முத்தலாக்கை திருக்குர்ஆன் ஆதரிக்கிறதா? இல்லை என்றால் ஏன் இந்த சர்ச்சை?

BBC

முஸ்லிம் மதத்தில் ஒரு பிரிவினரிடையே, திருமணமான பெண்ணை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்கள் மற்றும் பாதிக்கப்படும் பெண்களுக்காக குரல் கொடுத்து வரும் இரண்டு தன்னார்வ அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட வழக்கில், "முத்தலாக்" விவாகரத்து நடைமுறை, அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

இந்நிலையில் முத்தலாக் குறித்தும் முஸ்லிம் பெண்ணை விவாகரத்து செய்யும் வழக்கம் குறித்தும் பிபிசி தமிழிடம், அந்த மதத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

முத்தலாக் வழக்கத்தை இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் ஆதரிக்கிறதா என்று சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் அறிஞருமான எஸ். சாதிக்கிடம் கேட்டதற்கு, "ஷரியத் என்பது இஸ்லாமிய நடைமுறைச் சட்டம். குர்ரான் என்பது பொதுவான மத நூல். குர்ரானின் வழக்கமாகவும் விரிவாகவும் ஷரியத் சட்டம் காலப்போக்கில் உருவாக்கப்பட்டது" என்றார்.

"நபிகள் காலத்தில் அப்போதிருந்த நடைமுறையின் அடிப்படையில் ஷரியத் உருவாக்கப்பட்டதாகவும் அதன்பிறகு உமர் "கலிஃபா" ஆக இருந்தபோதுதான் பெருவாரியான சட்ட விதிகள் ஷரியத்தில் உருவாக்கப்பட்டது" என்றும் அவர் கூறினார்.

"முத்தலாக் சொல்ல திருக்குர்ஆன் அனுமதிக்கவில்லை என்றும் சில பெண்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டபோது, ஒரேயொரு முறை மட்டும், இரண்டாவது கலிஃபா ஆக உமர் இருந்தபோது முத்தலாக்கை தடுக்காமல் விட்டு விட்டார்" என்கிறார் சாதிக்.

அதன் பிறகு வந்தவர்களில் ஒரு சிலர் முத்தலாக்கை தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர்" என்றும் அவர் கூறினார்.

"முத்தலாக் வழக்கத்தை தற்போதைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஏற்பதில்லை என்றும், முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியமும் முத்தலாக் கோரும் வழக்கம் கொண்டுள்ள நபர்களை சபையில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்வது பற்றி பரிசீலித்து வருகிறது" என்றும் சாதிக் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பில் "முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது மட்டுமின்றி ஆரம்ப காலம் முதல், முத்தலாக் வழக்கத்தை யாரும் ஆதரிக்கவில்லை என்றும் சாதிக் குறிப்பிட்டார்.

"ஷரியத்" என்பதே உமர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்த சட்டம்தான். அந்த காலத்தில் தலாக் என்பது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்று என்றே பலரும் கூறுவர்" என்கிறார் சாதிக்.

தலாக் சொல்வது எப்படி?

"மூன்று முறை தலாக் என்று ஒரே தடவையில் கூறி விவாகரத்து பெற்று விட முடியாது. மூன்றில் ஒரு முறை தலாக் கூறி விட்டால் இரண்டாவது தலாக் கூறும் முன்பு ஒரு மாத அளவுக்கு அவகாசம் தரப்படும். அதில் சரியாக வரவில்லை என்றால் இரண்டாவது தடவையாக தலாக் கூறுவர். அதன் பிறகும் அவகாசம் தரப்படும். அதிலும் சரிவராதபட்சத்தில்தான் மூன்றாவது தலாக் கூற முடியும் என்கிறார் சாதிக்.

"இவ்வாறு மூன்று முறை தலாக் தெரிவித்த பிறகுதான் அந்த தம்பதியால் சேர்ந்து வாழ முடியாது" என்று அவர் கூறுகிறார். .

ஷரியத் பலவீனம்

"ஷரியத் சட்டம்" என்பதே திருக்குர்ஆன் அடிப்படையில் பிறரால் விளக்கம் அளித்து கொண்டுவரப்பட்டதுதான். அதை இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டம் போன்றவற்றில் உள்ளது போல உட்பிரிவுகள் புகுத்தி நெறிப்படுத்தக் கூடிய பொதுவான சட்டப்புத்தகத்தை தயாரிக்க யாரும் முயற்சிக்கவில்லை என்கிறார் சாதிக்.

இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி ஆளுக்கு ஒரு பக்கமாக தலாக் கூறும் வழக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கி, வசதிக்கு ஏற்ப அர்த்தம் கற்பித்துக் கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"மாங்குனி கித்தாப்" என்ற புத்தகத்தை உருவாக்கி ஷரியத்தின் சட்டப்பிரிவுகளுக்கு விளக்கம் அளிக்க சிலர் எடுத்த முயற்சியும் வெற்றி பெறவில்லை என்று கூறுகிறார் அவர்.

"தற்போது நீதிமன்றம் கூட மூன்று முறை விட்டு, விட்டு தெரிவிக்கப்படும் தலாக் முறையை எதிர்க்கவில்லை என்று சுட்டிக்காட்டிய சாதிக், "ஒரே தடவையில் முத்தலாக் சொல்வதைத்தான் சட்டவிரோதம்" என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது" என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தலாக் விதிகள்

தலாக் கூறும் ஷரியத் வழக்கத்தின்படி, தலாக் கூறும் முறையில், "மூன்று மாதம் பத்து நாள்" என அவகாசம் வழங்கப்படும். தலாக் கூறப்பட்ட காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண் கருவுற்றிருக்கக் கூடாது.

மாதவிடாய் தள்ளிப்போகும் காலத்தை வைத்து அதை கணித்து சம்பந்தப்பட்ட தம்பதி சேர்ந்து வாழ்ந்தார்களா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். ஒரு வேளை தலாக் கூறிய காலத்தில் அப்பெண் கருவுற்றால் அவரிடம் விவாகரத்து பெற சம்பந்தப்பட்ட கணவர் கூறிய "தலாக்" செல்லாது.

அதேபோல, கடிதம் மூலமோ மின்னஞ்சல் வாயிலாகவோ அனுப்பப்படும் தலாக் செல்லுபடியாகாது. "தலாக்" கூறும்போது இரு தரப்பிலும் பக்கத்தில் யாராவது சாட்சி இருக்க வேண்டும் என்கிறார் சாதிக்.

முத்தலாக் என்ற வழக்கமே பெண்களின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டது. அந்த காலகட்டத்தில் "தலாக்" சொல்வதே மிகவும் வெறுக்கத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.

அந்த அளவுக்கு திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கணவனாக ஆண் மகன் நடந்து கொள்ளக் கூடாது என்றும் தலாக் என்பதை வாழ்வின் கடைசி கட்டமாக தெரிவிக்கும் உறவு முறிவுக்குரிய சொல்லாகக் கருதினர் என்றும் சாதிக் தெரிவித்தார்.

ஷரியத் சட்டம் என்பது ஒரு நேரத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. காலப்போக்கில் உலமாக்களால் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்ட நெறிமுறைகள்தான் ஷரியத் நெறியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது நாடுகளுக்கும் அங்குள்ள வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மாறுகிறது என்கிறார் சாதிக்.

பொது சிவில் சிட்டத்தை திணிக்கும் முயற்சியா?

இது பற்றி மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் பேராசிரியருமான எம்.எச். ஜவாஹிருல்லா கூறுகையில், "முத்தலாக்" முறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்று தலைமை நீதிபதி ஜே.எஸ் கெஹர் மற்றும் நீதிபதி அப்துல் நஜீர் ஆகியோர் எழுதியுள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

"முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள பல்வேறு விதிமுறைகளில் முத்தலாக் முறையை அனுமதிக்கும் விதிமுறை மட்டும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது" என்று நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் ரோஹிங்டன் நாரிமன் கூறியுள்ளதாகவும், "முத்தலாக் விவாகரத்து முறை", திருக்குர்ஆனுக்கு எதிரானது என்று நீதிபதி ஜோசப் குரியன் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளதையும் ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டுகிறார்.

