எத்தியோப்பியாவில் ஒரு நரகத்தின் நுழைவாயில்

"நரகத்தின் நுழைவாயில்" படத்தின் காப்புரிமை Getty Images

உலகின் எந்தவொரு பகுதியாக இருந்தாலும் அங்கு உயிர்கள் வாழ வெப்பம், குளிர், காற்று, தண்ணீர் அனைத்தும் தேவை. அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ இருந்தால் அங்கு உயிர்கள் வாழ்வது அரிதானதே.

கிழக்கு ஆப்பிரிக்காவின் எதியோப்பியாவில் உள்ள அனல் தகிக்கும், உலகின் மிக வெப்பமான இடமாக அறியப்படும் இடம் 'தானாக்கில் டிப்ரஷன்'.

இங்கு நிலப்பரப்பின் கீழே பூமியின் மூன்று புவி அடுக்குகள் (continental plates) ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன.

இந்த உராய்வினால் பூமிக்கு அடியில் இருக்கும் லாவாவும் அமிலங்களும் வெளியேறுகின்றன. தானாக்கில் டிப்ரஷன் பகுதியில் வழக்கமான வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ். இந்தப் பகுதி 'நரகத்தின் நுழைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption உலகின் தொலைதூர இடங்களில் ஒன்றான தானாக்கில் டிப்ரஷன்

உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு

இங்கு, தண்ணீரில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருந்தபோதிலும் அண்மையில் இங்கு உயிர்கள் வாழ்வதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

ஆஃப்ரிக்காவின் இந்தப் பகுதியில் ஆராய்ச்சிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இது எதியோப்பியாவின் வடமேற்கில், எரிமலைப் பகுதியில் கடல் மட்டத்திற்கு கீழே 330 அடி (100 மீ) கீழே அமைந்திருக்கும் நிலப்பரப்பு. அரிதாகவே மழை பெய்யும் இங்கு எரிமலை வெடிப்பதும், லாவா குழம்பு வெளிப்படுவதும் இயல்பானது.

பி.எச் என்பது தண்ணீரில் இருக்கும் ஹைட்ரஜனின் அளவை குறிப்பிட பயன்படும் குறியீடு. தானாக்கிலில் தண்ணீரின் பி.எச் அளவு 0.2. உலகின் வேறு எந்தப் பகுதியில் இருக்கும் நீரிலும் நைட்ரஜன் இவ்வளவு குறைவாக இருப்பதில்லை.

இரண்டு செயல்படும் எரிமலைகள் இங்கு உள்ளன. அவற்றில் 'இர்தா அலே' என்ற எரிமலை தொடர்ந்து லாவாவை வெளிப்படுத்துகிறது. இதன் அருகில் உருவாகியுள்ள அமிலக் குளம் எப்போதும் கொதிநிலையில் இருப்பதால் நித்தமும் நீராவி எழும்பி, புகை சூழ்ந்து காணப்படும். இந்தப் பகுதி `டாலோல்` என்று அழைக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமிலக்குளத்தில் சல்ஃபரும் உப்பும்

வண்ணமயமான தோற்றம்

கடலில் இருக்கும் உவர் நீருடன் எரிமலையில் இருந்து வெளிவரும் கனிமங்கள் மற்றும் லாவாவுடன் சேரும்போது, மின்னும் கண்கவர் வண்ணங்கள் உருவாகின்றன. அமிலக் குளத்தில் கந்தகமும் உப்பும் ஒன்றாக இணைந்தால் ஒளிர்விடும் மஞ்சள் நிறம் தோன்றுகிறது. அதுபோல், தாமிரம் உப்புடன் சேர்ந்தால் பளபளக்கும் சிவப்பு நிறம் ஏற்படுகிறது.

இந்தப் பகுதி காற்றில் கலந்திருக்கும் அமிலத்தன்மையால் உயிரினங்கள் வாழ்வது கடினம் என்றாலும், சிலர் இங்கும் வசிக்கின்றனர்.

2013இல் யூரோபிளாண்ட் என்ற குழு இங்கு வந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு முன்பு இங்குள்ள நிலைமை பற்றி வெளியுலகத்திற்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பான யூரோப்ளாண்ட், செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உதவும் விதத்தில் பூமியின் பல பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த இடத்திற்கு வருவது சவாலானது என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். 2012இல் ஐரோப்பாவை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். எனவே இந்த நாட்டின் ராணுவத்தின் பாதுகாப்போடு ஆராய்சியாளர்கள் இங்கு வருகின்றனர்.

வாயு முகமூடிகளின் உதவி

இத்தாலியின் போலோனா பல்கலைக்கழகத்தின் பார்பரா க்வாலாஜி இந்த இடத்தில் பல ஆராய்சிகளை மேற்கொண்டுள்ளார். இங்கு பகல் நேர வெப்பம் பொதுவாக 48 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறும் அவர், ஒரு நாள் வெப்பம் 55 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிட்டதாக கூறுகிறார்.

அதைத்தவிர, எரிமலையில் இருந்து ரசாயனங்கள் வெளிப்படுவதால் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், நிலத்தில் இருந்து உவர்நீர் வெளிப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உப்பு சுரங்கங்களும் உள்ளன

தனாக்கி டிப்ரஷன்' பகுதியில் இருக்கும் காற்றில் குளோரின் மற்றும் ஹைட்ரஜன் சல்ஃபேட் வாயு அதிகமாக இருப்பதால் வாயு முகமூடிகளின் உதவியும் தேவைப்படுகிறது.

