அந்தரங்கம் பற்றிய தீர்ப்பு ஆதார் குறித்து எதுவும் கூறவில்லை: மத்திய அரசு

  • 24 ஆகஸ்ட் 2017

அந்தரங்கத்துக்கான உரிமை அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாகக் கூறிய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இத் தீர்ப்பு ஆதார் விவகாரம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ரவிசங்கர் பிரசாத்

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அந்தரங்கத்துக்கான உரிமை விவகாரத்தை மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது என்றார் அவர்.

"மாநிலங்களவையில் தனி நபர் உரிமை, பாதுகாப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்திய அதே அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது" என்று ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை PIB

"அந்தரங்கத்துக்கான அடிப்படை உரிமை என்பது முழுமையானது அல்ல என்றும் அது தேச நலன்களுக்கு ஏற்ப நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"தனி நபர் மற்றும் தேசத்தின் நலன்களுக்கும் இடையிலான கவலைதரக் கூடிய சில விஷயங்களில் சமமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க இணைய வழி டிஜி்ட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது" என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

"மத்தியில் முன்பு காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, ஆதார் பதிவு முறைக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் தற்போதைய மத்திய அரசு கணினிமயமாக்கப்படும் தனி நபர் தொடர்புடைய இணைய தரவுகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது" என்று அவர் கூறினார்.

தனி நபர்களின் தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளதால், அடிப்படை உரிமைகள் மற்றும் தனி நபர் சுதந்திரத்தை வலுப்படுத்தும் இந்தத் தீர்ப்பை மத்திய அரசு மதித்து அதன்படி செயல்படும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

படத்தின் காப்புரிமை Mansi Thapliyal

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "தனி நபர் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தனிப்பட்ட தகவல்களை பொதுப்படையாக சேகரித்து "ஆதார்" என்ற பெயரில், அதை காண்பித்தால்தான் சேவை கிடைக்கும் என்று கட்டாயப்படுத்துவதைத் தான் ஏற்க முடியாது" என்றும் கூறினார்.

இந்த தீர்ப்பு ஆதார் பதிவைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் முயற்சியிலும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் வள்ளிநாயகம்.

இதேபோல முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி, "நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது" என்றார்.

அந்தரங்கம் என்பது ஒவ்வொரு தனி நபரின் அடிப்படை உரிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

"எந்தவொரு அடிப்படை உரிமையும் முழுமையானது கிடையாது. அவையும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பாதுகாக்கப்படுகிறது" என்கிறார் சோலி சொராப்ஜி.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொண்டாடத்தக்கது" என்றார்.

இந்த தீர்ப்பு ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் சட்டவிரோதமாக தனி நபரின் அந்தரங்கத்துக்குள் ஊடுருவும் செயலை இத்தீர்ப்பு தடுக்க உதவும்" என்றார் இந்திரா ஜெய்சிங்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்