"முத்தலாக் விவாகரத்து முறை செல்லத்தக்கது அல்ல" என்று ஏற்கெனவே ஷமீம் ஆரா வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாகவும், தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் புதிதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை" என்கிறார் ஜவாஹிருல்லா.

முத்தலாக் விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, "முத்தலாக் விவாகரத்து முறை" குறித்து நாடாளுமன்றம் ஆறு மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு தனது பொறுப்பை தட்டிக் கழித்துள்ளதால் இது பல்வேறு குழப்பங்களுக்கும் வழிவகுக்கும்" என்று ஜவாஹிருல்லா கூறினார்.

"நீதிமன்றத் தீர்வை மக்கள் நாடிச் செல்லும் போது தீர்வைச் சொல்லாமல் சட்டமியற்றும் நாடாளுமன்றத்துக்கு அதைத் திருப்பி அனுப்புவது சரியான நடவடிக்கையாக அமையாது" என்கிறார் அவர்.

"பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் பல நேரங்களில் அப்பிரச்னையில் தொடர்புடையவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளைத் தடுக்க 1997-ஆம் ஆண்டில் விசாகா வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டது. குறைந்தபட்சம் அதுபோன்ற நடைமுறையைப் பின்பற்றாமல் முத்தலாக் முறை குறித்து சட்டமியற்றுமாறு நாடாளுமன்றத்திற்கு பணித்துள்ளது தேவையற்ற வழிமுறை" என்கிறார் ஜவாஹிருல்லா.

"முத்தலாக் முறை பாவகரமானது என்றும், திருமணத்தின் போது, முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யக் கூடாது என்று திருமண ஒப்பந்தத்தில் மணமகள் நிபந்தனையாக விதிக்கலாம் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எடுத்துரைத்து அதனை பிரசாரம் செய்து வருகிறது" என்றும் ஜவாஹிருல்லா கூறுகிறார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, எந்தவொரு நன்மையையும் விளைவிக்கப் போவதில்லை. ஆனால் இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி சட்ட ஆணையம் மூலம் பொது சிவில் சட்டத்தை திணிக்க மோடி அரசு முயலக் கூடும் என்ற அச்சம் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது" என்று கூறுகிறார் ஜவாஹிருல்லா.

இந்த வழக்கில் கூட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பொது சிவில் சட்டம் குறித்தோ, பலதார மணம் குறித்தோ விசாரிக்க மறுத்து விட்டதையும், ஒட்டுமொத்தமாக தலாக் முறையையே தடை செய்ய வேண்டும் என்ற வாதம் உட்பட மத்திய அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில் பல வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் ஜவாஹிருல்லா.

இதற்கிடையே, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினரும் முத்தலாக் விவகார வழக்கில் ஆஜராகி வந்தவருமான மூத்த வழக்கறிஞர் ஜாபர்யாப் ஜிலானி, 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்து ஆய்வு செய்த பிறகு தங்கள் வாரியத்தின் செயற்குழு அடுத்த மாதம் 10-ஆம் தேதி போபால் நகரில் கூடி முடிவெடுக்கும்" என்றார்.

தீர்ப்புக்கு ஆதரவு

முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி வரவேற்றுள்ளார்.

படக்குறிப்பு,

முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஷயரா பானு

ஒரே அமர்வில் மூன்று முறை முத்தலாக் சொல்லும் வழக்கம் இஸ்லாம் மதத்தில் கிடையாது என்றும், தலாக் எத்தகைய சூழலில் எவ்வாறு அளிக்கலாம் என்பதை திருக்குர்ஆனில் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

திருக்குர்ஆனின் அம்சங்களை சம்பந்தப்பட்ட தம்பதியும், 'பத்வா' எனப்படும் மத உத்தரவை வெளியிடும் உலமாக்களும் அவ்வளவு எளிதாக மாற்றிக் கையாண்டுவிட முடியாது' என்கிறார் முகம்மது அப்துல் அலி.

"அனைத்து முஸ்லிம் சகோதரர்களும், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த உலமாக்களும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து, முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்க வேண்டும்" என்றும் முகமது அப்துல் அலி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :