அந்தரங்க உரிமை: தீர்ப்பில் அறிய வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள்

ஆதார்

அந்தரங்கத்துக்கான உரிமையை, குடிமக்களுக்கு அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அங்கம் என்று உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதன் ஐந்து முக்கிய விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • "அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது விதி, 3-ஆவது பிரிவின்படி ஒட்டுமொத்த அடிப்படை உரிமைக்கான பகுதியிலும் அந்தரங்கத்துக்கான உரிமை அடங்கியுள்ளது."
  • "தங்களின் அந்தரங்க வாழ்வில் அரசோ அல்லது தேசவிரோத அமைப்புகளோ அல்லது நபர்களோ ஊடுருவி வாழ்வின் தேர்வுகளை தன்னிச்சையாக உருவாக்குவதைத் தடுக்கும் பாதுகாப்பை அடிப்படை உரிமை வழங்குகிறது."
  • "குடும்பத்தின் அந்தரங்கம் என்பது அந்த குடும்பம், திருமணம், பாலியல் விருப்பம் ஆகிய அனைத்து விதமான மதிப்புமிக்க வாழ்வையும் பாதுகாப்பது. அந்த வகையில் தனது வீட்டுக்குள் யார் வரலாம், எப்படி வாழலாம், எந்த உறவு முறையில் வாழலாம் என்பது தனி நபரின் விருப்பம்."
  • "உடல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தனது அந்தரங்கத்துக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை முடிவு செய்யும் உரிமை தனி நபருக்கு உண்டு."
  • "அந்தரங்கத்துக்கான உரிமை என்பது அடிப்படை உரிமையின் அங்கம் என்றபோதும், பொதுநலனுக்கு உட்படக் கூடிய சமூக மற்றும் தார்மீக அடிப்படையிலான சில கட்டுப்பாடுகளை சட்டப்படி அரசு விதிக்கலாம்."

இந்த தீர்ப்பை, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதி ஆர்.கே.அகர்வால், எஸ்.அப்துல் நசீர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சார்பில் நீதிபதி சந்திரசூட் தீர்ப்பை எழுதினார்.

நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே, ஆர்.எஃப். நாரிமன், சஞ்சய் கிஷண் கெளல் ஆகியோர் தனித்தனியாக தீர்ப்பை எழுதினர்.

மொத்தம் இருபது பகுதிகளாக இந்த வழக்கின் தீர்ப்பை பகுப்பாய்வு செய்துள்ளனர். இருபதாவது பகுதியில் அனைத்து நீதிபதிகளும் சேர்ந்து பொதுவான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

அதில், முந்தைய காலங்களில் இரு வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுகள் அளித்த தீர்ப்புகளை தற்போதைய தீர்ப்பு கட்டுப்படுத்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :