தமிழக கல்வித் துறையில் உதயசந்திரனின் பொறுப்புகள் குறைப்பு

  • 25 ஆகஸ்ட் 2017

தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலராக இருந்த உதயசந்திரனை, பள்ளிக் கல்விப் பாடத்திட்டங்களை மட்டுமே கவனிக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலராக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிகமாக முதன்மைச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்படுவதாகவும் அந்தப் பொறுப்பில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் முதன்மைச் செயலராக இருந்த பிரதீப் யாதவ் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிக் கல்வித் துறைச் செயலராக இருக்கும் உதயசந்திரன், அதே பொறுப்பில் தொடர்வார் என்றும் பள்ளிக் கல்வித் துறையின் பாடத் திட்டங்கள் தொடர்பான பணிகளை மட்டும் கவனிக்கும் அவர், முதன்மைச் செயலரின் கீழ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயசந்திரனை பள்ளிக் கல்வித் துறை செயலர் பதவியிலிருந்து தமிழக அரசு மாற்ற விரும்புவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் அடிபட்டுவந்தன. ஆனால், அத்துறையில் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் அவரை மாற்றக்கூடாது என கல்வியாளர்கள் கூறிவந்தனர். இருந்தபோதும், இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் அவர் ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்காததால், அவரை மாற்றுவதில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கில் பாடத் திட்டத்தை மாற்றும் குழுவைச் சேர்ந்த யாரையும் பணிகள் முடிவடையும்வரை மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

இதனால், தற்போது பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைச் செயலர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு பாடத் திட்டம் தவிர்த்த பிற பணிகள் பிரதீப் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்