ஹரியானா சாமியார் ராம் ரஹீம் வளர்ச்சிக்கு உதவியது என்ன?

குர்மீத் ராம் ரஹீம் சிங்

பிரபல சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள், வட இந்தியாவின் நகரங்களில் வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். வாகனங்களை அடித்து நொறுக்கியது, ரயில் நிலையங்களுக்குத் தீ வைத்தது, பாதுகாப்பு படையினருடன் மோதியது என இந்த வன்முறைகளால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

2002-ஆம் ஆண்டு இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர்.

குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மில்லியன் கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், சமுதாயத்தில் சம உரிமைகள் பெறாத, தாழ்த்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆவர்.

வாழ்க்கையில் `கட்டுப்பாட்டுடன்` வாழ்வது பற்றி அவரது பேச்சுகள் இருக்கும். ஆனால், அவரோ ஆடம்பரமான வாழ்க்கையினை வாழ்பவர்.

வண்ணமயமான ஆடம்பர ஆடைகளை அணிந்து திரைப்பங்களில் நடிப்பது, திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளில் பாடுவது என பல துறைகளின் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ``ஹைவே லவ் சார்ஜர்`` என்ற அவரது முதல் இசை ஆல்பம் மில்லியன் கணக்கில் விற்பனை ஆனது.

படத்தின் காப்புரிமை Getty Images

ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் என பல தொண்டு நிறுவனங்களை சிங் நடத்தி வருகிறார். சைவ உணவை ஆதரித்து அவர் பிரச்சாரமும் செய்து வருகிறார்.

``ஓரினச்சேர்க்கை நடத்தையைக் கைவிடுவோம்`` என ஓரினச்சேர்கையாள ஆண்களை உறுதிமொழியேற்க வைத்திருக்கிறார். அதே சமயம், ``கடவுளுக்கு மிக நெருக்கமாவதற்கு`` ஆண்மைத்தன்மையை நீக்க அவரது ஆதரவாளர்களைக் கட்டாயப்படுத்துவதாக அவர் மீது ஒருமுறை குற்றம்சாட்டப்பட்டது.

தேரா சச்சா செளதா அமைப்பின் பரந்த அளவிலான தலைமையகத்திற்கு சென்றிருந்த ஒரு பத்திரிக்கையாளர், அங்கிருந்த கட்டடங்களை பார்த்து வியந்துவிட்டார். மனிதரின் காதை போன்ற ஜன்னல்கள், பளிங்கு கல் பதிக்கப்பட்ட சுவர்கள், பழ வடிவிலான தண்ணீர் தொட்டிகள் என அனைத்தும் மிக பிரம்மாண்டமாக இருந்தது என என்னிடம் கூறினார்.

``சினிமா பிரபலம், ராக் இசை பாடகர், அரசியல் செல்வாக்கு மிக்க நபர் என அவரது பக்தர்கள் மூலம் கற்பனை செய்யமுடியாத வாழ்வினை சிங் வாழ்கிறார். தனது பக்தர்களும், மிகப்பெரிய கனவு காண அவர் உதவுகிறார்`` என அந்த பத்திரிக்கையாளர் கூறுகிறார்.

இந்தியாவில் சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. உலகம் முழுக்க பிரபலமான சாமியார்கள், பணக்காரர்களுக்கான சாமியார், ஏழைகளுக்கான சாமியார் என இந்தியாவில் சாமியார்கள் நிறைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை MANOJ DHAKA
Image caption குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மில்லியன் கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர்

அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், அரசு அதிகாரிகள், சாமானிய மக்கள் என பலரும் சாமியார்களின் பக்தர்களாக உள்ளனர்.

சாமியார்கள், பள்ளி மற்றும் மருத்துவமனைகளை நடத்துவார்கள். அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகள் தருவதுடன், தனது பக்தர்கள் மூலம் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஐம்பது வயதான சிங், மிகவும் சர்ச்சைக்குரிய சாமியார்களின் ஒருவர். கொலை, பாலியல் வல்லுறவு, கடத்தல், தாக்குதல் மற்றும் மோசடி என அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

சிங்கின் பக்தர்களின் பெரும் பகுதியினர், தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் என்றாலும், நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்களும் அவரின் பக்தர்களாக இருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

``அரசியலும் மதமும், குறிப்பிட்ட மக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தோல்வியடைந்திருக்கிறது என்பது, குர்மீத் ராம் ரஹீம் சிங் போன்ற சாமியார்களின் வளர்ச்சி நமக்குக் காட்டுகிறது. முக்கியத்துவம் பெறாத மக்கள் இது போன்ற சாமியார்கள் பக்கமாக செல்கிறார்கள். சகல பக்தர்களுடன் பொதுவான இடங்களை பகிர்ந்துகொள்வது, சடங்குகளைச் செய்வது ஆகிவற்றின் மூலம் அவர்கள் சமத்துவத்தைக் காண்கிறார்கள்`` என்கிறார் சமூகவியலாளர் விஸ்வநாத்.

குறிப்பிட்டவரின் சாதியை சமூகத்தில் வெளிப்படுத்தும் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயரை எதிர்க்கும் விதமாக, சிங்கின் பக்தர்கள் அனைவரும் இன்சான் (மனிதர்கள்) என்ற பொதுவான குடும்ப பெயரை தங்களின் பெயருக்கு பின்னால் இணைத்துள்ளனர்.

இந்தியாவில் சாதி படிநிலையும், மக்களிடையே பிரிவும் எவ்வளவு ஆழமாக ஊன்றியுள்ளது என்பது சாமியார்கள் மற்றும் மதக் குழுக்களின் வளர்ச்சி தெளிவாக காட்டுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்