செப்டம்பர் 12ல் கூடுகிறது அ.தி.மு.கவின் பொதுக்குழு, செயற்குழு

  • 28 ஆகஸ்ட் 2017
அதிமுக அணிகள் இணைப்பு

தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க-வின் செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி கூடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பிரிவு அறிவித்துள்ளது.

அக்கட்சியின் உறுப்பினர்கள் பெருவாரியானவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 10.35 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழுவும் பொதுக்குழுவும் கூடும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

வழக்கமாக கழக பொதுச் செயலாளரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்ற குறிப்போடு, இம்மாதிரி அறிக்கைகள் அ.தி.மு.கவில் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை, அ.தி.மு.க. பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. யாருடைய கையெழுத்தும் அறிக்கையில் இடம்பெறவில்லை.

இதற்கு முன்பாக அக்கட்சியின் பொதுக் குழு, முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிசம்பர் 29-ஆம் தேதி கூடி, சசிகலாவை அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்தது.

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன், அதிமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் தம்பித்துரை, அப்போதைய தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 23 பொதுக்குழு உறுப்பினர்களால், சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்போது எடப்பாடி பழனிச்சாமி பிரிவு சசிகலாவுக்கும் தினகரனுக்கும் எதிராகத் திரும்பியிருக்கும் நிலையில், பொதுக் குழுவைக் கூட்டி தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும்.

அ.தி.மு.கவின் பொதுக் குழுவில் 2,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், சசிகலாவை கட்சியைவிட்டு நீக்குவது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவது எளிதாக இருக்காது என கருதப்படுகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்