'நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி ஆகியவை மீட்கப்படும்' : எடப்பாடி பிரிவு அ.தி.மு.க தீர்மானம்

டிடிவி தினகரன் வெளியிடும் நியமன அறிவிப்புகள், பதவி நீக்க அறிவிப்புகள் செல்லாது என்றும், விரைவில் பொதுக் குழு மற்றும் செயற்குழுவை கூட்டவிருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க பிரிவு அறிவித்திருக்கிறது.

ஆளும் அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகிகள், செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (திங்கள்கிழமை) காலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் நடந்த இந்தக் கூட்டம் பெரும் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், சில தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

டிடிவி தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதியே அறிவித்திருந்த நிலையில், அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது எனவும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளையும் தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகளை அவர் நீக்குவதும் புதிதாக சிலரை நியமிப்பதும் ஏற்புடையதல்ல என முதல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவைப் பொதுச் செயலாளராக நியமித்ததையே தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்காத நிலையில், அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவது ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

தினகரனின் அறிவிப்புகள் யாரையும் கட்டுப்படுத்தாது என்றும், முந்தைய பதவிகளிலேயே அனைவரும் தொடர்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

லட்சக் கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களின் பங்களிப்பின் மூலம் துவங்கப்பட்ட நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மற்றும் ஜெயா டிவி ஆகியவை கட்சியின் சொத்துகள் எனவும் அவை ஜெயலலிதாவின் புகழ்பாடுவதை உறுதிசெய்யப்போவதாகவும் ஒரு தீர்மானம் கூறுகிறது.

தொண்டர்களும் நிர்வாகிகளும் பொதுக் குழுவையும் செயற்குழுவையும் கூட்ட வேண்டுமெனக் கோருவதால், விரைவில் அவற்றைக் கூட்டவிருப்பதாகவும் மற்றொரு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பங்கேற்றவர்கள் எத்தனை பேர்?

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 22 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இன்றைய கூட்டத்தில் மீதமிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சுமார் 80 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்த பிறகு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்றுவிட்டர். இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய கூட்டத்தில் 117 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறினார்.

அவர்களுடைய பட்டியலைச் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

நமதுஎம்.ஜி.ஆர்., ஜெயா டிவி குறித்த உரிமை

இதற்கிடையில், எம்எஸ்எஸ் ஆனந்தன், டி.கே.எம். சின்னைய்யா, முக்கூர் சுப்பிரமணியம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, வெல்லமண்டி நடராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் ஆகியோரின் கட்சிப் பதவிகளை பறிப்பதாக தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினகரன் கட்டுப்பாட்டில் உள்ள நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி ஆகியவற்றை மீட்கப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அறிவித்திருக்கும் நிலையில், தினகரன் தரப்பு அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நமது எம்.ஜி.ஆர். நாளிதழும், ஜெயா டிவியும் தனியார் சொத்துகள் என்றும் இவற்றை யாரும் கையகப்படுத்த முடியாது என்றும் தைரியம் இருந்தால் இந்த அலுவலகங்களுக்குள் முதலமைச்சர் நுழைந்து பார்க்க வேண்டுமென்றும் அந்த அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்