பேராசிரியர் க்வாலாஜியின் கருத்துப்படி, அதிக உராய்வு கொண்ட நிலப்பரப்பு எது என்பதை அறிவது அவசியமானது. தவறுதலாக அதிக உராய்வோ, அழுத்தமோ இருக்கும் இடத்தில் கால் வைத்துவிட்டாலோ, கீழே விழுந்துவிட்டாலோ உயிர் பிழைக்கமுடியாது. மிக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்கே பல மணி நேரம் பயணிக்கவேண்டும்.

இங்கு ஆராய்சியை எப்படி துவங்குவது என்றே தெரியமல் தவித்த்தாக சொல்கிறார் பார்பரா க்வாலாஜி. இங்குள்ள ரசாயனங்களின் மாதிரிகளை சேகரிக்க, பிரிட்ஜை எடுத்துச் செல்லவே முடியாது. தனது வேலையை மிகுந்த கவனத்துடன் யோசித்து செய்யவேண்டியிருந்ததாக அவர் கூறுகிறார்.

மஞ்சள் ஏரியா, அமில ஏரியா அல்லது கொலைகார ஏரியா?

2013ஆம் ஆண்டில் ஆராய்ச்சியைத் தொடங்கிய குழுவினர், 2016இல் மாதிரிகளை சேகரித்தனர், 2017இல் மாதிரிகளோடு திரும்பினார்கள். இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து கடின உழைப்பை மேற்கொண்ட ஆராய்சியாளர்களின் முயற்சிகள் வீண்போகவில்லை.

இரு வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்த மாதிரிகளில் சில பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக இன்னும் வெளியிடப்படாத ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. அதாவது உலகின் மிக வெப்பமான பகுதியிலும் உயிர் தோன்றமுடியும் என்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டது.

டாலோலின் அருகில் இருக்கும் ஏரியின் நீர் மிகவும் சூடானதாக இல்லை. அந்த நீரில் அமிலத்தன்மை குறைவாகவும், கரியமில வாயு அதிகமாகவும் இருக்கிறது.

இந்த ஏரிக்கு பலரும் வெவ்வெறுவிதமான பெயரைத் தருகின்றனர். சிலர் மஞ்சள் ஏரி என்றும், சிலர் எண்ணெய் ஏரி என்றும், மற்றவர்களோ கொலைகார ஏரி என்றும் அழைக்கின்றனர்.

இந்த ஏரியின் அருகில் சில பூச்சிகளும் பறவைகளும் இறந்துக் கிடந்தன. அவை ஏரியில் உள்ள நீரை பருகவந்து, கரியமில வாயு அதிக அளவில் இருக்கும் நீரை அருந்தியதில் உயிரிழந்திருக்கலாம் என்று பேராசிரியர் க்வாலாஜி கூறுகிறார்.

ஆராய்சியாளர்களின் மற்றொரு குழுவினர் புதிய கோணத்தை சுட்டிக்காட்டுகின்றனர். இங்கிருக்கும் அமில ஏரியில் இருக்கும் நீரின் பி.எச் அளவு பூஜ்ஜியம் என்றபோதும், பாக்டீரியாக்கள் தோன்றியுள்ளன.

உலகிலேயே மிகவும் வெப்பமான, அதிக அமிலத்தன்மை கொண்ட, ஹைட்ரஜன் அளவு அதிகமுள்ள இதுபோன்ற இடங்களில் உயிரணுக்களின் செயல்பாட்டிற்குக் தேவையான என்சைம்கள் அழிந்துவிடும்.

என்சைம்கள் இல்லாவிட்டால் டி.என்.ஏக்களும் இருக்கமுடியாது.

அதோடு நீரில் உப்பின் அளவு அதிகமாக இருந்தால், உயிரணுக்களில் உள்ள நீர் வெளியேறி, அவை சுருங்கி பிறகு அழிந்துவிடும்.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption 55 டிகிரி செல்சியஸ் வெப்பம்

ஆனால் உலகின் பல இடங்களில் கடினமான சூழ்நிலைகளிலும் உயிர்கள் தோன்றுகின்றன. உதாரணமாக அமெரிக்காவின் யெல்லோஸ்டோன்.

இங்கு பூமிக்கடியில் உள்ள அடுக்குகள் உராய்வதால் மேற்பரப்பில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். இருந்தாலும், சில பாக்டீரியாக்கள் உருவாகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்வதாக கருதப்படுகிறது.

சந்திரன், செவ்வாய் கிரகங்களிலும் இதே நிலை

இதேபோல், ஸ்பெயினின் ரியோ டின்டோவில் உள்ள நீரின் பி.எச் அளவு 2 அங்கும் சில கிருமிகள் உயிர்க்கின்றன.

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இதே போன்ற நிலைமைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அங்கும் உயிர்கள் தோன்றலாம் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது. அது சாத்தியமா என்பதை புரிந்து கொள்ள, தானாக்கில் ஆராய்ச்சி பெரும் உதவியாக இருக்கும்.

பூமியில் உயிரினங்கள் தோன்றியதற்கான காரணத்தை புரிந்துக் கொள்ளவும் இந்த ஆராய்ச்சிகள் உதவியாக இருக்கலாம்.

தானாக்கில் பகுதியை நரகத்தின் நுழைவாயில் என்றும் அழைக்கின்றனர். நரகமாகவே கருதப்பட்டாலும் அங்கிருந்தும் சில தகவல்கள் இயற்கையை புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

பிற செய்திகள்:'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்