைகளுக்காக அவர்களிடம் போராடினேன்," என்கிறார் அதியா.

குல்ஷன் பர்வீன், ராம்பூர், உத்தரப்பிரதேசம்

படித்த மணமகன் ஒருவரைத் தேடுவது, குல்ஷனின் குடும்பத்துக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்த குல்ஷன், ராம்பூரில் அதிகம் படித்த பெண்களில் ஒருவர்.

Image caption குல்ஷன் பர்வீன்

இறுதியாக, அவர் மணந்து கொண்ட, 'மதிப்பு மிக்க' குடும்பத்தைச் சேர்ந்த நபர் அவரை விடவும் குறைவாகவே படித்திருந்தார். ஆனால், அந்தத் திருமணம் நிலைக்கவில்லை. மாத இறுதி நாட்களில் குல்ஷன் அவரது பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

"கருவுற்று இருந்தபோது ஆறு மாதங்களும், மகப்பேருக்குப் பிறகு எட்டு மாதங்களும் அவர் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மீண்டும் தன் கணவர் வீட்டுக்கு குல்ஷன் சென்றபோது, அவரது கணவர் அவருக்கு நல்ல உணவு கொடுக்காதது மட்டுமல்லாமல், அடிக்கவும் செய்தார்," என்கிறார் குல்ஷனின் சகோதரர் ரயீஸ்.

தன் குழந்தைக்கு ஒரு குடும்பம் வேண்டும் என்பதற்காக அவர் மீண்டும் மீண்டும் தன் கணவர் வீட்டுக்குச் சென்றார். ஒரு முறை தன் கணவரால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டபின்னர், அவர் காவல் துறையில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து உள்ளூர் பெரியவர்கள் இச்சண்டையில் தலையிட்ட பின்னர், தம்பதிகள் இணக்கமாக வாழ ஒப்புக்கொண்டனர், என்கிறார் ரயீஸ்.

குல்ஷனின் கணவர், பின்னர் ஒரு கடிதத்தை காவ துறையினரிடம் அளிக்கிறார். அதில், குல்ஷனுக்கு முத்தலாக் வழங்கி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். முத்தலாக் முறையை சட்டவிரோதமாக்கி, தங்கள் மணமுறிவை ரத்து செய்ய 2016-இல் அவர் உச்ச நீதிமன்றத்தை அவர் அணுகினார்.

"தன் கணவர் வீட்டுக்கு அவர் மீண்டும் செல்ல விரும்புவதற்கான ஒரே காரணம், குல்ஷனின் மகன் ஒரு குடும்பத்துடன் வளர வேண்டும் என்பதே. எவ்வளவு காலம்தான், எங்கள் பெற்றோரால் அவளைப் பார்த்துக்கொள்ள முடியும்," எனக் கேட்கிறார் ரயீஸ்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :