சாமியார் கைது வன்முறை: பலி எண்ணிக்கை 31ஆக உயர்வு

சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என்று சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஹரியானாவில் பரவிய வன்முறையாலும், அதற்கு எதிர்வினையாக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

வன்முறை, தீவைப்பு, போலீஸ் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 250. வன்முறை மையம் கொண்டிருந்த பஞ்ச்குலா நகரின் போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சண்டிகர் அருகே உள்ள பஞ்ச்குலாவில் தீர்ப்பு கொடுத்த சி.பி.ஐ. நீதிமன்றம் அமைந்துள்ளது. ராம் ரஹீம் சிங்கின் அமைப்பான தேரா சச்சா சௌதா வின் தலைமையகம் ஹரியானா மாநிலம் சிர்சாவில் அமைந்துள்ளது. இரு இடங்களிலும், டில்லியின் சில பகுதிகளிலும் தீர்ப்பளித்தவுடன் பரவிய வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக ஓர் உயர் போலீஸ் அதிகாரியை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு கம்பெனி ராணுவமும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2002ல் இரண்டு பெண்கள் அளித்த பாலியல் வன்புணர்வு புகாரின் அடிப்படையில் தற்போது 50 வயதாகும் தேரா சச்சா சௌதாவின் தலைவரான ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பளித்தார்.

இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ராம் ரஹீம் சிங்குக்கு என்ன தண்டனை என்பதை ஆகஸ்டு 28-ம் தேதி நீதிபதி அறிவிப்பார்.

சமூக வலைத்தளம்

இந்தத் தீர்ப்பும் அதைத் தொடர்ந்த வன்முறையும் சமூக வலைத் தளங்களில் தீவிர விவாதங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

கோரக்பூர் குழந்தை மரணங்கள், முசாபர் நகர் ரயில் விபத்து, சிர்சா-பஞ்ச்குலா கலவரம் ஆகியவை பாஜக-வின் நிர்வாகத் திறமைக்கு சான்று என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தண்டனைக்குள்ளான ராம் ரஹீம் சிங்குக்கு ஆதரவாக பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் பேசியுள்ளதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நாள் முழுதும் பணியாற்றி சகஜ நிலை திரும்பவும், தேவையான உதவிகளைச் செய்யவும் வேண்டுமென அதிகாரிகளைக்கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்