தொடரும் ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்றார் இந்திய ரயில்வே அமைச்சர்

இந்தியாவில் அடுத்தடுத்து நடைபெறும் ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பு ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter

உத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக இன்று கான்பூர் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 21 பேர் காயம் அடைந்தனர்.

படத்தின் காப்புரிமை Twitter

உத்தரப் பிரதேசத்தின் ஆஜம்கரில் இருந்து புது டெல்லி நோக்கி கைஃபியாத் விரைவு ரயில் அதிகாலை 2.50 மணியளவில் வந்தபோது, அதன் 10 பெட்டிகள் ஒளரியா மாவட்டம் அருகே தடம் புரண்டன.

இது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் காயம் அடைந்த பயணிகள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ரயில்வே அமைச்சராக பதவியேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து வருவதாக மற்றொரு டிவிட்டர் பதிவில் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் இரண்டவது முறையாக உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துகள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியிடம் சுரேஷ் பிரபு இன்று பிற்பகலில் விளக்கம் அளித்தார்.

அப்போது, நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வரும் ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக பிரதமரிடம் கூறியபோது, காத்திருக்குமாறு தன்னிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை ஹரித்வார் செல்லும் கலிங்கா உத்கல் விரைவு ரயில் முசாஃபர் நகர் அருகே விபத்துக்குள்ளானது. அந்த சம்பவத்தில் 23 பேர் பலியாகினர்.

இந்த ஆண்டில் மட்டும் இன்று அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்து சம்பவத்துடன் சேர்த்து மொத்தம் ஆறு ரயில் விபத்துகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மனித உயிரிழப்புகளுடன் கூடிய 10 மோசமான ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதை விளக்கும் நாட்குறிப்பு இது.

ஆகஸ்ட் 19, 2017 உ.பி: கலிங்கா உத்கல் ரயில் தடம் புரண்டது, 23 பேர் பலி
ஜனவரி 21, 2017 ஆந்திரம்: புவனேஸ்வர்-ஹிராகுந்த் ரயில் தடம் புரண்டது, 29 பேர் பலி.
டிசம்பர் 28, 2016 உ.பி: சீல்டா-அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது, இருவர் பலி.
நவம்பர் 20, 2016 உ.பி: பாட்னா-இந்தூர் ரயில் தடம் புரண்டது, 149 பேர் பலி.
ஆகஸ்ட் 4, 2015 மத்திய பிரதேசம்: மச்சக் ஆற்றில் ரயில் தடம் புரண்டு விழுந்தது. 25 பேர் பலி. அதே இடத்தில் ஜனதா விரைவு ரயிலும் தடம் புரண்டது.
மார்ச் 20, 2015 உ.பி: டேராடூன் - வாரணாசி ஜனதா ரயில் தடம் புரண்டதில் 39 பேர் பலி.
மே 4, 2015 மகராஷ்டிரா: சவாந்த்வாடி பயணிகள் ரயில் தடம் புரண்டது, 20 பேர் பலி
மே 26, 2014 உ.பி: கோரக்தாம் விரைவு ரயில் தடம் புரண்டது, 25 பேர் பலி.
ஜூலை 10, 2011 உ.பி: ஃபதேபூரில் கல்கா மெயில் தடம் புரண்டதில் 70 பேர் பலி.
மே 28, 2010 மேற்கு வங்கம்: மிட்னாபூரில் ஞானேஸ்வரி ரயில் தடம் புரண்டது, 148 பேர் பலி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்