"அந்தரங்கத்துக்கான உரிமை" அடிப்படை உரிமையா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

  • 24 ஆகஸ்ட் 2017
MANSI THAPLIYAL படத்தின் காப்புரிமை MANSI THAPLIYAL

"தனி நபரின் அந்தரங்க உரிமை என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையா?" என்பது தொடர்பான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று அளிக்கவுள்ளது.

மத்தியில் இதற்கு முன்பு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, குடிமக்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்காக "பயோமெட்ரிக்" முறையில் விவரங்களை சேகரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விவரங்களை தெரிவிப்பதால் தங்களின் அந்தரங்க தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்து கர்நாடகா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி உள்பட ஏராளமான மனுதாரர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு பின்னர் 2015-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த விவகாரத்தை கடந்த ஜூலை 18-ஆம் தேதி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "1954-ஆம் ஆண்டில் எம்.பி. சர்மா, 1962-ஆம் ஆண்டில் கரக் சிங் ஆகிய மனுதாரர்களின் வழக்கில் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையாகாது என்று ஏற்கெனவே எட்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதையடுத்து இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மாற்றினார்.

அதன் பிறகு கடந்த ஜூலை 19-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு மனுதாரர்கள், மத்திய அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன. இந்த வாதங்கள் கடந்த 2-ஆம் தேதி முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முன்வைத்த வாதத்தின்போது, "அந்தரங்கம் என்பதை அடிப்படை உரிமையாகக் கருதினாலும் அதில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

படத்தின் காப்புரிமை Mansi Thapliyal

மேலும், "ஒரு தனி நபரின் ஒவ்வொரு அந்தரங்க செயலையும் அடிப்படை உரிமையாகக் கருத முடியாது என்றும் சுதந்திரத்தின் வெவ்வேறு செயல்பாடுகளுக்கும் வெவ்வேறு தன்மை உள்ளது" என்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.

ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், ஏ.எம்.சாப்ரே, டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கிஷண் கெளல், எஸ்.அப்துல் நஜீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆதார் எண் வழங்குவதற்காக விவரங்களை சேகரிக்கும் முறையை மத்தியில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அரசு அறிமுகப்படுத்தியபோது அதை தற்போதைய பிரதமரும் 2014-ஆம் ஆண்டில் குஜராத் முதல்வருமாக இருந்த நரேந்திர மோதி கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Twitter

தீர்ப்பு ஏன் முக்கியமானது?

"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஆதார் முறையில் தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் சில விளைவுகளை ஏற்படுத்தலாம்; தனி நபர்களின் கண்காணிப்பு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்ற வரம்பை இத்தீர்ப்பு நிர்ணயிக்கும்; குடிமக்களின் அடிப்படை உரிமையாக அந்தரங்கமும் அங்கீகரிக்கப்பட்டால் முன்பு இருந்த நிலையை விட தனி நபர் ரகசியம் காப்புக்கு அதிக சட்ட வலிமை ஏற்படும்" என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்