'அரசு கேபிள் டிவியில் இருட்டடிப்பு' - ஜெயா தொலைக்காட்சி குற்றச்சாட்டு

அரசு கேபிள் டிவியில் இருட்டடிப்புச் செய்யப்படுவதாக ஜெயா தொலைக்காட்சி குற்றச்சாட்டு

அரசு கேபிள் ஒளிபரப்பில் ஜெயா தொலைக்காட்சி குழும சானல்கள் இருட்டிப்புச் செய்யப்படுவதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிறுவனங்களை கைப்பற்றப்போவதாக எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. கூறியிருப்பது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று காலையில் நடைபெற்றபோது, நமது எம்.ஜி.ஆர்., ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை கைப்பற்றுவது என்ற பொருள்படும் வகையில் தீர்மானம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

நமது எம்.ஜி.ஆர். நாளிதழும் ஜெயா டிவி குழும தொலைக்காட்சி சேனல்களும் டிடிவி தினகரன் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழாகவே செயல்பட்டுவந்தது.

அதேபோல, ஜெயா டிவியும் ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் ஆதரவான தொலைக்காட்சியாக செயல்பட்டுவந்தது.

ஆனால், தினகரன் தனி அணியாக செயல்பட ஆரம்பித்ததும் அ.தி.மு.க. அரசு தொடர்பான செய்திகள் நமது எம்.ஜி.ஆரில் புறக்கணிக்கப்பட்டன.

எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் தினகரன் அணிக்கும் இடையில் மோதல் முற்றிய பிறகு, சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே இவை வெளியிட்டுவருகின்றன.

இந்த நிலையில்தான் இன்று காலையில் கூடிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நமது எம்.ஜி.ஆரையும் ஜெயா தொலைக்காட்சியையும் கைப்பற்றவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

படத்தின் காப்புரிமை AIADMK

இந்த நிலையில், ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் அரசு கேபிள் நெட்வொர்க்கில் ஜெயா குழும சேனல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக அந்தத் தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக நேரலை விவாத நிகழ்ச்சிகளையும் அந்தத் தொலைக்காட்சி இன்று நடத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அந்தத் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில், நமது எம்.ஜி.ஆர். நாளிதழும் ஜெயா டிவியும் தனியார் நிறுவனங்கள் என்றும் யாரும் சர்வசாதாரணமாக புகுந்து கைப்பற்றும் நிலையில் இரு நிறுவனங்களும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரெய்டு, வழக்கு என தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தாங்கள் அதனை சட்ட ரீதியாகச் சந்திக்கப் போவதாகவும் விவேக் ஜெயராமன் தெரிவித்திருக்கிறார்.

1998ஆம் ஆண்டில் ஜெயா தொலைக்காட்சி துவங்கப்பட்டது. இதற்குப் பிறகு 2008ல் ஜெயா பிளஸ் என்ற செய்தி சேனலும் ஜெயா மேக்ஸ் என்ற பாடல்களுக்கான சேனலும் ஜெயா மூவிஸ் என்ற திரைப்படச் சேனலும் துவக்கப்பட்டன.

ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் மாவிஸ் சாட்காம் என்ற நிறுவனம் வைத்துள்ளது. மாவிஸ் சாட்காம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா வசம் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்