முத்தலாக் தீர்ப்பு:`முஸ்லிம் பெண்களிடமிருந்து இந்துப் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்'

  • 22 ஆகஸ்ட் 2017

"முத்தலாக்" விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, முஸ்லிம் பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றும் அதைக் கொண்டாட வேண்டும் என்றும் அந்த வழக்கில் முக்கிய மனுதாரரான ஷயரா பானு கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது ஷயரா பானு தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவரது கண்வர் ரிஸ்வான் அகமது 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஒரு கடிதத்தில் மூன்று முறை "தலாக்" எனக் குறிப்பிட்டு அவரை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு தங்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் அவரது கணவர் கொண்டு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி ஷயரா பானு முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

படத்தின் காப்புரிமை Twitter

இவர் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரு்நது முஸ்லிம் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மூலம் முஸ்லிம் சமுதாய பெண்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. இதை கொண்டாட வேண்டும்" என்கிறார் ஷயரா பானு.

"முஸ்லிம் பெண்களின் நிலையைப் புரிந்து கொண்டு, இந்த தீர்ப்பை சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தும் ஷயரா பானு, விரைவில் முத்தலாக் வழக்கத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்.

பிரதமர் மோதி வரவேற்பு

முஸ்லிம் மதத்தினர் விவாகரத்து செய்ய பயன்படுத்தும் முத்தலாக் வழக்கத்தை அரசியலமைப்பு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. முஸ்லிம் பெண்களுக்கு சம வாய்ப்பையும் பெண்கள் அதிகாரமளித்தலுக்கு சக்திமிக்க நடவடிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக பயன்பாட்டாளர்களும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா "முஸ்லிம் பெண்களின் வாழ்வில் புதிய தொடக்கமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "இந்த தீர்ப்பு மூலம் முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரஞ்சீத் சுர்ஜிவாலாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமது டிவிட்டர் பக்கத்தில் "நீண்ட காலத்துக்கு முன்பே சட்டமியற்றும் அமைப்பு செய்ய வேண்டியதை தற்போது மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் கூறியுள்ளது.

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தமது டிவிட்டர் பக்கத்தில் "இத்தீர்ப்பு இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்துக்கு மிகப் பெரிய அடியாகும். ஆனால், இது பெண்கள் சுதந்திரம் கிடையாது. பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய முஸ்லிம் பெண்கள் இயக்கத்தின் இணை நிறுவனர் ஜாகியா சோமன், "இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆக கருதப்படும் நாள். நீதிமன்றத்தில் மட்டுமின்றி சட்டமியற்றும் அமைப்புகளிடமும் எங்களுக்கு நீதி கிடைக்க உரிமை வழங்கியுள்ள நாள். முத்தலாக்கை ஒழிக்க நாங்கள் நடத்தி வந்த போராட்டத்தின் ஒரு பகுதி இது" என்று கூறினார்.

பிரபல பெண் பத்திரிகையாளரான சாகரிகா கோஷ், "இந்து பெண்கள், முத்தலாக் ஒழிப்புக்காக போராடிய முஸ்லிம் பெண்களிடம் இருந்து அச்சமின்றி மத வழக்கத்துக்கு எதிராக குரல் கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சமூக பயன்பாட்டாளர்கள் ஆதரவு

டிவிட்டரில் சமூக பயன்பாட்டாளரான ஜோதி ஷிராலீ, "இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க காரணமான ஷயரா பானுவுக்கே அனைத்து பெருமையும் சேரும்" என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களான டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் யார் இந்த ஷயரா பானு என்று கேள்வி எழுப்பி பலரும் அவரது கடந்த வாழ்க்கையை விவரிக்கும் ஊடகங்களின் செய்திப் பக்கங்களை மேற்கோள்காட்டி பதிவிட்டு வருகின்றனர்.

இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறுகையில், "அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்து நான்கு விலகும் முன்பு ஆஜரான கடைசி வழக்கு இது. அதில் முஸ்லிம் மத பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது நிறைவாக உள்ளது" என்றார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :