சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்தி அளித்த தீர்ப்பை, மறுஆய்வு செய்யக் கோரி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், தற்போதைய அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளருமான சசிகலா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறுஆய்வு மனு என்பதால் அதை நீதிபதிகள் நேற்று தங்களின் அறையில் பரிசீலித்து, "ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இது தொடர்பான உத்தரவின் நகல் மனுதாரரின் வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் இன்று அளித்தது.

இதே வழக்கில் சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களும் சசிகலாவுடன் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மறுஆய்வு மனுக்களை நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் அடங்கிய அமர்வு கடந்த 2-ஆம் தேதி விசாரிப்பதாக இருந்தது.

ஆனால், நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நீதிபதிகள் அமர்வில் இடம்பெற விரும்பவில்லை என்று கூறி விலகிக் கொண்டார்.

"தனது தந்தை ஃபாலி நாரிமன் ஏற்கெனவே வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நபராக இருந்த ஜெயலலிதாவுக்காக நீதிமன்றத்தில் ஆஜரானதால் சசிகலாவின் மறுஆய்வு மனுவை பரிசீலிக்கும் குழுவில் இருப்பது சரியாக இருக்காது" எனக் கூறி அவர் விலகிக் கொண்டார்.

இதையடுத்து நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அமிதவ ராய் அடங்கிய அமர்வு பரிசீலனைக்கு இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற முடிவு குறித்து சசிகலாவின் ஆதரவாளரும் அதிமுக அம்மா அணியின் கர்நாடகா மாநில செயலாளருமான புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடுத்த சட்ட வாய்ப்பாக மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :