"நீட் முடிவு பொது சுகாதாரத் துறையை, கல்வித்துறையை பெரிதும் பாதிக்கும்"

நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகளின்படி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பொது சுகாதாரத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கல்வித்துறை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சமச்சீர் கல்விக்கு ஆதரவாகவும், நீட்டுக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்தவரும் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் நிர்வாகியுமான பிரின்ஸ் கஜேந்திரபாபு, இந்தத் தீர்ப்பின் விளைவாக ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு குறையும் என்று கூறியுள்ளார்.

இதனால் இயல்பாகவே கிராமப்புறங்களில் வேலை செய்வதற்கு முன்வரும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும்.

கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்யும் அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் அளிக்கப்பட்டுவந்த இடஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாதம் ரூ.40 ஆயிரத்துக்கும், ரூ.50 ஆயிரத்துக்கும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்ய டாக்டர்கள் முன்வருவது குறையும் என்று கூறுகிறார் பிரின்ஸ்.

தமிழகத்தில் மட்டுமல்ல குஜராத்திலும்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, குஜராத்தில்கூட மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிற வாய்ப்பு குறைவுதான். அதனால்தான் நீட் தேர்வில் மாநில, சி.பி.எஸ்.சி. போன்ற பாடத்திட்டங்களில் படித்து தேறியவர்களுக்கு குறிப்பிட்ட விகிதாசாரப்படி மருத்துவக் கல்வியில் சேர்ப்பதற்கு வழி செய்யும் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது குஜராத் அரசு. அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது என்கிறார் அவர்.

தமிழக அரசும் மத்திய அரசும் இழுத்தடித்து இந்தப் பிரச்சினையில் துரோகம் இழைத்துவிட்டன என்கிறார் அவர்.

``பொதுமக்கள் இது எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்வி தொடர்புடைய பிரச்சினை என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. இது பொது சுகாதாரத் துறையை, அரசு மருத்துவமனைகளை பெரிதும் பாதிக்கும்'' என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

பட்டமேற்படிப்பு இடங்களில் 60 சதவீதமும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்புப் படிப்புக்கான இடங்கள் 100 சதவீதமும் நீட் தேர்வின் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் அரசு மருத்துவனைகளில், மருத்துவக் கல்லூரிகளில் வேலை செய்ய போதிய பட்டமேற்படிப்பு படித்த மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள் என்கிறார் அவர்.

பின்னுக்குத் தள்ளப்படும் மாநிலப் பாடத்திட்டம்

மருத்துவ இடங்கள் என்று வரும்போது சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின்படி படித்தவர்கள் 60 சதவீதம் இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மருத்துவக் கல்வி இடங்கள் அதிகம். இவற்றையும், மாநில உரிமையையும் தமிழகம் இழக்கும் என்கிறார் ரவீந்திரநாத்.

படத்தின் காப்புரிமை Getty Images

உயர் சிறப்புப் படிப்புகளுக்கான தேர்வு மையங்கள் வட இந்திய நகரங்களில் இருப்பதால் பெண் மருத்துவர்கள் தொலைதூரம் சென்று தேர்வு எழுதுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால், பெண் உயர்சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் 192 உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. இந்தியாவிலேயே இதுதான் அதிகம். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள் கூட தங்கள் 100 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்காதபோது, தமிழ்நாடு தமது வரிப்பணத்தில் கட்டி உருவாக்கிய மருத்துவ இடங்களை ஏன் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கவேண்டும். தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை 100 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும்படி கோர முடியுமா? தனியார் பல்கல்கலைக்கழகத்துக்கு உள்ள உரிமைகூட மாநில அரசுக்கு இல்லையா என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத பெண் மருத்துவர் ஒருவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிளஸ்டூ படிப்பில் சேர்ந்த பிறகு மாணவர்கள் இனி பிளஸ் டூ பாடங்களைப் படிப்பதற்கு பதிலாக நுழைவுத் தேர்வுக்குப் படிப்பார்கள் என்கிறார் தமிழக அரசின் உறுப்பு மாற்றுத் திட்டத்தின் முன்னாள் அமைப்பாளர் டாக்டர் ஜெ.அமலோற்பவநாதன்.

நீட் முடிவு மாநில உரிமையின் மீதான தாக்குதல் என்று சொல்லும் அவர், பலரும் அஞ்சுவதைப் போலல்லாமல் தமிழக மாணவர்கள் நீட்டிலும் நல்ல தேர்ச்சி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

பயிற்சி மையங்கள் முளைக்கும்

இத் தீர்ப்பின் விளைவாக, நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மாநிலம் முழுவதும் முளைக்க ஆரம்பிக்கும். அவர்கள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பார்கள். இத்தகைய பயிற்சி மையங்களில் படிப்பவர்களாலேயே மருத்துவ இடங்களைப் பெறமுடியும் என்ற நிலை வரும். அரசுப் பள்ளிகளிலும், சிறு நகரப் பள்ளிகளிலும் கடுமையாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த ஆண்டு மருத்துவக் கல்வி வாய்ப்பை இழப்பார்கள். இது, அரசுப் பள்ளிகளை விட்டு நீட் பயிற்சியையும் சேர்த்து நடத்தும் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை விரட்டும் என்கிறார் கல்வி தொடர்பான பிரச்சினைகளை தொடர்ந்து எழுதிய பத்திரிகையாளர் பாரதி தம்பி. நீட் தேர்வு தொடர்பாக சிறப்பு அறிவுத் திறன் பெற்ற ஆசிரியர்களுக்கான தேவை இப்போது அதிகரிக்கும் என்கிறார் இவர்.

நாளை மறுநாள் நீட் கவுன்சலிங்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நீட் எழுதிய மாணவர்களுக்கான மருத்துவக் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறும் என்று தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்