பெண்களின் ஆடையை அணிந்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த இருவருக்கு அபுதாபியில் சிறை

பெண்களின் ஆடைகளை அணிந்திருந்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த ஓர் ஆணும், பாலினத்தை மாற்றுவதற்கு இன்னும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத திருநங்கை ஒருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Elijah Nouvelage/Getty Images

ஐக்கிய அரபு ஏமிரேட் தலைநகரான அபுதாபியில், ஆகஸ்ட் 9-ஆம் நாள் பெருவணிக வளாகம் ஒன்றிற்கு சென்றிருந்தபோது, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், அவர்கள் மீது நடத்தப்பட்ட மிக விரைவான விசாரணை பற்றிய தகவல்கள் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளன.

பாலினத்தை மாற்றுவதற்கு இன்னும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த திருநங்கை, எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு பல முறை பயணம் மேற்கொண்டுள்ளார் என்று அவருடைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்களின் ஆடைகளை பெண்களும், பெண்களின் உடைகளை ஆண்களும் அணிவது ஐக்கிய அரபு எமிரேட்டில் சட்டத்திற்கு புறம்பானதாகும்.

ஓரின செயல்பாடுகள், திருமணத்திற்கு புறம்பான பாலுறவுகள், சட்டப்பூர்வமற்றவை என்ற நியதியை கொண்டிருக்கும் இந்த நாட்டில், பொதுவிடத்தில் முத்தம் கொடுத்ததற்காக மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஃபிஃபி என்றும் அறியப்படும் நுர் கிஸ்டினா ஃபிடிரியா இம்ராஹிம், பகுதிநேர ஃபேஷன் புகைப்படக் கலைஞர் முகமது ஃபாட்லி பின் அப்துல் ரஹ்மான் என்பவரோடு உணவு வளாகம் ஒன்றில் சாப்பிட சென்றவேளையில், இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Reuters

ஃபேஷன் மாடல் அழகி புகைப்படங்கள் எடுப்பதற்காக (போட்டோ ஷூட்) அவர்கள் முந்தைய நாள்தான் ஐக்கிய அரேபு எமிரேட்ஸூக்கு வந்ததாக தெரிகிறது.

ஃபாட்லி ஒரு வெள்ளை டி-சர்ட்டும், வில் டையும், காதணிகளையும் அந்நேரத்தில் அணிந்திருந்ததாக, அவருடைய சகோதரரான முகமது சாய்ஃபுல் பக்ரி அப்துல் ரஹ்மான் கூறியதை மேற்கோள்காட்டி 'த அசோசியேடட் பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

திருநங்கை இப்ராஹிம் என்ன உடை அணிந்திருந்தார் என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவர் பாலினத்தை மாற்றிக்கொள்வதற்கு இன்னும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாததால், அவருடைய பாலினம் 'ஆண்' என்றே இன்னும் குறிப்பிடப்பட்டிருப்பதாக, தன்னை மேடம் ரோஸி என்று மட்டுமே தெரிவிக்க விரும்பிய அவரது இளைய சகோதரி 'ஸ்டெய்ஸ் டைம்ஸிடம்' தெரிவித்திருக்கிறார்.

'ஸ்டெய்ஸ் டைம்ஸ்' மேற்கோள்காட்டியுள்ள அரேபிய மொழியிலுள்ள நீதிமன்ற அதிகாரப்பூர்வ ஆவணத்தில், பெண்களின் உடைகளை அணிந்து பொதுவிடத்தில் பண்பற்ற முறையில் நடந்துகொண்ட சிங்கப்பூரை சேர்ந்த இரு ஆண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"கேலிக்குரியது"

"நாங்கள் மிகவும் நெருங்கிய உறவுமுறையோடு வாழும் குடும்பம். நாங்கள் அவளை பற்றி மிகவும் கவலையடைந்துள்ளோம்" என்று இப்ராஹிமின் இளைய சகோதரி தெரிவித்திருக்கிறார்.

"கூடிய சீக்கிரம் என்னுடைய சகோதரரை சிங்கப்பூருக்கு திரும்ப அழைத்து வருவேன் என்று நம்புகிறேன். என்னுடைய சகோதரர் நட்பான, தன்னலமற்ற மற்றும் நகைச்சுவை உணர்வுமிக்க நபர், அவர் அணிந்திருந்த ஆடைக்காக கைது செய்திருப்பது கேலிக்குரியது" என்று ஃபட்லின் சகோதரரான முகமது சாய்ஃபுல் பக்ரி பின் அப்துல் ரஹ்மான் 'அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Clive Mason/Getty Images

சிங்கப்பூரை சேர்ந்த இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் வழங்கறிஞர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. சிங்கப்பூர் தூதரகத்தில் இருந்தும் யாரும் நீதிமன்றத்தில் இருக்கவில்லை. எனவே அவர்கள் தங்களின் நியாயத்தை கூறி பாதுகாக்கப்படவில்லை என்று சாய்ஃபுல் விளக்கியுள்ளார்.

இந்நிலையில், "சிங்கப்பூர் தூதரக கவுன்சிலரும், அவரது சக ஊழியர்களும் உங்களுடைய சகோதரருக்கு இயன்ற அனைத்தையும் செய்வார்கள். அவர்கள் உங்களுடனும், உங்களுடைய சகோதரருடனும் தொடர்பில் இருப்பது எனக்கு தெரிய வந்துள்ளது. மேலதிக உதவிகள் தேவைப்பட்டால், தன்னிடம் தெரிவிக்க வேண்டும்" என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இந்த குடும்பத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்திருப்பதை 'ஸ்டெய்ஸ் டைம்ஸ்' உறுதி செய்துள்ளது.

தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவருக்காகவும் மேல்முறையீடு செய்து வாதிட வழக்கறிஞர் ஒருவரை கண்டுபிடிக்கும் முயற்சி ஃபிட்லியின் நண்பர் ஒருவரால் நடைபெற்று வருகிறது.

'டிடெயின்ட் இன் துபாய்' (ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சிவில் மற்றும் குற்றவியல் நீதி சட்ட நிபுணர்களின் அமைப்பு) என்கிற சட்ட அமைப்பின் தலைவர் ராதா ஸ்டிர்லிங் வழங்கியுள்ள அறிக்கையில், "ஐக்கிய அரபு எமிரேட், ஒரு பொறுத்துக்கொள்கிற, பரந்தநோக்குடைய தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது..... சட்டங்கள் அந்நாட்டு சமூகத்தின் பிற்போக்கான, பாரம்பரிய மதிப்பீடுகளை பிரதிபலிப்பதாகவே தொடர்கின்றன" என்று தெரிவித்திருக்கிறார்.

"பொதுவாகவே ஆண்களின் ஆடைகளை பெண்களும், பெண்களின் உடைகளை ஆண்களும் அணிவோராக திருநங்கைகள் வரையறுக்கப்படுகின்றனர்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கல்வித்துறையில் சிங்கப்பூர் சாதிப்பது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கல்வித்துறையில் சிங்கப்பூர் சாதிப்பது எப்படி?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :