பரஸ்பரம் அன்பு கொண்ட சகோதரர்கள் - பாரத், பாகிஸ்தான்

பரஸ்பரம் அன்பு கொண்ட சகோதரர்கள்-பாரத், பாகிஸ்தான் படத்தின் காப்புரிமை Sham Juneja
Image caption பாகிஸ்தான் சிங் (இடது) மற்றும் பாரத் சிங்

பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்ததால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி, தொடரும் விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 13--ஆவது பாகம் இது.

70 ஆண்டுகளுக்கு முன்னர் நள்ளிரவில் இந்துஸ்தானுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. முதல் நாள் இந்துஸ்தான் என்ற ஒரு நாட்டில் உதித்த சூரியன் அடுத்த நாள் காலையில் உதித்ததோ இரு நாடுகளில்.

இந்த இரு நாடுகளிடையேயான இன்றைய உறவு எத்தகையது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பாரத் மீது உயிரை வைத்திருக்கும் பாகிஸ்தானையும், பாகிஸ்தானுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பாரத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

பஞ்சாப் மாநிலம் முக்த்சரில் மலோட்டில் வசிக்கும் சகோதரர்கள் பாரத் மற்றும் பாகிஸ்தான். பாரத்தின் வயது 12, பாகிஸ்தானின் வயது 11. அவர்களின் தந்தை குர்மீத் சிங்குக்கு இப்படி பெயர் வைக்கும் ஆசை எப்படி வந்தது?

பாரத் சிங் பிறந்தபோது, அவனுக்கு பெயர் சூட்டியபோது யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவிலை. ஆனால் 2007இல் குர்மீத் சிங்குக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபோது பாகிஸ்தான் என்று பெயர் வைத்ததும் அவர் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

குடும்பத்தின் புது வரவு அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தாலும், குர்மீத் வைத்த பெயரால் சங்கடம் நிலவியது.

படத்தின் காப்புரிமை Sham Juneja
Image caption மகன்களுடன் குர்மீத் சிங்

இளைய மகனின் பெயரைக் கேட்டு உற்றார் உறவினர், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் விமர்சித்தபோதிலும், தனது முடிவை குர்மீத் மாற்றிக்கொள்ளவில்லை.

பள்ளியில் சேர்க்கும்போதும் பாகிஸ்தான் சிங் என்று சொன்னபோது, பெயரை மாற்றவேண்டும் என்ற நிபந்தனையுடனே நிர்வாகத்தினர் பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். எனவே பள்ளி ஆவணங்களின்படி பாகிஸ்தான் சிங்கின் பெயர் கரண்தீப் சிங்.

கடையின் பெயரும் 'பாரத்-பாகிஸ்தான்'

சில ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலை எண் 10இல் குர்மீத் சிங் திறந்த கடைக்கு 'பாரத் பாகிஸ்தான் வுட் வொர்க்ஸ்' என்ற பெயரையே வைத்தார் குர்மீத்.

இந்தப் பெயரை வைத்து அவர் பல கேலி கிண்டலுக்கு ஆளானாலும் குர்மீத் கவலையோ அச்சமோ ஏற்படவில்லை. பெயரை மாற்றும்படி சொல்வதை அவர் கேட்பதும் இல்லை.

படத்தின் காப்புரிமை Sham Juneja
Image caption கடையின் மேல் `பாரத் பாகிஸ்தான் வுட் வொர்க்ஸ்` என்று பஞ்சாப் மொழியில் எழுதப்பட்டுள்ளது

உள்ளூர் தலைவர்கள் சிலர் கடையின் பெயரை மாற்றுமாறு கொடுத்த அழுத்ததிற்கு குர்மீத் சிங் அடிபணியவில்லை. பாகிஸ்தான் என்ற பெயரை மட்டும் நீக்கினால் போதும் என்றதையும் அவர் செவிமடுக்கவில்லை.

ஆனாலும் குர்மீத்தை பாராட்டுபவர்களுக்கும் பஞ்சமில்லை. நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிப்பவர்கள், பெயர்ப் பலகையை பார்த்துவிட்டு இறங்கிவந்து பாராட்டுவார்கள், காரணத்தையும் கேட்பார்கள் என்கிறார் குர்மீத்.

பாரத்தை காப்பாற்றும் பாகிஸ்தான்

பள்ளியில் என் பெயர் கரண்தீப் சிங் என்றாலும் பாகிஸ்தான் என்றே நண்பர்கள் அழைப்பார்கள் என்று புகார் கூறுகிறார் பாகிஸ்தான்.

எனது அசல் பெயர் அதுதானே? எனவே பாகிஸ்தான் என்று கூப்பிடுவதால் எனக்கு வருத்தமில்லை என்று பெருமிதத்துடன் சொல்கிறான்.

பாரத் சிங்கை தாயோ அல்லது வேறு யார் அடித்தாலும் தான் காப்பாற்றுவதாக பாகிஸ்தான் சொல்கிறார்.

இருவரும் அவ்வப்போது சண்டை போட்டாலும், வெகுவிரைவில் சமாதானமும் ஆகிவிடுவார்கள் என்று பிபிசி நிருபரிடம் இரு சகோதரர்களும் கூறினார்கள். ஆங்கிலம் இருவருக்கும் பிடித்தமான பாடம்.

படத்தின் காப்புரிமை Sham Juneja
Image caption பாரத் சிங்கை தாயோ அல்லது வேறு யார் அடித்தாலும் தான் காப்பாற்றுவதாக பாகிஸ்தான் சொல்கிறார்.

'70 ஆண்டுகளாக அலைச்சல்'

பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தார்கள் குர்மீத் சிங்கின் மூதாதையர்கள். அவர்களில் சிலர் ஹரியானாவில் கர்னாலில் சில காலமும் பின்பு ஹான்சிக்கும் இடம் மாறினார்கள். ஆனால் குர்மீத்தின் குடும்பம் மட்டும் ஹான்சியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1984இல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களின்போது, குடும்பமே இரவோடு இரவாக பஞ்சாப் மாநிலத்திற்கு தப்பிச் சென்றார்கள், அப்போது குர்மீத்துக்கு 11 அல்லது 12 வயதுதான்.

'1984இல் நான் சிறுவனாக இருந்தபோது, என்னை தீவிரவாதி என்று கூப்பிடுவார்கள், அதற்கான அர்த்தம்கூட அப்போது எனக்குத் தெரியாது'.

குர்மீத்தின் மூதாதையர்கள் பாகிஸ்தானின் ஷோக்புராவில் ரத்தி டிப்பி என்ற கிராமத்தில் வசித்தவர்கள். இந்துஸ்தானாக இருந்த பாகிஸ்தானை விட்டு இந்தியாவிற்கு வந்த அவர்களை அகதிகள் என்றே அழைப்பார்களாம்!

பாகிஸ்தானில் இருந்த சொத்து, நிலம், நினைவுகள் என அனைத்தையும் விட்டு, வேறுவழியில்லாமல் எங்கள் மூதாதையர்கள் இங்கு வந்தார்கள்.

உண்மையில் சொல்லப்போனால், பாகிஸ்தானில் இருந்து வந்த எங்களை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. 70 வருடங்களாகியும் நாங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களே.

பிரிவினையின்போது யாருக்கு எங்கு இருக்க விருப்பமோ அங்கு வசிக்கலாம் என்று சொன்னதை நம்பித் தானே இங்கே வந்தோம்? பாதுகாப்பை கருதி இருந்த இடத்தை விட்டு வெளியேறியதற்கு காரணம் இதுவும் நம் நாடு என்பதால் தானே? பிறகு எப்படி நாங்கள் அகதிகள் ஆனோம்? என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

கிராமத்தை பார்க்கவேண்டும் என்ற ஆசை நிராசையானது

கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தார் குர்மீத். அங்குள்ள முக்கிய குருத்வாராக்களை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார், ஆனால் உயர் மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் ஆசை நிராசையானது.

படத்தின் காப்புரிமை Sham Juneja
Image caption குர்மீத் சிங்கின் குடும்பம்

பிரிவினையின்போது நடைபெற்ற சம்பவங்களை கேட்டு வளர்ந்த குர்மீத்துக்கு அதன் வலி தெரியும். தங்களது பூர்வீக கிராமத்தை பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்துடனே குடும்பத்தின் மூத்தவர்கள் இறந்துபோனதாக வருத்தப்படுகிறார் குர்மீத்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் பற்றி பேசும் அவர், 'தலைவர்களின் கருத்துப்படி சண்டை சரியானதே. ஆனால் இழப்பும் சிக்கலும் இருபுறத்திலும் இருக்கும் சாதாரணமான பொதுமக்களுக்குத் தானே?' என்கிறார்.

இரு நாடுகளும் அன்புடன் இணக்கமாக இருக்கவேண்டும், அமைதிக்கான சமாதானச் செய்திகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்பதாலேயே, பாரத் சிங், பாகிஸ்தான் சிங் என்று மகன்களுக்கு பெயர் வைத்ததாக சொல்கிறார் குர்மீத் சிங்.

இந்த இரு சகோதரர்கள் மட்டுமா ஒரு தாய் வயிற்றில் இருந்து பிறந்த குழந்தைகள்? இந்தியா, பாகிஸ்தானும் ஒரே நாட்டில் இருந்து பிறந்த இரு நாடுகள் தானே? பாரத் சிங்கும், பாகிஸ்தான் சிங்கும் ஒற்றுமையாக இருப்பதைப் போல பாரதமும், பாகிஸ்தானும் இணக்கமாக இருக்குமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்