சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2500 நட்சத்திர ஆமைகள் மீட்பு

  • 23 ஆகஸ்ட் 2017

சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,500 நட்சத்திர ஆமைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையும் தமிழ்நாடு வனப் பாதுகாப்புப் படையும் இணைந்து மீட்டன.

Image caption கைப்பற்றப்பட்ட நட்சத்திர ஆமைகள்

சென்னையின் புறநகர்ப் பகுதியான ஆவடியில் ஒரு வீட்டில் நட்சத்திர ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவல்களையடுத்து அங்கு திங்கட்கிழமையன்று வருவாய்ப் புலனாய்வுத் துறையும் வனப் பாதுகாப்புப் படையினரும் சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் இருந்து 2515 நட்சத்திர ஆமைகள் கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட நபரைத் தவிர, ஆவடி மற்றும் எண்ணூரைச் சேர்ந்த இருவரும் இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தேடப்பட்டுவருகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த ஆமைகளைச் சேகரித்து, இலங்கை போன்ற நாடுகளுக்கு இவர்கள் கடத்திவந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை சுமார் 10,000 ஆமைகள் வரை தமிழக தென்கடற்கரையோரப் பகுதிகளின் வழியாக, குறிப்பாக ராமேஸ்வரம் வழியாக கடத்தப்பட்டிருக்கின்றன.

தற்போது பிடிபட்ட ஆமைகளில் பெரும்பாலானவை, இளம் ஆமைகளாக இருந்தன. பிடிபட்ட ஆமைகள் உடனடியாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆமைகள் அனைத்தும் சிறிய இடத்தில் அடைக்கப்பட்டிருந்தன என்பதால் அவற்றுக்கு சிகிச்சையளித்த பிறகு, அவை அதன் இயல்பான வாழிடத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image caption நட்சத்திர ஆமை

தற்போது பிடிபட்டுள்ள ஆமைகளின் பதிப்பு சுமார் 25 லட்ச ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நட்சத்திர ஆமைகள் எனப்படும் இந்த ஆமைகள் இந்திய வன உயிரிகள் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சர்வதேச அளவில் கடத்தப்படக்கூடிய அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலிலும் இந்த ஆமைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆமைகளைக் கடத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.

பல்வேறு நாடுகளில் நட்சத்திர ஆமைகளை வீடுகளில் வளர்ப்பது நன்மை பயக்கும் எனக் கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்