அ.தி.மு.க. அமைச்சர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவு

டிடிவி தினகரன் படத்தின் காப்புரிமை AIADMK

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதாக டிடிவி தினகரன் தரப்பு நேற்று தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர்கள் சிலரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியிருப்பதாக தினகரன் அறிவித்திருக்கிறார்.

அ.தி.மு.கவின் பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா,மேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.சி. வீரமணி, கரூர் மாவட்டச் செயலாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆர். காமராஜ் உள்ளிட்டோர் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதவிகளுக்கு செந்தில் பாலாஜி உள்ளிட்ட தன்னுடைய ஆதரவாளர்களை தினகரன் நியமித்திருக்கிறார்.

இதற்கு முன்பாக ஆகஸ்ட் எட்டாம் தேதியன்றும் கட்சிப் பொறுப்புகள் சிலவற்றுக்கு சிலரை நியமனம் செய்து தினகரன் உத்தரவிட்டார். ஆனால், அந்த நியமனங்கள் செல்லாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தது.

Image caption டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த போது

இதற்குப் பிறகு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி, தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவித்துவிட்டனர்.

ஆகவே, தற்போதைய நியமனங்கள் குறித்து எடப்பாடி தரப்பினர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தற்போது தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஒன்றாகத் தங்கியுள்ளனர்.

இந்த விடுதிக்கு முன்பாக பாண்டிச்சேரியைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் சுமார் 100 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு தங்கியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டுமென அவர்கள் கோஷமிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்