உ.பி.யில் பாலியல் தொந்தரவு: கை வெட்டப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

  • 25 ஆகஸ்ட் 2017
பெண்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து இந்தியாவில் பல போராட்டங்கள் நடந்து வருகின்றது படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெண்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து இந்தியாவில் பல போராட்டங்கள் நடந்து வருகின்றது

உத்தர பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமியின் கையை, தன்னிடம் இருந்த வாளால் ஒரு நபர் வெட்டியுள்ளார். அந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்புர் கேரி மாவட்ட சந்தையில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரி கூறுகையில், "சம்பந்தப்பட்ட சிறுமியை சில மாதங்களாக ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்ததாகவும் லக்கிம்புர் கேரி சந்தை பகுதியில் அந்த சிறுமியை அந்த இளைஞர் சீண்டியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்றார்.

மேலும், "அந்த இளைஞர் தன்னிடம் இருந்த வாளால் அந்த சிறுமியின் கையை வெட்டியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயம் அடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்" என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்தபோது, அச்சிறுமியை இளைஞர் தாக்க முயன்றபோது அவரை பொதுமக்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் உள்ள சிறுமி கண் விழித்த பிறகே அவரிடம் வாக்குமூலம் பெற்று கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறினர்.

அச்சிறுமி தனது மொபைல் போனை சார்ஜ் போடுவதற்காக. அவளுடைய அம்மாவுடன் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும் போது தாக்குதல் சம்பவம் நடந்ததாக சிறுமியின் மாமா சுஷில் குமார் பிபிசியிடம் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்