நாளை அறிமுகமாகிறது 200 ரூபாய் நோட்டு

RBI
படக்குறிப்பு,

நாளை புழக்கத்துக்கு வரவுள்ள ரூ. 20 நோட்டின் "மாதிரி"

இந்தியா முழுவதும் நாளை முதல் 200 ரூபாய் புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கள்ள நோட்டுகளை ஒழிக்கும் முயற்சியாக 500 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்யும் வகையில் சில நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு மேற்கொண்டது.

அந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நவம்பரில் 2000 ரூபாய் புதிய நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. மேலும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் 500 புதிய நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்கான சில்லறையை வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தற்போது 200 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுவதாக பாரத ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புதிய நோட்டுகள் அறிமுகத்துக்கான ஒப்புதலை இந்திய நிதியமைச்சகம் அனுமதியுடன் பாரத ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு நேற்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து நாளை முதல் புழக்கத்துக்கு வரவுள்ள 200 ரூபாய் புதிய நோட்டுகளின் மாதிரியை பாரத ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

காந்தி படத்துடன் கூடிய 200 ரூபாய் முன்பக்கத்தின் நடுவில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் ஆர். படேல் கையெழுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. நோட்டின் பின்புறம் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை நினைவுப்படுத்தும் வகையில் சாஞ்சி ஸ்தூபி படம் பொறிக்கப்பட்டுள்ளது.

அதில் 200 ரூபாய் என்ற எழுத்து, "२००" என தேவனாகரி மொழி வடிவில் உள்ளது. நோட்டின் நடுப்பகுதியில் உள்ள மெல்லிய கோடு போல உள்ள பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நூலிழை, பச்சை வடிவத்திலும், நோட்டை அசைக்கும்போது நீல வண்ணத்திலும் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :